காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்ட நபர் யாழில் கைது!! கடத்தல் சம்பவத்தின் மற்றுமொரு உண்மை அம்பலம்!
மூன்று வருடங்களுக்கு முன்னர் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டு தேடப்பட்டு வந்த நபர் யாழ்ப்பாணம் மல்லாவி பிரதேசத்தில் வைத்து மிரிஹானை விசேட பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப் பட்டுள்ளார்.
குறித்த நபர் பொலிஸாரினால் அடித்து கடத்திச் செல்லப் பட்டதாக அவரது குடும்பத்தார் மனித உரிமைகள் ஆணைக் குழுவில் முன்னர் முறைப்பாடு செய்திருந்தனர். இந் நிலையிலேயே மல்லாவி பகுதியில் வைத்து இவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டி ருப்பதாகவும் பொலிஸ் பேச்சாளர் புத்திக்க சிறிவர்தன தெரிவித்தார்.
லக்ஷ்மன் சமிந்த குமார (42) என்னும் ஒரு பிள்ளையின் தந்தையான இவர் யாழ். மல்லாவி யோகபுரம் பிரதேசத்தில் தலைமறைவாகியிருந்ததுடன் அங்கு மேசன் தொழில்புரிந்து வந்துள்ளார்.
குறித்த நபர் தலைமறைவாகியிருப்பது தெரிந்திருந்தும் முறைப்பாடு செய்திருந்த அவரது சகோதரியை பொலிஸார் கைது செய்யவுள்ள அதேசமயம் லக்ஷ்மன் பாதாள உலகத் தலைவர் 'கிம்புலே கெலே குணா'வின் கையாள் என்ற உண்மையும் அம்பலமாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரிய வரு வதாவது :- 2010 ஆம் ஆண்டில் பன்னிபிட்டிய மேம்பாலமருகே மோட்டார் வாகனமொன்றிற்குள் சுரேன் ஜயசிங்ஹ (45) என்னும் குடும்பஸ்தர் சுட்டுக் கொலை செய்யப்பட்டிருந்தார்.
இக் கொலை தொடர்பில் விசாரணை நடத்திவந்த மிரிஹானை விசேட பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சம்பவத்துடன் தொடர்புபட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மூவரைக் கைதுசெயய்தனர். அவர்கள் வழங்கிய வாக்கு மூலங்களுக்கமைய லக்ஷ்மன் சமிந்த குமார என்பவரை தேடி மிரிஹானை பொலிஸார் அவரது வீட்டிற்கு சென்றிருந்தனர். அங்கு வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்த சமயம் லக்ஷ்மன் பொலிஸாரிடமிருந்து தப்பியோடி தலைமறைவானார்.
இந்நிலையில் தனது சகோதரரான லக்ஷ்மன் என்பவரை விசாரிக்க வந்த பொலிஸார் அவரை அடித்து தாக்கியதாகவும், அவர் இரத்த வாந்தி எடுத்ததை யடுத்து பொலிஸ் அதிகாரிகள் சகோதரனை தமது ஜீப் வண்டிக்குள் தள்ளி கடத்திச் சென்றிருப்பதாகவும் அவரது சகோதரி மிரிஹானை பொலிஸ் நிலையத்திலும் மனித உரிமைகள் ஆணைக் குழுவிலும் முறைப்பாடு செய்திருந்தார்.
மேலும் இந்த முறைப்பாட்டில் மிரிஹானை விசேட பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிளான விபுல விமலரட்ண (51857) என்பவரே தனது சகோதரனை கடத்தியதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
மனித உரிமைகள் ஆணைக் குழு சம்பவம் குறித்து உரிய நடவடிக்கையினை முன்னெடுக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு கடிதமொன்றினை அனுப்பி வைத்திருந்தது. இதற்கமைய பொலிஸ் மா அதிபர் காணாமற்போன நபரை கண்டுபிடிக்கும் முயற்சியினை இரகசியப் பொலிஸாரிடம் ஒப்படைத்தார்.
இரகசியப் பொலிஸார் பல்வேறு கோணங்களிலும் விசாரணைகளை முடுக்கி விட்டிருந்த அதேவேளை முறைப்பாடினால் பாதிப்படைந்த பொலிஸ் கான்ஸ்ட பிளும் லக்ஷ்மனை தேடும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார்.
இவ்வாறானதொரு சந்தர்ப்பத்திலேயே பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த லக்ஷ்மன் யாழ். மல்லாவி பகுதியில் மேசன் வேலை செய்து வருவது குறித்து தகவல் கிடைத்ததையடுத்து மிரிஹானை பொலிஸ் அதிகாரிகள் குழு குறித்த இடத்துக்கு விரைந்து சந்தேக நபரை கையும் மெய்யுமாக கைதுசெய்துள்ளனர்.
விசாரணைகள் அடிப்படையில் லக்ஷ்மன் ஆரம்பத்தில் பதுளையிலுள்ள அவரது அத்தையின் வீட்டில் சிறிது காலம் தங்கியிருந்துள்ளார். பின்னர் அங்கிருந்து 2 ஆயிரம் ரூபா பணத்தையும் ஒரு சோடி காதணியையும் திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பி வந்துள்ளார். நகையினை அடகு வைத்து பெற்றுக்கொண்ட பணத்துடன் மாத்தளையிலுள்ள தனது மனைவியின் வீட்டில் ஒன்றரை மாத காலம் தங்கியிருந்துள்ளார். பின்னர் மனைவியுடன் ஏற்பட்ட தகராறின் காரணமாக நண்பரொருவரின் உதவியுடன் யாழ்ப்பாணம் மல்லாகத்தை வந்தடைந்தததாக தெரியவந்துள்ளது.
லக்ஷ்மன் மேற்படி இடங்களில் தலைமறைவாகியிருப்பது அவரது சகோதரிக்கு தெரிந்திருந்ததுடன் அவர் பல தடவை கையடக்க தொலைபேசியூடாக உரையா டியும் அதற்கான முற்கட்டணங்களையும் செலுத்தியுள்ளார்.
உண்மை தெரிந்திருந்தும் போலியான முறைப்பாட்டினை வழங்கியமைக்காக சகோதரியை கைதுசெய்ய பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் இப்பெண் தனது சகோதரனைக் காணவில்லையென வழக்கு தொடர்ந்து பெருமளவு பணத்தை நட்டஈடாக பெற்றுக்கொள்ள திட்டம் தீட்டியிருக்கலாம் என்ற சந்தேகமும் பொலிஸாருக்கு எழுந்துள்ளது. இதேவேளை கைது செய்யப்பட்டுள்ள லக்ஷ்மன் தற்போது இந்தியாவில் தலைமறைவாகியிருக்கும் பாதாள உலகத் தலைவனான 'கிம்புலா எலே குணா'வினுடைய கையாள் என்ற உண்மையும் பொலிஸாருக்கு தெரிய வந்துள்ளது.
சுரேன் ஜயசிங்ஹ என்பவரை கொல்வதற்காக லக்ஷ்மன் கிம்புலா எலே குணாவிடமிருந்து 05 இலட்சம் ரூபாவினை கூலியாக பெற்றுக்கொண்டதும் விசாரணைகள் மூலம் அம்பலமாகியுள்ளது. எலே குணாவின் சகோதரனை, சுரேன் ஜயசிங்ஹ கொன்றிருப்பதாக எழுந்த சந்தேகத்தின் பின்னணியிலேயே இவையனைத்தும் இடம்பெற்றிருப்பதாக கூறும் பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
0 comments :
Post a Comment