180 குற்றச்சாட்டுக்களில் 137 பேர் கைது! வன்முறைகளை தவிர்க்க பாதுகாப்பு இரட்டிப்பு!
மூன்று மாகாண சபைகளிலும் இதுவரை 180 குற்றச்சா ட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் தேர்தல் சட்ட விதி முறைகளை மீறிய குற்றச்சாட்டில் 137 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 14 வாகனங்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் மத்திய மாகாணத்திலேயே கூடுதல் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன என்றும் தெரி வித்தார்.
நீதியானதும், சுதந்திரமானதுமான தேர்தலை நடத்தி முடிப்பதற்கு தேவையான முழுமையான ஒத்துழைப்பை தேர்தல்கள் அதிகாரிகளும், பொலிஸாருக்கும் வழங்குமாறு பொலிஸ் தலைமையகம் சம்பந்தப்பட்ட சகலரிடமும், பொது மக்களிடமும் கேட்டுக்கொள்கிறது.
தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறிச் செயற்படுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய சம்பந்தப்பட்ட சகல தரப்பினருக்கும் ஆலோசனைகளை வழங்கியுள்ளார். இதன் அடிப்படையில் தேர்தல் வன்முறைகளில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று பொலிஸ் திணைக்களம் தெரிவிக்கிறது.
வடக்கு, மத்திய மற்றும் வட மேல் ஆகிய மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தல் ஏற்பாடுகள் பூர்த்தியடைந்துள்ள நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. மூன்று மாகாண சபைகளுக்கும் நாளை 21ம் திகதி சனிக்கிழமை தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு 24,500 பொலிஸார் விசேட தேர்தல் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தேர்தல்களுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ண தெரிவித்தார்.
அத்துடன், தேர்தல் நடைபெறும் தினத்தன்று தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் நடைபெறுவதை தவிர்க்கும் வகையில் விசேட மோட்டார் ரோந்து பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு கடமையிலும் பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
0 comments :
Post a Comment