பாகிஸ்தான் தேவாலய தாக்குதலில் பலி எண்ணிக்கை 81 ஆக உயர்வு !
பாகிஸ்தானின் கைபர் மாகாணத்தில் அமைந்துள்ள மிகப் பெரிய நகரம் பெஷாவர். இங்கு 100 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான சர்ச் ஒன்று உள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சர்ச்சில் சுமார் 700 பேர் வரை கூடி பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தனர். ‘பாகிஸ் தான் சர்ச்’ என்று மிகவும் புகழ் பெற்ற தேவாலயமாக இந்த சர்ச் விளங்கி வருகிறது. இந்நிலையில் நேற்று ஞாயிற்று கிழமை பிரார்த்தனை முடிந்து வெளியே வந்து கொண்டிருந்தனர்.
அப்போது மர்ம மனிதர்கள் துப்பாக்கியுடன் அங்கு நுழைந்து சர்ச்சில் பாதுகாப்புக்கு இருந்த 2 போலீஸ்காரர்களை சுட்டுக் கொன்றனர். அடுத்தடுத்து ஓரிரு வினாடிகளில் சக்திவாய்ந்த 2 குண்டுகளை அங்கு வெடிக்க செய்தனர். குண்டுகள் வெடித்து சிதறியதில் சர்ச்சில் இருந்து வெளியில் வந்தவர்கள் உடல் சிதறி விழுந்தனர். வளாகம் முழுவதும் ரத்த வெள்ளத்தில் பலர் உயிருக்கு துடித்தனர். உடனடியாக போலீசாரும், மீட்பு படையினரும் விரைந்தனர்.
அதற்குள் பெண்கள், குழந்தைகள் உள்பட 60 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். படுகாயம் அடைந்தவர்கள் பெஷாவரில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி 21 பேர் வரை மருத்துவமனையில் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தை அடுத்து அப்பகுதி முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டன. அப்பகுதி ராணுவத்தின் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
ஏழை மக்களை குறிவைத்து நடத்தப்பட்டுள்ள இந்த தாக்குதல் மிகவும் கண்டிக்கத்தக்கது. தீவிரவாதிகளால் நமது வாழ்க்கைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அப்பாவி பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவது இஸ்லாத்துக்கு எதிரானதும் என பிரதமர் நவாஸ் ஷெரீப்பும், அதிபர் சர்தாரியும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தீவிரவாதிகளின் இந்த ஈவு, இரக்கமற்ற தாக்குதல் மிகவும் கண்டனத்துக்கு உரியது என்று இந்திய பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்தவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு போப் பிரான்சிஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
1 comments :
காட்டுமிராண்டித்தனம் அளவு கடந்து போகிறது.இதுக்கும் இஸ்லாத்துக்கும் சம்பந்தமில்லை.
Post a Comment