Tuesday, September 10, 2013

தற்கொலை செய்ய முன்பாகபே குறித்த நபரிடமிருந்து தற்கொலைக்கான சமிக்ஞைகளை கண்டறியலாம்?

மன உளைச்சலால் பாதிக்கப்படுவோருக்கு உளவள சிகிச்சை வழங்கி காப்பாற்றுங்கள்

இலங்கையில் தற்கொலை செய்து கொள்வோரின் எண் ணிக்கை கடந்த 17 வருடங்களுக்குள் 11.5 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. மன உளைச்சலுக்கு உள்ளான ஒருவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாகவே அவரிடமிருந்து வெளிப்படக் கூடிய சமிக்ஞைகளை கண்டறிந்து உரிய சிகிச்சை முறையினை பெற்றுக்கொடுக்க வேண்டியது எமது சமூக பொறுப்பாகுமென சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் பி.ஜி. மஹிபால மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க இயலாத நிலையில் தமது உயிரை மாய்த்துக் கொள்வது தேசிய மட்டுமன்றி உலகளாவிய பிரச்சினையாக வுள்ளதென சுட்டிக்காட்டிய டொக்டர் மஹிபால 1995 ஆம் ஆண்டு 8,500 ஆக இருந்த தற்கொலை செய்தோரின் எண்ணிக்கை 2012 ஆம் ஆண்டில் 3,500 ஆக குறைவடைந் திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

மன உளைச்சலுக்கான அறிகுறிகள் தென்படும் ஒருவரை உடனடியாக மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டியது அவரது நெருங்கிய உறவினர் அல்லது நண்பரின் பொறுப்பாகும். நீரிழிவு, கொலஸ்ட்ரோல் ஆகியவற்றை பக்கு வமாக ஏற்றுக்கொண்டிருக்கும் இந்த சமூகம் மனநல மருத்துவரை நாடுவதற்கு இனிமேலும் தயக்கமோ வெட்கமோ படத் தேவையில்லை. முன்கூட்டியே உரிய சிகிச்சை யினைப் பெற்றுக்கொள்வதன் மூலம் வீணான உயிரிழப்புக்களை தவிர்க்க முடியுமெனவும் அவர் கூறினார்.

உலக தற்கொலை தவிர்ப்பு தினம் இன்றாகும் (10). உலக சுகாதார அமைப்பும்(WHO) மனநல சுகாதார விவகாரங்களை அடையாளம் காணல் மற்றும் தற்கொலை தவிர்ப்பு அமைப்பும் (IASP) இணைந்து 2003 ஆம் ஆண்டு தற்கொலை தவிர்ப்பு தினத்தை பிரகடனம் செய்துள்ளது. இதனடிப்படையில் இம்முறை 11 ஆவது வருடமாக அனுஷ்டிக்கப்படவுள்ள இன்றைய தினத்தின் தொனிப்பொருள் 'தற்கொ லையை தவிர்ப்பதற்கு சமூகத்தில் ஏற்படும் களங்கமே பாரிய தடையாக அமைகிறது' என்பதாகும்.

இதனை விளக்குமுகமாக விசேட செய்தியாளர் மாநாடொன்று நேற்று சுகாதார அமைச்சில் நடைபெற்றது. இதன் போதே பணிப்பாளர் நாயகம் மேற்கண்டவாறு கூறினார். மனநல மருத்துவ நிபுணர் டொக்டர் நீல் பெர்ணான்டோ கருத்துத் தெரிவிக்கை யில்; யாரேனும் தனது வாழ்வை முடித் துக் கொள்ளப் போவதாகக் கூறுவதனை விளையாட்டாக எண்ணி அலட்சியப்படுத்தக் கூடாது எனத் தெரிவித்தார்.

காரணம் தற்கொலை செய்து கொள்பவர்களில் 65 சதவீதமானவர்கள் தமது நெருங்கிய உறவிடம் தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவோ அல்லது அவ்வாறானதொரு எண்ணம் தனக்குள் வந்து போவதாகவோ கூறியிருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அத்துடன் ஒருவர் ஆகக் கூடியது 100 தடவைகளேனும் தற்கொலை செய்து கொள்வது குறித்து சிந்தித்து 10 தடவை களாயினும் முயற்சித்து அதன் பின்னரே உயிரிழக்கிறார். மன உளைச்சலுக்கு உள்ளான ஒருவருக்கு தொடர்ச்சியான முறையிலேயே இவை அனைத்தும் இடம்பெறு வதனால் இடைப்பட்ட காலப்பகுதியிலேயே உரிய மனநல மருத்துவரை நாடி மன நோயினை குணப்படுத்த முடியுமெனவும் கூறினார்.

ஆய்வுகளடிப்படையில் 4 பெண்களில் ஒருவருக்கும் 10 ஆண்களில் ஒருவருக்கும் எப்போது வேண்டுமானாலும மன உளைச்சல் ஏற்படலாம். பொதுவாக பெண்களை விட ஆண்களே அதிகமாக மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

மனநலக் கோளாறினால் வறுமையும் வறுமையினால் மனநல கோளாறும் தவிர்க்க முடியாத வகையில் ஒரு வட்டமாக ஏற்படக்கூடும் எனவும் அவர் விளக்க மளித்தார். வாழ்க்கையில் அதிக மன உளைச்சலுக்குள்ளாகி 07 தடவைகள் தற்கொலைக்கு முயற்சித்து உயிர் பிழைத்திருக்கும் பிரபல சிங்கள திரைப்பட நடிகை அனோஜா வீரசிங்க தனது வாழ்வில் தான் கண்ட அனுபவங்களையும் அதிலிருந்து மீண்டும் வந்த முறைகளையும் எடுத்துக்கூறி பாதிக்கப்பட்டவர்களை விழிப்புணர்வூட்டும் வகையில் மனநல ஆலோசகராக செயற் பட்டு வருகின்றார். இவர் செய்தியாளர் மாநாட்டில் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

பெற்றோரிடையே ஏற்படும் முரண் பாடுகள், சண்டை, வேலைப்பளு தமது பிள்ளையை மற்றைய பிள்ளைகளுடன் ஒப்பிடுதல், பிள்ளைகளுக்கென நேரம் ஒதுக்காமை, பிள்ளைகளை முன்னேற்றும் நோக்கில் கல்வியில் வற்புறுத்தல் ஆகியனக் காரணமாக இன்று பல சிறுவர்களும் இளைஞர்கள் மனநோயாளி களாக உருவாகி வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

பாதுகாப்பின்மை, புரிந்துகொள்ளாமை, தனிமைப்படுத்தல் ஆகியனவே ஒருவர் மனநோயாளி ஆவதற்குரிய பிரதான காரணமாகையினால் கூடுமானவரை பெற்றோர் தமது பிள்ளைகள் எந்த வயதினைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் கட்டித்தழுவி அன்பினை பரிமாறிக் கொள்வது இன்றைய நவீன யுகத்தில் இன்றியமையாதது எனவும் அவர் வலியுறுத்தினார்.

மேலும் மனநலக் குறைவிற்கான அறிகுறிகள் தென்படும் ஒருவரோ அல்லது அவரது குடும்பத்தினரோ இது குறித்து வெட்கம் அடையாது தொடர்ந்து சிகிச்சை பெற வேண்டியது கட்டாயமெனவும் அவர் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com