Wednesday, September 11, 2013

பாசிசம் காவுகொண்டு மறைந்தும் மறையாத சிவபாலன்! - எஸ்.எஸ்.கணேந்திரன்

1998ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 11ம் திகதி அதிகாலை 4.00 மணிக்கு கொழும்பில் இருந்த தமிழர் விடுதலை கூட்டணியின் அலுவலகத்தில் இறுதியாக சந்தித்த அந்த நாள் என் உயிருள்ள நாள் வரை மறக்கப்பட முடியாத நாளாக மாறிவிட்டது.

அண்ணன் சிவபாலன், அக்கா சறோஜினியின் இழப்பிற்கு பின்னர் நான் இன்றி தனியாக யாழ்ப்பாணம் பயணித்த நாளும் அதுதான். நானும் முகுந்தனும் தலைவர் திரு.சிவசிதம்பரம் ஐயா அவர்களை சென்னைக்கு அழைத்து போகின்றோம். சிவா அண்ணன் யாழ். பயணமானார்.

சிவா ஐயா அவர்களை சென்னையில் அவரது மகளின் வீட்டில் விட்டு விட்டு நுங்கம்பாக்கத்திற்கு சென்று தேநீர் அருந்திக்கொண்டிருந்த வேளையில் தமிழக வானொலியில் வந்த செய்தி எனது காதுகளையே நம்பமறுத்தது.

உடனடியாக கொழும்பு அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு நண்பன் அரவிந்தனூடாக அண்னன் சிவபாலன் படுகொலை செய்யப்பட்ட செய்தி உறுதிப்படுத்தப்பட்டதும் ஒரு சில நேரம் என்னையே மறந்தேன்.

அதே இரவு கொழும்பு திரும்பி அடுத்த நாள் காலையில் யாழ்ப்பாணம் சென்றோம். எவராக இருந்தாலும் தனது உறவுகளைப்போல ஆதரித்தும் அனுசரித்தும் பண பதவி மோகமற்ற அதிக இறை பக்தியுடன்கூடிய அந்த உயர்ந்த மனிதனுக்கு ஆதிக்க வெறியர்களால் வழங்கங்கப்பட்ட பரிசு கொலை என்பதை யாராலும் ஜீரணிக்க முடியாது.

சிறந்த ஒழுக்கம், வயது வேறுபாடுகள் இன்றிய அனைவருக்கும் மரியாதை, பாச உணர்வு, தோழமை அனைத்துக்கும் சொந்தக்காரன் அண்னன் சிவபாலன் எண்றால் அது மிகையாகாது. அவர் தலைமை தாங்கிய யாழ் மாநகர சபையில் இன்று இடம்பெறும் போத்தல் வீச்சுக்கள் இல்லை. கேவலமான வாய்ப்பேச்சுக்கள் இடம்பெறவில்லை. ஏன்? எந்த ஒரு தீர்மானமாக இருந்தாலும் வாக்கெடுப்பு என்பதே இடம்பெறவில்லை. 21 உறுப்பினர்களைகொண்ட யாழ் மாநகர சபையில் வெறும் 9 உறுப்பின்பர்களையே கொண்டிருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஆட்சிகாலத்தில் 12 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அந்த சபையில் இருந்தார்கள் கட்சிகளின் முழுமையான ஆதரவுடன் சபை நடவடிக்கைகளை குறுகிய காலத்திலும் சிறப்பாக வழி நடாத்திய பெருமைக்குரியவர் அண்ணன் சிவபாலன்.

அண்ணன் சிவபாலனைப்பற்றிச் சொல்வதென்றால் வாழ் நாள் வரை சொல்லிகொண்டே இருக்கலாம். இன்று அவர் உயிருடன் இருந்திருந்தால் அவருக்குப் பின்னால் ஆயிரமாயிரம் பேர் அணிவகுத்து நின்றிருப்பார்கள். காலங்கள் மாறலாம் காட்சிகளும் மாறலாம்.... மக்களை மனதார நேசித்தவர்கள் காலத்தால் என்றென்றும் வாழ்வார்கள்.. அந்த வகையில் அண்ணன் சிவபாலன் தமிழ் வாழும் காலம் வரை அவரும் வாழ்ந்துகொண்டே இருப்பார்.

No comments:

Post a Comment