Friday, September 13, 2013

கொழும்பிலிருந்து கிளிநொச்சிக்கு தினமும் 3 ரயில் சேவைகள் நடத்தப்படவுள்ளன!! ஞாயிற்றுக்கிழமை சேவை ஆரம்பம்!

கொழும்பு கோட்டையிலிருந்து கிளிநொச்சிக்கு தினமும் 3 ரயில் சேவைகள் நடத்தப்படவுள்ளன எனவும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் கிளிநொச்சிக்கான ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்படுமென புகையிரத திணைக்கள த்தின் போக்குவரத்து அத்தியட்சகர் எல்.ஏ.ஆர்.ரத்னாயக்க தெரிவித்தார். தினமும் காலை 5.45க்கு கொழும்பிலிருந்து புறப்படும் யாழ் தேவி ரயில் நண்பகல் 12.30 மணிக்கு கிளிநொச்சியை சென்றடையும்.

காலை 6.50 மணிக்கு கொழும்பிலிருந்து புறப்படும் கடுகதி ரயில் காலை 11.50க்கு கிளிநொச்சியை சென்றடையும் குறித்த ரயில் காலை 5.45க்கு பயணித்த யாழ் தேவியை அனுராதபுரத்தில் வைத்து முந்திச் செல்லும். இரவு 8.15க்கு கொழும்பிலிருந்து புறப்படும் தபால் ரயில் மறுநாள் அதிகாலை 4.10 மணிக்கு கிளிநொச்சியை சென்றடையும்.

இதேவேளை கிளிநொச்சியிலிருந்து காலை 6 மணிக்கு புறப்படும் யாழ் தேவி ரயில் பிற்பகல் ஒரு மணிக்கு கொழும்பு கோட்டையை வந்தடையும். பிற்பகல் 2.10 மணிக்கு கிளிநொச்சியிலிருந்து புறப்படும் கடுகதி ரயில் மாலை 7.15 மணிக்கு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தை வந்தடையும்.

இரவு 8.30 மணிக்கு கிளிநொச்சியிலிருந்து வரும் தபால் ரயில் மறுநாள் அதிகாலை 4.35 மணிக்கு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தை வந்தடையவுள்ளது. அனைத்து ரயில் சேவைகளுக்குமான ஆசனங்களை முன்கூட்டியே பதிவு செய்யும் வசதியும் வழங்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களத்தின் போக்குவரத்து அத்தியட்சகர் எல்.ஏ.ஆர்.ரத்னாயக்க குறிப்பிட்டார்.

இதேவேளை கிளிநொச்சி ரயில் நிலையம் நாளைய தினம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்துவைக்கப்படவுள்ளது. ஓமந்தையிலிருந்து கிளிநொச்சி வரை 120 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்க கூடிய விதத்தில் ரயில் பாதை நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment