Friday, September 6, 2013

13ஆவது திருத்தத்தை ஏற்காத தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவதின் நோக்கம் என்ன?

13ஆவது திருத்தச் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட 13 வேண்டும் எனவும், செய்யப்படக்கூடாது எனவும், பலத்த விவாதங்கள் சமீப நாட்களில் நடந்து வருகின்றன. இதில் குறிப்பிடக்கூடிய விசேடம் என்னவெனில், அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கிடையிலேயே இந்த விவாதம் சூடு பிடித்திருப்பதுதான்.

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சிங்கள இனவாதக் கட்சிகளான அமைச்சர் விமல் வீரவன்ஸ தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி, அமைச்சர் சம்பிக்க ரணவக்க தலைமையிலான ஜாதிக ஹெல உருமய என்பன 13ஆவது திருத்த சட்டத்தை முற்றாக அரசியல் சாசனத்திலிருந்து நீக்க வேண்டும் அல்லது அதன் சாரத்தைக் குறைக்க வேண்டும் எனக் கோரி வருகின்றன.

அவர்களது இந்தக் கோரிக்கையை சிறீலங்கா சுதந்திரக் கட்சியிலுள்ள வலதுசாரிப் பிரிவும், ஜனாதிபதியின் சகோதரரும், பாதுகாப்புச் செயலாளருமான கோத்தபாய ராஜபக்ஸவும் ஆதிரிக்கின்றனர்.

அரசாங்கத்துக்கு வெளியில் உள்ள சில சிங்கள பேரினவாத பௌத்த குருமார் அமைப்புகளும் இந்தக் கோரிக்கையுடன் இணைந்து நிற்கின்றனர். சொல்லில் சோசலிஸமும் செயலில் இனவாதமும் செய்து வரும் ஜே.வி.பி, 13ஆவது திருத்தச் சட்டத்தில் மாற்றங்கள் செய்வதைவிட, அந்தச் சட்டத்தையே இல்லாமல் செய்ய வேண்டும் எனக் கூறுகிறது. ஐக்கிய தேசியக் கட்சியின் சஜித் பிரேமதாச பிரிவும் 13ஆவது திருத்தச் சட்டத்துக்கு எதிராகவே நிலைப்பாடு எடுத்துள்ளது.

1978 இல் சஜித்தின் தந்தையார் ஆர்.பிரேமதாஸ பிரதமராகவும், ஜே.ஆர்.ஜெயவர்த்தன ஜனாதிபதியாகவும் இருக்கும் போதே, 13ஆவது திருத்தச் சட்டத்தை கொண்டு வந்த இந்திய - இலங்கை உடன்படிக்கை செய்யப்பட்ட தென்பதும், அன்று அந்த நிகழ்வில் பிரேமதாச கலந்து கொள்ளாது பகிஸ்கரித்தார் என்பதும் எல்லோரும் அறிந்த ஒன்றாகும்.

மறுபக்கத்தில் இந்த 13ஆவது திருத்தச் சட்டத்தில் எதுவும் செய்யாமல், அதை அப்படியே அமுல்படுத்த வேண்டும் என, அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இடதுசாரிக் கட்சிகளும், தமிழ் - முஸ்லீம் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளும், சிறீலங்கா சுதந்திரக் கட்சியிலுள்ள ஜனநாயக எண்ணம் கொண்டவர் களும் கோரி வருகின்றனர்.

இந்த விவாதத்தில் அரசாங்கத்தின் தலைவர் என்ற முறையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் நிலைப்பாடு என்ன என்பது தெளிவாகத் தெரியவராதுவிடினும், பாராளுமன்றத் தெரிவுக்குழு மேற்கொள்ளும் முடிவு எதுவாக இருப்பினும், அதைத்தான் அமுல்படுத்துவதாகச் சொல்லி வருகிறார்.

இந்த விடயத்தில் தமிழ் மக்களின் பிரதான அரசியல் கட்சி என்று தன்னைக் கூறிக்கொள்ளும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன என்ற கேள்வி முக்கியமான ஒன்றாக இருக்கின்றது. ஏனெனில் இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை எதிர்த்து, அதன் மூலம் உருவான வடக்கு - கிழக்கு இணைந்த மாகாணசபையை சிங்களப் பேரினவாத ஜனாதிபதி ஆர்.பிரேமதாச மூலம் கலைப்பித்த புலிகள், பின்னர் இந்திய அமைதிப்படையுடன் யுத்தமும் செய்ததுடன், இந்திய - இலங்கை உடன்படிக்கையில் இந்தியாவின் சார்பில் அந்த நேரத்தில் கைச்சாத்திட்ட பிரதமர் ராஜீவ் காந்தியையும் பின்னர் கொலை செய்தனர். அத்தகைய நாசகார சக்திகளான புலிகள் உருவாக்கிய அமைப்பே இன்றைய தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ஆகும்.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ந் திகதி வடமாகாண சபையை நிறுபுவதற்காக 38 அங்கத்தவர்களை (யாழ்ப்பாணம்-16, வவுனியா-6, மன்னார் -5, முல்லைத்தீவு-5, கிளிநொச்சி-4, அதிகப்படியான வாக்குகளின் அடிப்படையில்-2) தெரிவு செய்வதற்கான வடமாகாணசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் சி.வி.விக்கினேஸவரன் உட்பட, பலரால் இந்த வருடம் வடமாகாணசபைத் தேர்தல் நடைபெறாது எனக்கூறப்பட்டு வந்துள்ள போதிலும், தற்போதைய இலங்கை அரசு ஏற்கனவே அறிவித்ததின்படி, வடமாகாணசபைத் தேர்தலை நடாத்த முன்வந்ததை வரவேற்க வேண்டும்.

1987 ஆண்டில் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட மாகாணசபை முறைமையை, வடக்குக் கிழக்கிலும் வாழும் மக்களுக்கான ஓர் அதிகாரப்பகிர்விற்கான அடிப்படைகள் இருப்பதாக ஏற்றுக்கொண் டவர்களும் ஏற்றுக்கொள்ளாதவர்களும் இத்தேர்தலில் பங்கேற்கிறார்கள். மாகாணசபை முறையை ஏற்றுக்கொள்ளாதவர்கள் வாக்காளர்களைப் பார்த்து, மாகாணசபை முறையை ஆதரிப்பவர்களிடம் அதிகாரங்கள் போய்விடக் கூடாது என்பதற்காகவே தேர்தலில் போட்டியிடுகின்றோமென மிகவும் வெளிப்படை யாகவே பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இதன் மூலம் மாகாணசபைக்கு ஏதோ அதிகாரங்கள் இருப்பதை அங்கீகரிப்பவர்களாகவே இவர்கள் இருக்கிறார்கள்.

மாகாணசபைக்கு அதிகாரங்கள் போதாது என்று கூறுபவர்கள் வடமாகாணசபை தேர்தலில் வெற்றி பெற்றால் என்ன செய்யப்போகிறார்கள்? இவர்கள் நிட்சயமாக வடமாகாணசபை சரியாக இயங்கவிடாமல் செய்வதற்கு தம்மாலான எல்லா முயற்சிகளையும் எடுப்பார்கள் என்பதை நம்பலாம். இதனால் ஆளுநர் வடமாகாணசபையை கலைக்க வேண்டிய சூழலும் எழலாம். வடமாகாணசபையை முடங்க செய்யத் துடிப்பவர்களுக்கு, அது கலைக்கப்பட வேண்டும் என்பதும் சந்தேகத்திற்கிடமின்றி அவர்களின் நிகழ்ச்சி நிரலில் இருக்கும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com