இனியவன் இசாறுதீனின் 'முள் மலர்கள்' (கவிதை நூல்) ஓர் ஆய்வு
நூல் : முள் மலர்கள் (கவிதை நூல்)
ஆசிரியர் : இனியவன் இஸாறுதீன் - அட்டாளைச்சேனை
நூலாய்வு : சமாஸ்ரீ தேசமான்ய அட்டாளைச்சேனை எஸ்.எல். மன்சூர் (B. Ed)
இனியவன் இஸாறுதீன் கவிதைக்குப் புதியவன் அல்ல. தன்னுடைய ஆத்மார்த்தமான எண்ணங்களை கவிதையாக வடித்துக் கொண்டிருப்பவர். சமுதாயநீதிக்காய் தன்னைப் புடம்போட்டுக் கொண்ட ஒரு சமூகக்கவிஞன். தூன் வாழ்ந்த சூழல், வாழும்சூழல், பழகிய இடங்கள், மானிடம், அன்பு, எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு நல்லமானுடத்தை தேடிக் கொண்ட ஒரு இளையகவிஞன். தன்னுடைய கவிப்புலத்துவத்தினை வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்து கொண்ட இனியவன் இஸாறுதீன் படைத்துள்ள ஒரு புதிய படைப்பு முள்மலர்கள். மலர் எங்கே வேண்டுமானாலும் மலரும். இந்த இனியவனும் எங்கோ இருந்தாலும் இயற்கையை ஆளுகின்ற ஒரு பொற்கலை கவிஞன். இலக்கிய உலகுக்குள் இரண்டாவது வெளியீடாக முள் மலர்கள் கவிதை நூலை வெளிக்கொணர்ந்துள்ளமை பாராட்டுக்குரியது.
“உயிர்த்துடிப்பாய் உணர்ச்சிப் பூச்சரமாய் உள்ளத்தின் வெள்ளப் பெருக்காய், இவரது கவிதைகள் காட்சிகளாகின்றன. சொற்களின் சூரத்தனமும் இல்லை. கவித்துவத்தின் கஞ்சத்தனமும் இல்லை. யாப்பின் அதிகாரமும் இல்லை. புதுமையின் அகங்காரமும் இல்லை. அனுபவகக் களஞ்சியமாக அறிவின் நதியோட்டமாக விளங்கும் ஒரு நல்ல கவிஞனோடு கைகுலுக்குகிறேன்” என்று வாழ்த்துரை வழியாக ஒரு நல்ல கவிஞனோடு கைகுழுக்கிறேன். என்கிறார் கவிஞர் மேத்தா அவர்கள். கவிஞர் மேத்தாவின்; இந்த வரிகள் ஊடாக இந்நூல் உள்ளத்தையே தொடுகின்றன என்பதுதான் யதார்த்தமாகும்.
கவிஞர் வேதாந்தி அவர்களின் விதந்துரையில் ‘நம்பச் சொல்லுகிறேன்’ எனும் தலைப்பில் இனியன் இஸார்தீனின் முள் மலருக்கு இவ்வாறு விளக்கம் தருகின்றார். “மானிடத்தை மீ;ட்டெடுக்கும் மனுதர்ம நியாயங்களை பூசி மெழுகாது புடம் போட்டு வெளியாக்கி புத்துணர்வை உயிர்ப்பித்து, நாட்டாரைக் கண்டித்து நடைமுறைக்கு வற்புறுத்தும் பொறுப்புள்ள குடிமகன்” என்று வேதாந்தமும் பேசுகின்றது இக்கவிதை நூல். அணிந்துரையாய் நூலுக்கு அழகுசேர்த்துள்ளார் கலாநிதி றமீஸ் அப்துல்லா. சமூக உணர்வினால் பாதிக்கப்பட்ட கவிஞன் எனும் தலைப்பில் விரிவான விளக்கம் தந்துள்ளார். “மனித உணர்வுகளை பலவகைகளில் கவிதையாக்கியிருக்கின்ற மனிதாபிமானம் மிக்க ஒரு கவிஞரிவர். தன்னுடைய கவிதைக் கலையில் எஞ்சியிருக்கும் கருத்துக்கள் அதிகம் பேசுகின்றன. சுமூக உணர்வுகளினால் பாதிக்கப்பட்டிருக்கின்ற ஒரு நல்ல கவிஞர் இனியவன் இஸாறுதீன்” என்கிறார் கலாநிதி றமீஸ் அப்துல்லா.
‘முளைத்த காலத்தின் முகவரி’ எனும் தலைப்பில் தன்னுடைய இலக்கிய மேதாவியையும், தான் கொண்டுள்ள இலக்கிய பக்தியையும், படைப்பிலக்கியத்தின் மூலாதாரத்தின் வித்தைகளையும் வித்துக்களாய் தூவி முள் மலர்களுக்குள்ளே மலராபனம் செய்கின்ற கவிஞர் இனியன் இஸாறுதீனின் என்னுரை அமைந்துள்ளது. வாழ்வியல் அரசியல் இலக்கியம் அறிவியல் அறவியல், உலகியல் இனம் மதம் சமயம் என்ற கனபரிமாணங்களில் பூத்தவைகள் இந்த மலர்கள் என்றும், பகுத்தறிவும் - முற்போக்கும் - சமத்துவமும் - சமூநீதியும் - மண்நேசமும் - மனிதப் பிரியமுமே எனது மலர்களில் மருந்தாய் முளைந்திருக்கும் முட்கள்” என்கிறார் நமது இனியவன்.
முள் மலருக்குள்ளே மலர்ந்துள்ள முப்பத்துமூன்று கவிதைகளில் தன்னுடைய கவித்துளியை மழையாகக் கொட்டுகின்றார். பிரார்த்தனை எனும் தலைப்பில் “இது கவிதையாக இல்லாமல் போகட்டும் விதையாக இருந்தால் போதாதா? முதல் உண் உயிர்க்காற்றை இந்த கவிதைக்குள் ஊற்று இறைவா” என்று பிராத்திக்கின்ற முள் மலருக்குள் இன்னொரு உரிமைக்காய் குரல் கொடுக்கின்றார். “நாங்கள் தொழும் மஸ்ஜித், நாங்கள் ஓதும் வேதம், நாங்கள் அணியும் ஆடை, நாங்கள் உண்ணும் ஆகுமான உணவு, எல்லாவற்றையும் எங்கெழுக்கெதிராய் இரகசியமாகவும் பரகசியமாகவும் சிதைக்கலாம். ஆனால் தடுக்கமுடியுமா உங்களால்? என்கிற கேள்விகளை உரிமைக்குள்ள தொனியை உரத்துடன் இந்த நாட்டின் மலர்களுக்கு கிடைத்துள்ள முட்களை சொல்லில் கவிதையாய் வடிக்கின்ற கவிஞரின் கவித்துவம் எம்மை ஆட்கொண்டுவிடுகிறது.
மீட்டெடுப்பு எனும் தலைப்பில் ஒரு பட்டியலையே தேடுகின்றார் கவிஞர். அதவாது, ஒருபாய், ஒரு திருகை, ஒரு கலப்பை, ஒருசுளகு, ஒரு மண்குடம், ஒருகைப்பெட்டி, ஒருமண்சட்டி, ஒருஉரல், ஒரு உலக்கை, ஒரு அகப்பை இவ்வாறு நவீனத்துவதத்தின் வித்தைகளால் காணாமல் போன இறந்தகால வாழ்வியலை தேடுகின்றார் முள் மலர்கள் வாயிலாக. சுpன்ன அரும்புகளும் சில கேள்விகளும் எனும் தலைப்பில் தொலைந்துபோன உறவுகள், சிதைந்துபோன இன உறவு, முள்ளிவாய்க்காலில் முடிந்துபோன நம்பிக்கைகளை தத்ரூபமாக சொல்லிக் கொள்கிறார் கவிஞர். ஒரு கட்டத்தில் இவ்வாறு கூறுகின்றார். “இன உரிமை இழந்தோம், மொழியுரிமை இழந்தோம், மானுடம் இழந்தோம், மண்ணகம் இழந்தோம், முகங்களை இழந்தோம், முகவரி இழந்தோம், முப்பது ஆண்டுகள் மூத்தகுடி இழந்தோம்” என இழந்துபோன வாழ்வியலை வெளிச்சம்போட்டுக் காட்டுகின்ற இக்கவிதை வரிகள் ஒவ்வொன்றும் வைரமான வரிகளே.
விடியலை எழுப்பு எனும் தலைப்பில் “உள்ளத்தின் இருட்டுக்குள் உறங்குகின்ற மனிதா இன்று முதல் நீ விடியலை எழுப்பு” என்று மனிதத்தையே அனுப்புகின்றார். இவ்வாறு வரிக்குவரி, கவித்துமான தன்னுடைய எண்ணங்களை சிதறவிட்டு நம்மை சிந்திக்கச் செய்கின்ற முள் மலர்களில் எத்தனைவிதமான மலர்கள், எத்தனைவிதமான வாசங்கள், எத்தனைவிதமான நிறங்கள் என்கிற மாயைத் தோற்றத்திலிருந்து உண்மையான மனிதத்துவம் நிறைந்த இவ்வுலக வாழ்க்கையின் அத்தனை பாகங்களுக்குள்ளும் தன்னுடைய கவித்துவ புலமையை மேயவிட்டு முள்மலர்கள் நூலை வாசிக்கும் ஒவ்வொரு வினாடியும் முட்களே மலர்வதைக் காணலாம்.
ஆசுகவி அன்புடீன் இந்நூலாசிரியரை இவ்வாறு விழிக்கின்றமை ஆசுவான கவிஞர் என்பதை நிருபிக்கின்றார். அதாவது, “இவரது கழுகுப்பார்வைகள் முள்ளாகி, முள் மலராகி மலர் மணமாகி, மணம் காற்றாகி, காற்றுவிதையாகி இருக்கிறது” என்கிறார். அட்டைப்பட விளக்கம் தலைப்புக்கேற்றாப்போல் முட்செடியில் மலர்ந்துள்ள பூவின் அட்டையுடன் இணைந்து அதன் மலர்ச்சியை தேடுகின்ற சிறுவனின் இருப்பு கற்பனை சிதறல்களை மிஞ்சுவிடுகின்றது. முள் மலர்களின் உரிமை முப்லிஹா இஸாறுதீன். நேசம் நிறைந்த மனைவிக்கும், பாசம் நிறைந்த பிள்ளைகளுக்கும் இந்நூலை சமர்பிக்கின்றார் நூலாசிரியர் இனியவன் இஸாறுதீன். ஒரேவரியில் கூறுவதாயின் “முள் மலர்கள் மானுடம்தேடுகின்ற ஒரு மானுடக்கவிஞனின் மானசீகமான ஒரு கவிதைநூல் என்பது மட்டும் நிஜம்.
0 comments :
Post a Comment