Tuesday, September 3, 2013

ஜனநாயக ஐக்கிய முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம். த.தே.கூ வுக்கும் உரிமை கோரல்!

போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் அமைப்பு ஜனநாயக ஐக்கிய முன்னணி என்ற பதிவு செய்யப்பட்ட கட்சியின் பெயரில் போட்டியிடுகின்றது. இக்கட்சியானது தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற பதியப்படதாத கட்சியும் தங்களுக்கே உரியது என்றும் உரிமை கோருகின்றது. அவ்வாறு உரிமை கோருவதற்கான காரணம் தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஆரம்பித்தவர்கள் பலரே இந்த கட்சியை ஆரம்பித்துள்ளதாகவும் கூறுகின்றனர்.

வட மாகாண சபை தேர்தலில் போட்டியிடும் இவர்கள் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டுள்ளனர்.

ஜனநாயக ஐக்கிய முன்னணி என்ற பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கத்தினதும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் (TNA)அனைத்து தமிழ் மக்களினதும் கருத்துக்களை உள்ளடங்கிய

தேர்தல் விஞ்ஞாபனம்.



வடமாகாணசபைத் தேர்தல் - 2013



எமது கீதம்
உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.
இச்சகத்தில் உள்ளோரெல்லாம் எதிர்த்து நின்ற போதினும் - அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே,
துச்சமாக எண்ணி நம்மைத் தூறுசெய்த போதினும் - அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே,
பிச்சைவாங்கியுண்ணும் வாழ்க்கை பெற்றுவிட்ட போதிலும் - அச்சமில்லை யச்சமில்லை அச்சமென்ப தில்லையே.
இச்சைகொண்ட பொருளெலாம் இழந்துவிட்ட போதிலும் - அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே,
கச்சணிந்த கொங்க மாதர் கண்கள்வீசு போதினும் - அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.
நச்சவாயி லேகொணர்ந்து நண்ப ரூட்டு போதினும் - அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே,
பச்சையூ னியைந்த வேற் படைகள் வந்த போதிலும் - அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே,
உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.


எமது அமைப்பு

தமிழ்த் தேசிய இனத்தின் அதிமுக்கியத்துவமான காலகலட்டத்தில் நாம் இருக்கிறோம். தமிழ் மொழிக்கு ஆட்சிமொழி, அந்தஸ்து தேவை என்று கோரிக்கைகள் மேலெழும்பிய காலகட்டத்தில் குறித்த அந்த பிரச்சனையை சரியான திசையில் கொண்டுசெல்லத் தவறிய எமது அரசியல் தலைவர்களால் தமிழர்கள் அகதிகளாக்கப்பட்டனர்.

இந்த சின்னஞ்சிறு தீவில் கூட்டுக்கிளிகள் போன்ற அழகிய வாழ்வு தொலைக்கப்பட்டு, கூடிழந்த குருவியாக எமது தமிழினம் இன்று உலகெல்லாம் சிதறி வாழ்கின்றார்கள். தமிழனுக்கு ஏன் இந்த விதி. புpறக்க ஒரு நாடு, பிழைக்க ஒரு நாடு என்று விதியின் கொடிய கரங்களில் அகப்பட்டு, இழுபட்டு சென்றுகொண்டிருக்கிறார்கள்.

எமது தமிழ் இளைஞர்கள், கொடிய யுத்தத்தில் விதவைகளாக்கப்பட்டோர், அனாதைகளாக்கப்பட்டோர், தமிழ் பெண்களின் வாழ்வு, அவர்களின் இளமை, எதிர்காலம் இவற்றுக்கெல்லாம் விடைதான் என்ன என்ற கேள்வி இன்று எம்முன்னே எழுகின்றது. போரால் பாதிக்கப்பட்ட இலட்சக்கணக்கான மக்களுக்கு மறுவாழ்வு யார் கொடுப்பார்கள்.

இலங்கை தமிழ் மக்களின் எதிர்கால் முடிவு என்ன? இந்த கேள்விகளுக்கு விடையாகத்தான் அறுபது வருடகால தோற்றுப்போன அரசியல் சித்தாந்தத்திலிருந்து எமது மக்களை மீட்டெடுக்கத்தான், மறுவாழ்வு கொடுக்கத்தான், போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கம்(WAP) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.

“இரத்தம் சிந்தும் அரசியல் என்றால் அது யுத்தம், இரத்தம் சிந்தாத யுத்தம் என்றால் அது அரசியல்” என்ற உள்ளார்ந்த கோட்பாட்டின் அடிப்படையில் எமது அரசியல் இயக்கமானது எழுச்சிபெறும், மகிழ்ச்சி என்ற அளவுகோலை வைத்து எமது மக்களின் வாழ்வை நாம் அளந்து பார்க்க வேண்டும். “எல்லோரும் இன்புற்றிருப்பது அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே” என்ற முதுமொழிக்கு எமது அமைப்பு உயிர் கொடுக்கும்.

எமது கொள்கை

  • அந்நிய ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பால் இழந்த தமிழ்த்தேசிய இனத்தின் இறைமையை மீட்டு, ஜனநாயக உரிமையின் அடிப்படையில் ஐக்கிய இலங்கைக்குள் ஐனநாயக விடுதலை காணல்.
  • எந்தவொரு பிரதேசமோ, மதமோ ஏனைய பகுதிகள், அல்லது மதங்கள் மீது ஆதிக்கம் செலுத்தாத வகையில் மதசாரற்ற ஜனநாயக, சோசலிச, மாகாண அடிப்படையில் ஆட்சி அமையும்.
  • இலங்கையை தாயகமாக கொண்ட தமிழ் பேசும் மக்கள் ஒவ்வொருவருக்கும் இலங்கையிலோ, இலங்கைக்கு வெளியிலோ பூரண உரிமையை நிலைநாட்டல்.
  • உயர்வு, தாழ்வு வேற்றுமை என்று கற்பிக்கும் சாதி கட்டமைப்பினை தகர்த்து, சாதி வேற்றுமை பாராட்டாத சமத்துவ சமுதாயத்தினை உருவாக்குதல்.
  • இலங்கை முழுவதிலும் வாழும் தமிழ் பேசும் மக்களின் அரசியல், பொருளாதார, சமூக, சமய, மொழி, கலாச்சார உரிமைகளைப் பாதுகாத்தல்.
  • அடிப்படை உரிமைகளைப் பாதுகாத்து தொழிலின் கௌரவத்தினை ஏற்று மனிதனை மனிதன் சுரண்டாத ஜனநாயக சோசலிச திட்டமிடலின் அடிப்படையில் ஒரு சமதர்ம, சமுதாயத்தினை உருவாக்குதல்.
  • போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கத்தின் நோக்கங்களையும், அடிப்படை கொள்கைகளையும் ஏற்றுக்கொள்ளும் எவரையும் அங்கத்தவர்களாக ஏற்றல்.

எமது ஆட்சியில்

  1. 1983ற்கு பின்னர் தமிழ் மக்கள் போர் மூலம் இழந்த இழப்புக்கள் அனைத்தையும் 01 வருட காலப்பகுதிக்குள் முழுமையையாக பெற்றுக்கொடுப்பதுடன், சகலரையும் தமது சொந்த இடத்தில் மீள்குடியேற்றுவது.
  2. எமது விவசாயம், கடற்றொழில், கட்டுமானத்தொழில் பனைவளம் உட்பட ஏனைய தொழில் துறைகளையும் சர்வதேச தரத்திற்கு உயர்த்துவோம்.
  3. யுத்தத்தால் கணவன்மாரை இழந்த 90,000ற்கு மேற்பட்ட விதவைகளுக்கு மறுவாழ்வு, வாழ்வாதார உதவிகளுக்காக ரூபா 5-10 இலட்சம்வரை உதவித்தொகை வழங்குவோம்.
  4. தரம் 10 மாணவர்களுக்கு இலவச துவிச்சக்கர வண்டிகள், உயர்தர வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் மடிக்கணணி, பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகும் மாணவர்களுக்கு இலவச மோட்டார் சைக்கிள்கள் என்பன வழங்குதல். யுத்தத்தில் அனாதைகளாக்கப்பட்ட சகல சிறுவர்களுக்கும் உயர்கல்வி வரையான காலத்திற்கு தங்குமிடம், பராமரிப்பு வசதிகள் உடனடியாக வழங்குவோம்.
  5. 23,000,000,000,000.00 (இருபத்து மூன்று இலட்சம் கோடி ரூபா) வெளிநாட்டு முதலீட்டினை அடுத்துவரும் ஐந்து ஆண்டுகளுக்குள் வடக்கு மாகாணத்தில் உள்ளீர்த்து, பெருமெடுப்பில் அபிவிருத்திகளை மேம்படுத்துவோம்.
  6. வருடமொன்றிற்கு 03 மில்லியன் சுற்றுலாப்பயணிகளை வடமாகாணத்தினுள் உள்ளீர்த்து, வடமாகாணம் முழுவதும் சுற்றுலாத்துறையில் கூடுதல் வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்துவதுடன், மாகாணசபைக்கு வருமானம் ஈட்டிக்கொடுப்போம்.
  7. இந்தியாவில் அகதி வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கும் ஈழத்தமிழ் மக்களை மீள்குடியேற்றுவது உட்பட, புலம்பெயர்ந்து உலகெங்கும் வாழும் ஈழத்தமிழ் மக்களுக்கு 01 வருட காலத்திற்குள் இரட்டைக்குடியுரிமை பெற்றுக்கொடுப்போம்.
  8. வடமாகாணம் முழுவதும் சகல உள்ளுராட்சி மன்றங்களின் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஒவ்வொரு சர்வதேச பாடசாலைகளை 05 வருடங்களுக்குள் நிறுவி, எமது மாணவர்களின் கல்வியை சர்வதேச தரத்திற்கு உயர்த்துவோம்
  9. வீட்டுத்திட்டங்கள், லீசிங், விவசாயம், சுயதொழில் போன்ற காரணங்களினால் கடன்சுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் திட்டங்கள் நடைமுறைப்படுத்துவோம்.
  10. யுத்தத்தால் குடும்ப அங்கத்தவர்களை இழந்த தனி நபர்கள், வயோதிப குடும்பங்கள் போன்றவர்களுக்கு விசேட வீட்டுத்திட்டம் நடைமுறைப்படுத்துவதுடன், இதுவரை வீட்டுத்திட்டத்தில் புறக்கணிக்கப்பட்டவர்கள், புதிதாக வழங்கப்பட வேண்டியவர்கள் ஆகிவர்களையும் கணக்கில் எடுத்து வீட்டுத்திட்டங்களை வழங்குவோம்.
  11. யுத்தத்தில் தமது வீடுகளை இழந்த அரச ஊழியர்களுக்கு கால தாமதமின்றி வீட்டுத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவோம். பத்திரிகையளர்களுக்கு வீட்டுத்திட்டமும், ஓய்வூதியமும், காப்புறுதியும் மேற்கொள்வதற்கான திட்டம் எம்மிடம் உண்டு.
  12. சகல இளைஞர், யுவதிகளுக்கும் உத்தரவாதமான தொழில் வழங்கி, புதிதாக திருமணம் முடிக்கும் சொந்த வீடில்லாத இளைஞர், யுவதிகளுக்கு மிகக்குறைந்த மாதக்கட்டணத்தில் நீண்ட கால தவணையில் சகல நகரங்களிலும் அடுக்குமாடி குடியிருப்புக்களை சொந்தமாக வழங்குவோம்.
  13. காங்சேந்துறையிலிருந்து பருத்தித்துறை, வடமராட்சி கிழக்கு, முல்லைத்தீவு ஊடாக திருகோணமலை மற்றும் வவுனியாவிற்கும், காங்கேசந்துறை, மாதகல், வட்டுக்கோட்டை, மானிப்பாய், நாவாந்துறை, குருநகர், கொழும்புத்துறை, நாவற்குழி, தனங்கிளப்பு, பூனகரி, நாச்சிக்குடா, விடத்தல்தீவு ஊடாக மன்னார், புத்தளம் வரை இருவழி புகையிரதப்பாதையாக அமைப்போம். சகல கிராமியப் பாதைகளையும் புனரமைப்போம்.
  14. தடுப்பிலுள்ள சகல தமிழ் அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுப்போம். காணாமல் போனவர்களின் பிரச்சனைக்கு தீர்வை பெற்றுக்கொடுப்போம்.
  15. வடமாகாணம் முழுவதும் உள்ள காணி உரிமைப் பிரச்சனைகளுக்கு 06 மாதத்திற்குள் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதுடன், மாகாண அரசில் எமக்கிருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி காணியற்ற அனைவருக்கும் விவசாயம், குடியிருப்பு, தொழில் தேவைகளுக்கான காணிகளை இலவசமாக வழங்குதல்.
  16. சகல தமிழ் விடுதலை இயக்கங்களிலும் அங்கம் வகித்து, தற்போது சுயகௌரவத்துடன் வாழ முயற்சி செய்யும் சகல முன்னாள் போராளிகளுக்கும் வேலை மற்றும் தொழில் வாய்ப்புக்களை 06 மாத காலத்திற்குள் பெற்றுக்கொடுப்போம்.
  17. எமது கலை, கலாச்சாரம், பண்பாடு என்பற்றை பாதுகாத்து, யுத்தத்தால் அழிந்த சகல மத வழிபாட்டுத்தலங்களையும் புனரமைப்போம்.
  18. கணணி மென்பொருள் உயர் தொழில்நுட்பத்துறை உட்பட சகல தொழில் துறைகளிலும் ஆற்றலுள்ள இளைஞர்களுக்கு பயிற்சியளித்து சர்வதேச தொழில் வழங்குனர்களாக அவர்களை உருவாக்குவோம்.
  19. யுத்தத்தில் இறந்தவர்கள் அனைவருக்குமான நினைவுச்சின்னம் ஒன்றை வழங்குதல், நினைவு நாள் ஒன்றை பிரகடனப்படுத்துதல் என்ற எமது உண்ணாவிரதக் கோரிக்கையினை நாமே எமது மக்களுக்காக நிறைவேற்றிக்கொடுப்போம்.
  20.  பதின்மூன்றாவது திருத்தத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்தி, காணி பொலிஸ் அதிகாரங்களுடன் கூடிய மாகாணசபையினை அமைப்போம்.
ஜனநாயக மேம்பாடு, வாழ்க்கைத்தரம், வறுமை ஒழிப்பு, பாதுகாப்பு, இயற்கைவள மேம்பாடு போன்ற எமது தீர்க்கதரிசனமான செயற்பாடுகள் ஊடாக போரால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைத்தரத்தினை 02 வருடத்திற்குள் உலகிலேயே முதல் இடத்திற்கு கொண்டுவருவோம்.

நகர அபிவிருத்தி, கிராம அபிவிருத்தி, பனைவள அபிவிருத்தி, காட்டுவளம் பாதுகாப்பு, சிறுவர் உரிமைகள், பெண்கள் உரிமை, சேமிப்பும் வருவாய்ப்பெருக்கமும், முதலீட்டு ஊக்குவிப்பு,வேலைவாய்ப்பு, மருத்துவ வசதி, பாதுகாப்பு, முதியோர் பராமரிப்பு, விதவைகள் முன்னேற்றம், தொழில் பயிற்சி, பாரம்பரிய புராதன சின்னங்கள் பாதுகாப்பு, சமய சமத்துவம்,கலை கலாச்சாரம் பேணல், இளைஞர் நலம் பேணல், இழப்பீடுகள் பெற்றுக்கொடுத்தல், விளையாட்டுத்துறை மேம்பாடும் பயிற்சியும், உளவியல் ரீதியான பயிற்சிகள், பால் சமத்துவம், தாய் சேய் நலன் பேணல், கிராமியப்போக்குவரத்து அபிவிருத்தி, காணி அபிவிருத்தி, சக்திவள அபிவிருத்தி, குடிநீர் வசதி, ஊனமுற்றோர் நலன் பேணல், புனர்வாழ்வு பெற்றோர் சிறைகளில் உள்ளோரின் மனித உரிமைகள், தகவல் தொழில்நுட்பம், அடிப்படை ஆவணங்கள் தொடர்பான பிரச்சனைகளை தீர்த்தல், சட்ட உதவிக்குழுக்களை அமைத்தல் போன்ற திட்டங்களை இனங்கண்டு வடக்கின் துரித அபிவிருத்தி என்ற இலக்கை அடைவதற்கு ஒவ்வோரு ஆண்டிற்கும் நிறைவேற்ற வேண்டிய தேவைகளை கண்டறிந்து வடமாகாணத்தை எமது ஆட்சிக்காலத்தில் பூரண அபிவிருத்தி பெற்ற உலக அதிசயமாக மாற்றியமைப்போம்.

“வீழ்வது நாமாகிலும் வாழ்வது தமிழாகட்டும்”

இவ்விஞ்ஞாபனம் ஜனநாயக ஐக்கிய முன்னணி என்ற பதிவு செய்யப்பட்ட கட்சியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் சார்பாக அக்கட்சியின் வடமாகாணசபைக்கான முதலமைச்சர் வேட்பாளர் அகிம்சை போராளி திரு.வி.சகாதேவன்(சகா) அவர்களினால் 2013.09.03ஆம் திகதி வெளியிடப்பட்டது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com