Friday, September 6, 2013

13ஆவது திருத்தத்தை எதிர்ப்பவர்கள் தேசியவாதிகளல்ல! பேரின வாதிகள்! - ராஜித சேனரத்ன

இனப்பிரச்சினை தீர்வு சம்பந்தமாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்றுக்கு மீன்பிடி மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் டொக்டர் ராஜித சேனரத்ன (Dr.Nambukara Helambage Rajitha Harischandra Senaratne) அளித்த பேட்டியின் முக்கியமான சில பகுதிகள் கீழே தரப்படுகிறது.


கேள்வி-13ஆவது திருத்தச்சட்டத்தை நீர்த்துப் போகச் செய்வதற்கு ஆதரவாக சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு உள்ளதாக செய்திகள் வரும் சூழலில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சில பிரிவுகள் அச்சட்டத்தையே இல்லாதொழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. அதிகாரப் பகிர்வுக்கு ஆதரவான நீங்கள் இந்த நிலைமை குறித்து என்ன கருதுகிறீர்கள்?

பதில்- இந்த நிலைமை குறித்து நான் மகிழ்ச்சி அற்றவனாக உள்ளேன். அதற்கான ஒரே காரணம் என் வாழ்நாளில் இனப்பிரச்சினைக்கு ஒரு அரசியல் தீர்வு காண்பதற்கு என்னை அர்ப்பணிக்க முடியாமல் இருப்பதுதான். 13 திருத்தச் சட்டம் இனப்பிரச்சினைத் தீர்வுக்கான ஆகச் சிறந்த ஒரு தீர்வல்ல. ஆனால் தற்போதுள்ள சூழ்நிலையில் இதுதான் நல்லதொரு தீர்வாகும்.

அதேநேரத்தில் இந்தத் தீர்வு சுலபமாக நடைமுறைப்படுத்தப்படக்கூடிய ஒன்றுமாகும். எமது நாட்டின் வளர்ச்சியைப் பொறுத்த வரையிலும், ஏனைய பல நாடுகளைப் பொறுத்த வரையிலும்கூட உள்ள பிரதான பிரச்சினை என்னவென்றால், இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வற்ற தன்மையாகும்.

கடந்த காலங்களில் ஒவ்வொரு நாடும் செழிப்புடன் இருந்ததிற்கான காரணம், அந்த நாடுகள் தமது உள்நாட்டுப் பிரச்சினைகளைத் தாமேதீர்த்துக் கொண்டமையாகும். எமது ஜனாதிபதி இந்த நாட்டை ‘ஆசியாவின் அதிசயமாக’ மாற்ற விரும்புகிறார். ஆனால் அதை அடைவதானால்,
எமக்கு அரசியல் ஸ்திரத்தன்மை தேவையாக இருப்பதுடன், இனங்களுக்கிடையிலான தவறான புரிந்துணர்வு களையப்பட்டு, நாம் எல்லோரும் இலங்கையர்கள் என்ற அடையாளம் உருவாக்கப்பட வேண்டும்.

தீவிரவாதிகள் இதைப் புரிந்து கொள்ளமாட்டார்கள். ஏனெனில் அவர்கள் ஒரு ‘தீர்வு மனப்பான்மை’யில் இருக்கின்றனர். நாம் இந்தத் தீர்வு மனப்பான்மையைத் தூக்கி எறிய வேண்டும். ஏனெனில் இன்றைய உலகு ஒரு பூகோளமயப்பட்ட உலகாக இருக்கின்றது. இந்தப் பிரச்சினைகளுக்கான தீர்வு அதிகாரப் பகிர்வேயாகும். இந்தப் பிரச்சினையை அடுத்த சந்ததிக்கும் நாம் கைமாற்றி விடக்கூடாது. நாம் இதைத் தீர்த்து வைத்து நாட்டை ஐக்கியப்படுத்த வேண்டும்.

கேள்வி- ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அண்மையில் கூறும்போது, 13திருத்த சட்டம் சம்பந்தமாக தனிப்பட்ட முறையில் வெவ்வேறு கண்ணோட்டங்கள் இருப்பதாகவும், சிறீலங்கா சுதந்திரக் கட்சி நிச்யமாக ஒருமனதான கண்ணோட்டத்தைக் கொண்டிருக்க வேண்டுமெனவும் கூறியுள்ளார்.

அத்துடன் அமைச்சர்கள் தமது தனிப்பட்ட கருத்துக்களை ஊடகங்களுக்குத் தெரிவிக்கக்கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளார். 13திருத்தம் சம்பந்தமாக மாறுபாடான கருத்து இருப்பதை ஜனாதிபதி ஒடுக்க நினைக்கிறார் என்ற விமர்சனம் இது பற்றி இருக்கிறது. இது சரியா?

பதில்- எப்பொழுது நீங்கள் ஒரு கட்சியின் உறுப்பினராகிறீர்களோ, அப்பொழுது சில குறிப்பிட்ட ஒழுங்கு விதிகளுக்கு உள்ளாகிறீர்கள். அது உண்மை. நாம் எமது கருத்துகளை வெளியிடுவதுடன், நான் எனது கொள்கைகளுக்காகவும் நிற்கின்றேன்.

ஜனாதிபதி நாம் இதைப் பகிரங்கமாகச் செய்வதை விரும்பவில்லை. ஏனெனில் இந்த விவகாரம் சம்பந்தமாக சில கட்சிகள் கூட்டங்களையும் நடாத்தியுள்ளன. ஜனாதிபதியைப் பொறுத்த வரையில் இது சரியானதாகும். ஏனெனில் இந்த விடயத்துக்கு சிபார்சுகள் செய்வதற்காக ஏற்கெனவே பாராளுமன்ற தெரிவுக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

கேள்வி- 13திருத்த சட்டத்தை ஒழிக்கக் கோரும் தேசியவாதக் குழுக்கள் அதற்காகக் கூறும் , வட மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றால், நாட்டின் தேசிய பாதுகாப்பு அபாயத்திற்கு உள்ளாகி விடும் என்று கூறுகிறார்கள். அவர்களது வாதம் சரியானதுதானா?

பதில்- முதலாவதாக, இந்தக் குழுக்கள் தேசியவாதிகளல்ல. அவர்கள் பேரினவாதிகள். தேசியவாதம் என்பதன் அர்த்தம், ஒருவரது தேசிய அடையாளத்தைப் பாதுகாப்பதும், நாட்டின் முன்னேற்றத்திற்குப் பங்களிப்பு வழங்குவதுமாகும்.

சொந்த நாட்டுக்குள்ளேயே இன்னொரு இனத்தைக் கொடுமைப் படுத்துபவர்களை தேசியவாதிகள் என அழைக்க முடியாது, அவர்கள் பேரினவாதிகள். இந்தப் பேரினவாதிகள் ஒன்றும் புதிய குழுவினர் அல்ல. இவர்கள் 50கள் முதல் இருந்து வருகின்றனர். அத்துடன் இந்த பேரினவாதக் கும்பல் ஒரே வாக்கு வங்கிக்காகப் போட்டியிடுகின்றனர். எனவே ஒரு குழு கூடுதலான பிரபல்யம் அடைந்தால், மற்றக் குழு அதைவிடக் கூடுதலாகச் செல்வாக்குப் பெறுவதற்காக மேலும் கூடுதலான பேரினவாத நடவடிக்கைகளில் ஈடுபடும். இது ஒரு கடைகோடி பேரினவாதிகளுக்கிடையிலான சண்டையாகும். இந்தப் பதவிப் போராட்டத்தால் நாட்டின் விதியை மாற்றிவிட முடியாது.

கேள்வி- தேசிய சுதந்திர முன்னணியும், ஜாதிக ஹெல உருமயவும் சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் உள்ள 13திருத்த சட்டத்துக்கு ஆதரவான குரலை இல்லாமல் செய்துவிட முயல்கின்றன என்று கூறப்படுகின்றது. இது சரியானதுதானா?

பதில்- இந்தக் குழுக்கள் 13திருத்த சட்டத்திற்கு எதிராக இருப்பது தங்களது சொந்தப் பிரச்சினைகளுக்காகவே ஒழிய வேறொன்றுக்காகவும் அல்ல. அவர்கள் விரும்புவதெல்லாம் ஜனாதிபதிக்கும், அரசாங்கத்திற்கும் பிரச்சினைகளை உருவாக்குவதே. ஜனாதிபதி இது சம்பந்தமாக கவனமாக இருக்கிறார். கடந்த காலங்களில் செய்தது போலவே வருங்காலத்திலும் அவர் சரியான வழியில் செயல்படுவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

கேள்வி- உங்களது அபிப்பிராயத்தில், இனப்பிரச்சினைத் தீர்வுக்கான சிறந்த அதிகாரப் பகிர்வு மாதிரி என்ன?

பதில்- தற்போதைய நிலையில், 13ஆவது திருத்தமே அதிகாரப் பகிர்வுக்கான சிறந்த மாதிரி. ஏனெனில் இது ஒற்றையாட்சி என்ற குடையின் கீழ் உள்ளது. எப்படியிருந்தாலும், அதிகாரங்கள் பகிரப்பட்டாலும், இறுதிக் கட்டுப்பாட்டு அதிகாரம் ஜனாதிபதியிடமே இருக்கும்.

அதிகாரத்தைப் பங்கிடுவது சம்பந்தமாக நிலவும் பயங்கள் பற்றி நீங்கள்பேசுகிறீர்கள். இதுபோன்ற ஒரு பயம் 50களிலும் இருந்தது. அப்பொழுது தமிழ்மொழியை உத்தியோகபூர்வ மொழி ஆக்கினால், சிங்கள மொழிக்குப் பாதிப்பு ஏற்படும் என்று கருதப்பட்டது.

இது 1956இல் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க சிங்களம் மட்டும் என்ற கொள்கையை அறிமுகப்படுத்தும் நிலைக்கு இட்டுச் சென்றது. எப்படியிருந்த போதிலும் 13திருத்த சட்டத்தில் உள்ள சிங்களமும் தமிழும் உத்தியோகபூர்வ மொழிகள் என்ற சரத்து 90கள் வரை அமுல் செய்யப்படவில்லை.

கடைசியாக பண்டாரநாயக்கவின் மகள் சந்திரிகா இந்தச் சரத்தை அமுல்படுத்தியதைப் பார்த்தோம். தமிழை உத்தியோகபூர்வ மொழியாக ஆக்கியதால், சிங்கள மொழியின் அந்தஸ்துக்கு ஒருபோதும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. அது போன்றதொரு நிலைமையையே இப்பொழுதும் நாம் கொண்டுள்ளோம். மத்தியிலுள்ள சில அதிகாரங்களைப்
பங்கிடுவதால், சிங்களப் பெரும்பான்மை இனத்துக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படப் போவதில்லை.

கேள்வி- தேசிய சுதந்திர முன்னணி போன்ற குழுக்கள் எடுக்கும் நிலைப்பாடு, ஜனாதிபதியின் உத்தியோகபூர்வமற்ற நிலையைப் பிரதிபலிப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஜனாதிபதி தனிப்பட்ட முறையில் 13திருத்த சட்டத்தை எதிர்க்கின்றாரா?

பதில்- ஜனாதிபதி மிகவும் காரியார்த்தவாதி ஆனால் அவர் எல்லாப் பக்கங்களிலிருந்தும் அழுத்தங்களுக்கு உள்ளாகிறார். சாத்தியான எல்லா கண்ணோட்டங்களையும் அவர் பரிசீலிப்பார். ஆனால் நாட்டின் நலன்களுக்குச் சிறப்பானதொரு இறுதி முடிவை அவர் எடுப்பார்
என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு.

கேள்வி- சில வேளைகளில் 13திருத்த சட்டம் சாரமற்றதாக்கப்பட்டு அல்லது முற்றாக இல்லாதொழிக்கப்பட்டால், நீங்கள் அரசாங்கத்துடன் தொடர்ந்தும் இருப்பீர்களா?

பதில்- 13திருத்த சட்டம் சாரமற்றதாக்கப்பட்டால், அத்துடன் அரசாங்கம் முடிவுக்கு வந்துவிடும். எனவே அதிலிருந்து வெளியேறும் தேவை எமக்கேற்படாது. அரசாங்கம் தானாகவே அதிகாரத்திலிருந்து அகன்று விடும்.

கேள்வி- கடந்த காலங்களில் ‘13இற்கும் அப்பால்’ என வாக்குறுதி அளித்த ஜனாதிபதி, இப்பொழுது ‘13இற்கும் குறைவாக’ என்ற நிலைப்பாட்டில் இருக்கிறார். ஏன் இந்த மாற்றம்?

பதில்- அதிகாரப் பகிர்வு சம்பந்தமாக பாராளுமன்ற தெரிவுக் குழு தீர்மானிக்கட்டும் என்பதே ஜனாதிபதியின் நிலைப்பாடு. அவர் காணி அல்லது பொலிஸ் அதிகாரங்களில் கை வைக்கவில்லை. பாராளுமன்ற தெரிவுக் குழுவின் எந்தவொரு தீர்மானத்தையும் தான் நடைமுறைப்படுத்துவதாக அவர் ஏற்றுக் கொண்டுள்ளார்.

டியூ குணசேகர, வாசுதேவ நாணயக்கார ஆகியோருடனான சந்திப்பின் போது, சர்வ கட்சி பிரதிநிதிகள் குழுவின் பரிந்துரைகளைக் கூட, பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு எடுத்து வருவதை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டிருக்கிறார்.

கேள்வி- 13திருத்தம் மீதான மிகைப்படுத்தலுக்குக் காரணம், வட மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றி பெற்று விடும் என்ற அரசாங்கத்தின் கவலை காரணமா?

பதில்- தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றால்கூட, நாம் கவலைப்பட வேண்டிய தேவை இல்லை. அது எமது நாடு சுதந்திரமானதும், நீதியானதுமான தேர்தலை நடாத்துகின்ற நாடு என்பதை எடுத்துக் காட்டும். தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெறுமானால், நாம் உண்மையான ஜனநாயகத்தைக் கொண்டுள்ளவர்கள் என்பதை ஜனாதிபதி நிரூபிக்க முடியும். அதன் பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எப்படி மத்திய அரசாங்கத்துடன் இணைந்து வேலை செய்கின்றது என்பதை அறிய முடியும். அத்துடன் தேசிய இனங்களின் இணக்கப்பாடு பற்றிய ஒரு பலமான செய்தியை நாம்
பேரினவாதிகளுக்கும் அனுப்ப முடியும்.

கேள்வி- வட மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னர் 13திருத்த சட்டத்தில் ஏதாவது திருத்தங்கள் செய்யப்படுமா?

பதில்: இல்லை

பேட்டி கண்டவர்: சச்சின பரதலிங்கம் தமிழில்: சுலோசனா

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com