வெள்ளியன்று அறிவிக்கப்பட்ட தற்போதைய உலக பயங்கரவாத அச்சுறுத்துலை ஒட்டி, அடுத்த வாரம் முழுவதும் 19 வெளிநாட்டு தூதரகங்கள் மூடியிருக்கும் என ஞாயிற்றுக்கிழமையன்று அமெரிக்க வெளியுறவுச் செயலகம் அறிவித்துள்ளது. வெள்ளை மாளிகை அறிக்கை ஒன்றின்படி இந்த எச்சரிக்கை, “அரேபிய தீபகற்பத்தில் நிகழும் அல்லது சாத்தியமான அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வகையில் இருக்கும்”. பிரித்தானியாவும் பல பிற ஐரோப்பிய நாடுகளும் தங்கள் யேமனில் இருக்கும் நிலையங்களை மூடவும் நடவடிக்கை எடுத்துள்ளன.
மூடல்களை நீடிக்கும் முடிவு, ஒருவேளை தாக்குதல்கள் இருக்கலாம் என்னும் புதிய தகவல்களின் அடிப்படையில் அல்ல, “எச்சரிக்கையுடன் இருப்பது” என்பதைத்தான் அடித்தளமாக கொண்டுள்ளதென அமெரிக்க அதிகாரிகள் ஞாயிறன்று கூறினர். திங்கள் பிற்பகலில், வெளியுறவுச் செயலகம், பாக்கிஸ்தானின் அய்மன் அல்-ஜவஹிரி மற்றும் யேமனின் நசிர் அல்-வஹிசிக்கும் இடையே “ஒரு அரிய இடைமறித்து பெறப்பட்ட உரையாடலை” வெளியிட்டு, இந்த தலையீடு பயங்கரவாத அச்சுறுத்தலை தூண்டியது என்று கூறியது.
செய்தி ஊடகம், குறிப்பிட்ட அச்சுறுத்தல் எனப்படுவதை பற்றிய உண்மை ஆதாரம் ஏதும் இல்லாது, தெளிவற்று இருந்தாலும்கூட அரசாங்கத்தின் கூற்றுக்களை விமர்சனமின்றி ஊக்குவிக்க தொடர்கிறது. பெருநிறுவனக் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் செய்தி ஊடகத்தில் இருந்து “பயங்கரவாதத்தின் மீதான போர்” என்பதின் போக்கில் முன்பு வெளிப்பட்ட அச்சறுத்தல்கள் ஆதாரமற்றவை என நிரூபணமாயின என்ற குறிப்பைக் காட்டவில்லை; மேலும் எட்வார்ட் ஸ்னோவ்டென் அம்பலப்படுத்திய அரசாங்கத்தின் ஒற்றுச்செயல்கள் குறித்த ஏராளமான பொய்கள் குறித்தும் குறிப்பு ஏதும் இல்லை.
இரு கட்சிகளையும் சேர்ந்த சட்டமியற்றுபவர்கள், பயங்கரவாத அச்சுறுத்தல் வாய்ப்பை பயன்படுத்தி, அமெரிக்க அரசியலமைப்பை முற்றிலும் மீறி, தேசிய பாதுகாப்பு நிறுவனத்தின் (NSA) பாரிய அளவிலான ஒற்றுக் கேட்டல், தகவல் சேகரித்தல் திட்டங்களை நியாயப்படுத்துகின்றனர். ஆயினும்கூட பயமுறுத்தும் செய்தி ஊடகத் தகவல்களில் தவிர்க்க முடியாத பயங்கரவாத அச்சுறுத்தல் அறிவிப்பு திடீரெனக் கொடுக்கப்பட்டதற்கு பின்னணியில் இழிந்த அரசியல் நோக்கம் இருக்கலாம் என்ற கருத்து ஏதும் தெரிவிக்கப்படவில்லை.
ஒபாமா நிர்வாகம், சட்டமியற்றுபவர்கள் மற்றும் செய்தி ஊடகத்தில் இருந்து, ஸ்னோவ்டென் மீதான இரு மாத தாக்குதல்கள் இருந்தபோதிலும், சமீபத்திய கருத்துக் கணிப்புகளில் பெரும்பாலான மக்கள் ஸ்னோவ்டெனை ஆதரிக்கின்றனர், அவரை ஒற்றர், துரோகி எனச் சித்தரிக்கும் முயற்சிகளை நிராகரிக்கின்றனர் என்றும் காட்டுகின்றன. இதேபோல் கருத்துக்கணிப்புக்கள், பெரும்பாலான மக்கள், அமெரிக்கர்களை பயங்கரவாதிகளிடம் இருந்து காப்பதற்காக ஒற்றுத் திட்டங்கள் தேவை என்னும் இடைவிடா உத்தியோகபூர்வ அறிக்கைகள் இருந்தபோதிலும், பெரிய சகோதரர் செயற்பாட்டு முறைகளை தொடர்ந்து எதிர்க்கின்றனர்.
மேலும் இந்த எச்சரிக்கை, ஆப்கானிஸ்தான் போருக்கும், அமெரிக்கா முழுவதும் செயல்படுத்தப்படும் சிக்கன நடவடிக்கைகளுக்கும், பெருகும் மக்கள் எதிர்ப்பு மற்றும் சீற்றம் இவற்றின் பின்னணியில் வந்துள்ளது. 2008 நிதிய நெருக்கடிக்குப்பின் அமெரிக்க பொருளாதாரம் தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக சரிந்து கொண்டிருக்கும் நிலையிலும் வந்துள்ளது.
ரம்ழான் முடிவை அதிகாரிகள் மேற்கோளிட்டு, அய்மன் அல்-ஜவஹிரி விடுத்துள்ள அச்சுறுத்தல்கள், பிராந்தியத்தில் சிறைகள் உடைப்பு ஆகியவை பயங்கரவாத அச்சுறுத்தல்களுக்கு காரணமாக இருக்கலாம் என்றபோதும், திட்டமிட்ட பயங்கரவாத சதி குறித்து உருப்படியான சான்று ஏதும் அளிக்கப்படவில்லை. வெள்ளை மாளிகை செய்தித்துறை மந்திரி ஜே கார்னே திங்களன்று நிருபர்களிடம் பேசுகையில் தெளிவற்ற முறையிலும், முரண்பாடுடைய விளக்கங்களையும் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் பற்றிக் கொடுத்தார். இது “அரேபிய தீபகற்பத்தில் தோன்றி அங்கேயே இயக்கவும் படலாம்” என்றதுடன், “அதற்கும் அப்பால், இன்னும் பல இடங்களில் பரவும் திறனைக் கொண்டுள்ளது” என்றும் கூறினார்.
தூதரக மூடல்களுக்கு வகை செய்துள்ள உளவுத்தகவல் பற்றி கேட்கப்பட்டதற்கு, கார்னே தகவல் அளிக்க மறுத்துவிட்டார். ஒரு நிருபர், “இந்த அச்சுறுத்தல் எதைப்பற்றி இருக்கலாம் என்பதைக் குறித்த ஊகமில்லாமல் தெரிவிக்கவும்” என்று கேட்டபோது, கார்னே விடையிறுத்தார்: “இந்த குறிப்பிட்ட அச்சுறுத்தலை தோற்றுவித்துள்ளது குறித்து நான் ஏதும் கூறவதற்கில்லை... இது பற்றி உங்களுக்குத் தெரிவிக்க என்னிடம் குறிப்பான தகவல் ஏதும் இல்லை, அத்துடன் எவை தொடர்புடையது என்றும் தெரியவில்லை.”
வெளியுறவுச் செயலக செய்தித் தொடர்பாளர்கள் ஜேன் சாகியும் மேரி ஹார்பும் தூதரக மூடல்கள் “அதி உயர் எச்சரிக்கையை ஒட்டி” உத்தரவிடப்பட்டுள்ளன என்னும் மந்திரத்தைத்தான் திரும்பத்திரும்பக் கூறினர். இது இடக்கரடக்கலாக, அரசாங்கம் நம்பத்தகுந்த, குறிப்பான சான்றை பயங்கரவாத அச்சறுத்தல் என்று கூறப்படுவதை பற்றி அளிக்க இயலாது என்பதைத்தான் காட்டுகிறது.
ஒரு புதிய பயங்கரவாத தாக்குதலுக்கான சாத்தியத்தை நிராகரிக்க முடியாது. மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவில் இருக்கும் மக்களுக்கு எதிரான வன்முறை, அச்சுறுத்தல்களை தளம் கொண்ட அமெரிக்க வெளியுறவுக் கொள்கை, பிராந்தியத்தில் இருக்கும் எண்ணெய் சர்வாதிகாரிகளுக்கு ஆதரவு, பாலஸ்தீனியர்களை அடக்கும் இஸ்ரேலிய அடக்குமுறைக்கு ஆதரவு ஆகியவை பயங்கரவாதக் குழுக்களுக்கு வளம் மிக்க நிலம்தான். புதிய அச்சுறுத்தல் என்பதின் மையம் என சுட்டிக்காட்டப்படும் யேமன் பல ஆண்டுகளாக அமெரிக்க டிரோன் தாக்குதல்களுக்கு இலக்கு ஆகும்; இவற்றில் நூற்றுக்கணக்கான நிரபராதி குடிமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இத்தகைய மூன்று தாக்குதல்கள் கடந்த சில வாரங்களில் நடைபெற்றுள்ளது.
ஜனாதிபதி ஒபாமா சொந்தமுறையில் யேமனில் டிரோன் தாக்குதல்களுக்கு ஒப்புதல் கொடுத்துள்ளார்; அவற்றில் மூன்று அமெரிக்க குடிமக்கள், அன்வர் அல்-அவ்லகி, சமீர் மாக் மற்றும் அப்துல் ரஹ்மான் அல் அவ்லகி ஆகியோர் இறந்து போயினர்.
இராணுவம், உளவுத்துறை நிறுவனங்களின் சார்பில் காங்கிரசில் உள்ள எடுபடிகள், முற்றிலும் இழிந்த முறையில், பயங்கரவாத அச்சுறுத்தலை எடுத்துக்கொண்டு அதை NSA உடைய ஒற்றுத் திட்டங்களைக் பாதுகாக்க பயன்படுத்துகின்றனர். “இதில் நல்ல செய்தி உளவுத்துறையை நாம் கொண்டிருப்பது” என்றார் ஜனநாயக பிரதிநிதி மேரிலாந்தின் டச் ருப்பர்ஸ்பெர்ஜேர். “அதுதான் நாம் செய்யவேண்டியது. அதைத்தான் NSA செய்கிறது.”
“என்ன நடக்கிறது என்பதை அவர்கள் கேட்க முடிகிறது.” என்றார் நியூ யோர்க்கின் ஜனநாயகக் கட்சி செனட்டரான சார்ல்ஸ் ஷ்யூமர். “பல, பல பயங்கரவாத சதித்திட்டங்களை அவர்கள் தடைக்கு உட்படுத்தியுள்ளனர், இதையும் தடுப்பார்கள் என நம்புவோம்.”
“பாதுகாப்பு என்பது நம் சமூகத்திற்கு முற்றிலும் தேவை என்பதை மறுபடியும் நாம் கற்கிறோம், மறுபடியும் வலியுறுத்துகிறோம்.” என்றார் கனக்டிக்டின் ஜனநாயக செனட்டர் ரிச்சார்ட் ப்ளூமென்தால்.
“NSA திட்டம் அதன் மதிப்பை மீண்டும் நிரூபித்துள்ளது” என்றார் தென் கரோலினாவில் குடியரசுக் கட்சி செனட்டர் லிண்சே கிரகாம்.
ஜோர்ஜியாவின் குடியரசு செனட்டர் சாக்ஸ்பி சேம்ப்ளிஸ் NBC உடைய “Meet the Press” நிகழ்ச்சியில் நடைபெறும் பயங்கரவாதப் “பேச்சு” “9/11க்கு முன் நாம் கண்டதை நினைவுபடுத்துகிறது.” என்றார்.
இந்த முக்கிய சட்டமியற்றுபவர்கள், தங்கள் கருத்துக்களினால் ஒரு பொலிஸ் அரசு சுமத்தப்படுவதற்கான ஆதரவைத் தெளிவுபடுத்தியுள்ளனர்.
அரசாங்கமே, ஜனநாயக உரிமைகள்மீது புதியதாக்குதல்களையும், ஒருவகை இராணுவச் சட்டத்தை சுமத்துவதற்கு, பயங்கரவாத நிகழ்வை போலிக்காரணமாக பயன்படுத்தி தயாரிக்கிறது என்ற கருத்தை ஒதுக்கிவிட முடியாது. குறிப்பாக NSA வெளிப்பாடுகளுக்குப் பின், ஒரு புதிய பயங்கரவாதத் தாக்குதல் இராணுவம் மற்றும் உளவுத்துறை கூட்டின் பெருகும் சக்திக்கு எதிரான பொதுமக்கள் விரோதப் போக்கை மாற்றக்கூடும் என அமெரிக்க செய்தி ஊடகத்தில் பலமுறை கருத்துக்கள் வந்துள்ளன, மேலும் அமெரிக்கா “இராணுவச் சட்டத்தில் இருந்து ஒரு பயங்கரவாதக்கு தொலைவில்தான் உள்ளது.”
இன்றுவரை, செப்டம்பர் 11, 2001 தாக்குதல் குறித்து நம்பகமான விளக்கத்தை அரசியல் நடைமுறை கொடுக்கவில்லை. இதைச் செய்தவர்களில் பலர் FBI, CIA இற்கு நன்கு தெரிந்தவர்கள், பல மாதங்கள் பின் தொடரப்பட்டனர், கண்காணிக்கப்பட்டனர். ஒவ்வொரு பயங்ரவாத தாக்குதலுக்கு பின் இதே நிலைதான் உள்ளது. 9 /11 முதல், 2009 கிறிஸ்துமஸ் தினத்தன்று நைஜீரிய நாட்டை சேர்ந்தவர் டெட்ரோயிட்டிற்கு மேல் வணிக ஜெட் ஒன்றைக் கவிழ்க்கும் தோல்வி, போஸ்டன் நெடுந் தொலைவு ஓட்டத்தின்போது நடைபெற்ற குண்டுத்தாக்குதல் வரை, நடத்தியதாக கூறப்பட்டவர்கள் அமெரிக்க கண்காணிப்பில் இருந்துள்ளனர், அப்படியும் தங்கள் தாக்குதல்களை நடத்த முடிந்தது, அல்லது தாக்குதல்களை நடத்த முற்பட்டனர்.
நான்கு மாதங்களுக்கும் குறைவான காலத்திற்கு முன்பு, போஸ்டனும் அதன் சுற்றுப் பகுதிகளும் இராணுவ பொலிஸ் கட்டுப்பாட்டின் கீழ் வைக்கப்பட்டிருந்தன; ஜனநாயக உரிமைகள் இடைநிறுத்தப்பட்டன, கலகப் பிரிவுப் பொலிசார் வீடுகளில் ஆணையின்றிச் சோதனையிட்டனர். பொதுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது; வீடுகளிலேயே மக்கள் நகராமல் இருக்கமாறு “பாதுகாப்பு உறைவிட” உத்தரவு வெளியிடப்பட்டது.
போஸ்டன் மூடலில் இருந்து, அமெரிக்கா முழுவதும் முக்கிய நகரங்களில் நகர்ப்புற போர்முறைப் பயிற்சிகள் இருந்தன; அந்நகரங்களுள் லாஸ் ஏஞ்சல்ஸ், சிக்காகோ ஆகியவையும் அடங்கும். இப்பயிற்சிகள், பொதுமக்கள் இராணுவ, பொலிஸ் படைகளின் நிலைப்பாட்டிற்கு பழக்கமாக்கும் நோக்கத்தைக் கொண்டவை – இராணுவ ஹெலிகாப்டர்கள், கவச வாகனங்கள் ஆகியவை அவற்றிற்கு ஆதரவு கொடுத்தன; அமெரிக்க நகரங்களின் தெருக்களில் இவை செயல்படுத்தப்பட்டன.
ஒபாமா நிர்வாகம், புஷ்ஷின் கீழ் தொடங்கிய “பயங்கரவாதத்தின் மீதான போர்” என்ற தந்திரோபாயத்தை தொடர்கிறது, அவரோ வேண்டுமென்றே பீதிச்சூழலை உருவாக்கி, ஜனநாயக உரிமைகள் மீது பாரிய தாக்குதலை எளிதாக்கவும், பொலிஸ் அரச கருவியை கட்டமைக்கவும் முற்பட்டார்.
No comments:
Post a Comment