சர்வதேச இடதுகை பழக்கமுடையோர் தினம் International Lefthanders Day – புன்னியாமீன்
சர்வதேச இடதுகை பழக்கமுடையோர் தினம் 1976ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 13ஆம் திகதி கொண்டாடப்பட்டு வருகின்றது. சர்வதேச இடக்கை பழக்கத்தவரின் நிறுவனம் இத்தினத்தை அனுஸ்டிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
உலகளாவிய ரீதியில் நோக்குமிடத்து அதிகமானோர் தமது அன்றாட பிரதான தேவைகளை வலக்கையாலேயே நிறைவேற்றுவர். குறிப்பாக எழுதுவது, முக்கியமான வேலைகளை செய்வது போன்றவற்றில் வலக்கையே பிரதானப்படுத்தப்படும். அதேநேரம், வலக்கையால் செய்யப்படும் சில வேலைகளை சிலர் இடது கையால் செய்து வருகின்றனர். குறிப்பாக எழுதுவதற்கு பயன்படுத்தப்படும் கை இடது கையாக அமைந்து காணப்படும். உலகளாவிய ரீதியில் நோக்கும்போது மொத்த சனத்தொகையில் 7 – 10 வீதத்தினரே இடது கை பழக்கமுள்ளவர்கள் என கணிப்பீடுகள் குறிப்பிடுகின்றன.
எனவே, ஒப்பீட்டு ரீதியாக இந்த இடதுகை பழக்கமுடையவர்கள் சிறுபான்மையாளராக இருப்பதனால் சமூகத்தில் பல்வேறு பட்ட அவஸ்தைகளை எதிர் நோக்க வேண்டி ஏற்படுகின்றது. எந்த ஒரு பொருளும் வலதுகை பழக்கம் உடையவர்களுக்கு மட்டுமே தயாராகிறது, இடது கை பழக்கம் உள்ளவர்களை மனதில் வைத்துத் தயாரிக்கப்படுவதில்லை.
இந்த அடிப்படையில் இடது கை பழக்கம் உடையவர்கள் உபயோகிக்க கஷ்டப்படும் சில பொருட்களை உதாரணமாகக் குறிப்பிடலாம். கத்தரிகோல், ஹாக்கி மட்டை, கிடார், மண்டபங்களில் இருக்கையுடன் அமர்ந்து இணைக்கப்பட்டு இருக்கும் மேசை, இது இடது கை பழக்கம் உள்ளவர்களுக்கு என்று கிடைப்பது அரிது. உணவு மேசையில் ஏற்கனவே பரிமாறப்பட்டு இருக்கும் உணவு வலது கை பழக்கம் உள்ளவர்களுக்காகவே இருக்கும். நவீன காலத்தில் கணனி கூட வலக்கை பாவனைக்கேற்ற முறையிலேயே அதன் மவுஸ் பிரயோகத்திற்கான வசதிகள் செய்யப்பட்டிருப்பதைக் காண்கின்றோம். இது மாத்திரமன்றி கதவுகளைத் திறக்கும்போது, குழாய்த் தண்ணீர் திறக்கும்போது வலக்கை பாவனைக்கேற்ற முறையிலேயே அவை செய்யப்பட்டுள்ளன. இவை மட்டுமன்றி பொதுவாக நாம் பயன்படுத்தும் அநேக பொருட்களில் இதனை நாம் காண்கின்றோம்.
இது கைப் பழக்கம் பிறப்பிலே சில மனிதர்களுக்கு ஏற்படுகின்றது. நமது மூளை மூளையம், மூளி சிறுமூளை மற்றும் நீள்வளைய மையவிழையம் என மூன்று பகுதிகளை கொண்டுள்ளது. இதில் மூளையம் (பெருமூளை) இரண்டு அரைக்கோள வடிவில் உள்ளது. இடதுபக்க அரைக்கோளம் உடலின் வலதுப்பக்க உறுப்புகளையும், வலதுப்பக்க அரைக்கோளம் உடலின் இடப்பக்க உறுப்புகளையும் இயக்குகின்றன. இதில் பெரும்பாலானோருக்கு இடப்பக்க அரைக்கோளம் சற்று மேலோங்கியதாக இருக்கும். இதனால் அவர்களுக்கு வலப்பக்க உறுப்புகள் சிறப்பாக செயல்படுகின்றன. ஆனால் ஒரு சிலருக்கு வலப்பக்க அரைக்கோளம் மேலோங்கி செயல்படுவதால் இடது கை பழக்கம் ஏற்படுகிறது.
இடக்கைப் பழக்கமுள்ள குழந்தைகளை சில பெற்றோர்கள் குழந்தைப் பருவத்திலேயே வலக்கைக்கு மாற்றுவதற்கான பிரயத்தனங்களை மேற்கொள்வர். தற்போது கிராமிய மட்டங்களில் இடக்கைப் பழக்கமென்பது ஒரு வெறுக்கத்தக்க பழக்கமாக காணப்படுகின்றது. இந்தப் பழக்கத்தை இவர்கள் மாற்ற முயற்சி செய்தால் பேச்சிலும், பார்வையிலும் குறைபாடுகள் ஏற்படலாம் என்கிறது அறிவியல்.
ஆனால், நவீன கால விஞ்ஞான விளக்கங்களின்படி இடக்கைப் பழக்கமுள்ளோர் விவேகத்திறன் கூடியவர்கள் என்று கூறப்படுகின்றது. அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவியேற்றுள்ள ஒபாமா இடது கை பழக்கம் உள்ளவர். இடது கையால் கையெழுத்திட்டே பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார். இவர் தவிர அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவி வகித்த ஜோர்ஜ் புஷ் (சீனியர்), பில் கிளிண்டன், ஜெரால்ட் ஃபோர்ட், ஜேம்ஸ் கார்ஃபில்ட், தொமஸ் ஜெபர்சன், ரொனால்ட் ரீகன், ஹாரி ட்ரூமேன் ஆகியோரும், அமெரிக்க துணை ஜனாதிபதியாக இருந்த நெல்சன் ராக்ஃபெல்லர் , ஹென்றி வாலேஸ் ஆகியோரும் இடது கைப்பழக்கம் உடையவர்கள்தான். இந்தியாவின் தேசத் தந்தை மகாத்மா காந்தி, நெப்போலியன் போனாபர்ட், அவரது மனைவி ஜோசப்பின், ஜூலியஸ் சீசர், மாவீரன் அலெக்ஸாண்டர், தத்துவமேதை அரிஸ்டாட்டில், பிரிட்டன் பிரதமராக இருந்த வின்சென்ட் சர்ச்சில், சாரணர் இயக்கத்தைத் தோற்றுவித்த பேடன்பாவெல் , கியூபா அதிபராக இருந்த பிடல் காஸ்ட்ரோ, விஞ்ஞானி ஆல்பிரட் ஐன்ஸ்டீன், ஃபோர்டு கார் தயாரிப்பு ஆலையைத் தோற்றுவித்த ஹென்றி ஃபோர்டு, இங்கிலாந்து மன்னர்களாக இருந்த 3-வது, 8-வது எட்வர்ட், 2-வது, 4-வது, 6-வது ஜார்ஜ் ஆகியோர் உள்பட வரலாறு படைத்த பலர் இடது கைப்பழக்கம் உடையவர்களே.
இவ்வாறு பல பிரபல்யங்களைக் குறிக்கலாம். பொதுவாக சாதாரண ஒரு மனிதனின் பழக்கவழக்கத்திற்கும், குணாதிசயங்களுக்கும் இந்த கைப்பழக்கங்கள் வெகுவாக பாதிப்பை செலுத்துவதில்லை. எவ்வாறாயினும் அண்மைக்கால கட்டங்களில் வலது கை பழக்கத்துக்குப் பயன்படுத்தப்பட்டுவரும் பொருட்களை இடக்கைப் பழக்கமுள்ளோருக்கு ஏற்றவகையில் மாற்றியமைக்கப்பட்டு வருவதையும் நாம் அவதானிக்க முடியும்.
இடது கைப்பழக்கம் உள்ளவர்கள் பற்றி அண்மையில் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வை நடத்திய பேராசிரியர் ஸ்டான்லி கோரன், இடது கைப் பழக்கம் உள்ள நூற்றுக் கணக்கானவர்களைச் சந்தித்தும் இடது கைப் பழக்கம் கொண்ட இறந்தவர்கள் பற்றியும் ஆராய்ந்தும் தமது முடிவில் இடது கைப் பழக்கம் உள்ளவர்களுக்கு சில குறைபாடுகள் இருப்பதைக் கண்டறிந்தார். இடது கைப்பழக்கம் உள்ளவர்கள் வலதுகைப் பழக்கம் கொண்ட வாழ்க்கைத் துணையுடன் சேர்ந்து வாழும்போது மிகவும் சிரமப்படுகிறார்களாம். தவிர, வலது கைப் பழக்கம் கொண்டவர்களை விட இவர்களுக்கு சராசரியாக 9 வருடம் ஆயுள் குறைவாக இருப்பதாகவும் முடிவு வெளியிட்டார்.
இதற்கு முக்கியக்காரணம் இவர்கள் அதிக அளவில் விபத்துக்களில் சிக்கிக் கொள்வதுதான். ஏனெனில் உலகம் முழுவதும் வலதுகை பழக்கம் கொண்டவர்களுக்காகவே இயந்திரங்கள், தொழில் உபகரணங்கள், வாகனங்கள் தயாரிக்கப்பட்டிருப்பதால் அதை இடது கைப் பழக்கம் உள்ளவர்கள் கையாளும்போது அவர்களுக்குப் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
சிலர் விதி விலக்காக இரண்டு கைகளாலும் சமனாக வேலை செய்யக்கூடிய ஆற்றல் உள்ளவர்களும் உளர். கலப்பு கை பழக்கம் (Mixed Handedness) அல்லது கலப்பு ஆதிக்கம் (Cross-Dominance)என்பது சில வேலைகளுக்கு ஒரு கையையும் பிற வேலைகளுக்கு மறு கையையும் மாறி மாறி பயன்படுத்தும் ஒரு வகையான தசை இயக்க வெளிப்பாடு ஆகும். எடுத்துக்காட்டுக்கு, கலப்புக் கை பழக்கம் உடையோர் வலது கையில் எழுதினாலும் பொருட்களை பெற்றுக்கொள்வதற்கு இடது கையைப் பயன்படுத்த இயலும். இது போல வெவ்வேறு செயல்களுக்கு வெவ்வேறு கைகளை பயன்படுத்துவர். இரு கை பழக்கம் (Ambidexterity) என்பது இந்த கலப்பு ஆதிக்கத்தின் ஒரு வகையாகும். இரு கை பழக்கமுடையோர் தனது இரு கைகளையும் சரி சமமாகப் பயன்படுத்துவர். எனினும் கலப்பு கை பழக்கம் உடையோர் குறிப்பிட்ட செயல்களுக்கு ஒரு கை பழக்கமுடையவராக இருப்பர். எனவே பிறர் அவரை குறிப்பிட்டு நோக்காதிருந்தால் அவரது பெரும்பான்மையான கை பழக்கத்தை கொண்டு இடது கை பழக்கமுடையவராகவோ வலது கை பழக்கமுடையவராகவோ தவறாக கண்டு கொள்வர்.
இந்த கலப்பு ஆதிக்கம் கண், காது, கால்கள் போன்ற இட-வல வேறுபாடுகள் உடைய அனைத்து உடற்பாகங்களுக்கும் பொருந்தும். எனினும் இந்த கலப்பு ஆதிக்கம் குறி பார்க்கும் செயல்களில் சில நேரங்களில் தடுமாற்றத்தை ஏற்படுத்தலாம்
இடது கைப்பழக்கம் உள்ளவர்கள் வலது கைப் பழக்கம் உள்ளவர்களை விட விரைவாக சிந்திக்கிறார்கள் என்பது அவுஸ்திரேலிய விஞ்ஞானிகளின் ஆய்வு முடிவாகும். இடது கைப்பழக்கம் உள்ளவர்களால் மூளையின் இரண்டு பாகங்களையும் பயன்படுத்த முடிவதாகவும், விரைவாக தகவல்களை மூளைக்கு அனுப்பிப் பெற முடிவதாகவும் அவர்களுடைய ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.
அவுஸ்திரேலிய தேசிய பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள், மூளையின் இரண்டு பாகத்துக்கும் தகவல்களை விரைவில் பரிமாறிக்கொள்ள இடது கைப் பழக்கம் உடையவர்களால் முடிகிறது என்றும் அதனால் நுட்பமான பணிகளையும், விளையாட்டு போன்ற துறைகளையும் அவர்களால் ஆக்கிரமிக்க முடியும் என்று தெரிவிக்கின்றனர். பார்வைக்குத் தேர்வு வைக்கும் பல விஷயங்களில் இடது கைப்பழக்கம் உடையவர்கள் மிகவும் சாமர்த்தியசாலிகளாய் இருப்பதாகவும் இவர்கள் ஆராய்ச்சியில் கூறியிருக்கிறார்கள்.
தனித்துவமான போக்கினைக் கொண்ட இடக்கைப் பழக்கமுள்ளோரின் செயற்பாடுகளை கௌரவிக்கவும் மானசீகமான தாக்கங்கள் ஏற்படாமல் காப்பதற்கும் இத்தினம் விசேடமாக அனுஸ்டிக்கப்படுகின்றது. குறிப்பாக இவர்கள் மத்தியில் போட்டி நிகழ்ச்சிகளை நடாத்துவதும், கருத்தரங்குகள், கூட்டங்கள் நடாத்துவது என்பன இத்தினத்தில் பிரதானமாக மேற்கொள்ளப்படுகின்றன. இத்தினத்தை அனுஸ்டிப்பதில் ஊடகங்களும் வெகுவாக அனுசரணைகளை வழங்கி வருவதை அவதானிக்க முடிகின்றது.
0 comments :
Post a Comment