Wednesday, September 25, 2013

பூகம்பம் வருவதை விலங்குகள் முன்கூட்டியே உணர்ந்து கொள்கின்றனவா?

பூகம்பம் வந்து உலுக்கிய பிறகு அது எவ்வளவு தீவிர மானது என்பதை ரிக்டர் அளவில் அளக்கலாம். மனித முயற்சி இதை மட்டுமே சாத்தியமாக்கி இருக்கிறது. இந்த நேரத்தில் இந்த இடத்தில் இப்படி ஒரு பூகம்பம் வரலாம் என கணித்துச் சொல்லும் தொழில் நுட்பம் இன்னமும் கைகூடவில்லை.

ஆனால் பூகம்பம் வருவதை விலங்குகளும், பறவைகளும் முன்கூட்டியே உணர்ந்து கொள்கின்றன என்று உலகம் முழுவதும் நம்பிக்கை இருக்கிறது.உண்மையில் விலங்குகள் பூகம்பத்தை உணர்ந்து கொள்ளுமா என்றால், அதற்கு அறிவியல் பூர்வமான ஆதாரம் எதுவும் இல்லை. விஞ்ஞானம் அதை ஏற்றுக் கொள்ளவும் இல்லை.

ஆனால் சீனா, ஜப்பான், இந்தோனேஷியா போன்ற நிலநடுக்கம் அதிகம் நிகழக்கூடிய நாடுகள், விலங்குகளுக்கு இந்த ஆற்றல் உண்டு' என்று வாதிடுகின்றன. இயற்கையோடு மனிதன் ஒன்றி வாழ்ந்திருந்தால், மனிதனும் பூகம்பம் வருவதை முன் கூட்டியே அறிய முடியும் என்கிறார்கள்.

விலங்குகள் உண்பது, உறங்குவது எல்லாமே பொதுவாக தரையில் தான். தரை மீது தான் பெரும்பாலான நேரங்களில் காதை வைத்துத் தூங்கும். தரைக்கும் விலங்குகளுக்கும் தொடர்பு உண்டு. அதனாலேயே தரையில் ஏற்படும் மெல்லிய அதிர்வுகளைக் கூட அவற்றால் உணர்ந்து கொள்ள முடிகிறது.

ரயில் தண்டவாளத்தில் காதை வைத்தால் தூரத்தில் வரும் ரயிலின் சத்தம் கேட்பதைப் போல, தரையின் மீதே காதை வைத்திருப்பதால் தூரத்தில் ஏற்படும் நில நடுக்கத்தின் சத்தத்தைக் கேட்க முடிகிறது என்கிறார்கள். விலங்குகளைப் போலவே கற்கால மனிதனும் பூகம்பம் வருவதை முன் கூட்டியே அறிந்து கொண்டான். அதற்கேற்ப இடத்தை மாற்றினான்.

நவீன கால மனிதர்கள் வாகனங்களுக்குப் பழகியதால், அதிர்வுகளைத் தாங்கித் தாங்கி உடல் பழக்கப்பட்டுவிட்டது. இதனால் பூகம்பத்தின் மெல்லிய அதிர்வுகளை உணர முடிவதில்லை. இயற்கையை விட்டு செயற்கைக்கு மாறியதால் தான், இதெல்லாம் தெரிவதில்லை என்கின்றனர் ஜப்பானியர்கள்.

நில நடுக்கத்திற்கு முன்பு நிலத்தின் மீது கந்தக வாசனை வீசும் என்றும், இதனை விலங்குகள் முன் கூட்டியே புரிந்து கொள்ளும் என்றும் நம்பிக்கை நிலவுகிறது. பறவைகள் இதை உணர்ந்து வேறு இடங்களுக்குச் சென்று விடுகிறது. இதையெல்லாம் விஞ்ஞானம் இன்னும் உறுதிப்படுத்தாததால் உண்மை எதுவென்று நம்ப முடியாத நிலையாக உள்ளது என்பதே உண்மை!

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com