Saturday, August 3, 2013

எட்வர்ட் ஸ்னோடென் ரஷியாவில் தற்காலிகத் தஞ்சம் பெறுகிறார். By Thomas Gaist

வியாழன் அன்று உள்ளூர்நேரம் பிற்பகல் 3.30க்கு, எட்வர்ட் ஸ்னோடென் மாஸ்கோ விமானநிலைய இடைத்தங்கல் பகுதியை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டார். ஐந்து வாரங்களுக்கும் மேல் அவர் அங்கு பொறியில் அகப்பட்டது போல் இருந்தார். ரஷியாவினால் ஸ்னோடனுக்கு தற்காலிகத் தஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது. அவர் குறைந்தப்பட்சம் அந்நாட்டில் ஓராண்டு வசிக்க அனுமதிக்கப்படலாம்.

வாஷிங்டனின் சர்வதேச பழிவாங்கும் தன்மையினால் அவர் உடலியல்ரீதியாக ஆபத்தை முகங்கொடுப்பது குறித்த தீவிரநிலையை அடையாளம் காட்டுவது போல், ஸ்னோடென் ஒரு இரகசிய இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டார்.

“கடந்த எட்டு வாரங்காள ஒபாமா நிர்வாகம் சர்வதேச அல்லது உள்நாட்டுச் சட்டத்திற்கு மதிப்புக் காட்டுவதில்லை என்பதைக் கண்டோம்; இறுதியில் சட்டம் வெற்றி பெறுகிறது என்று தஞ்சம்கொடுக்கும் சான்றிதழை பெறும்போது ஸ்னோடன் கூறினார்.

எதிர்பார்த்தபடி தஞ்சம் வழங்கப்பட்டமை அமெரிக்க அதிகாரிகளிடம் இருந்து கண்டனங்களையும் பதிலடி அச்சறுத்தல்களையும் தூண்டியுள்ளது.

அமெரிக்காவும் பிற முதலாளித்துவ அரசாங்கங்களும் நிறுவியுள்ள எங்கும் படர்ந்த கண்காணிப்பிற்கு எதிர்ப்பின் சர்வதேச அடையாளமாக ஸ்னோடென் மாறிவிட்டார். எனவே அவர் அமெரிக்க இராணுவ உளவுத்துறைப் பிரிவிற்குள்ளும், பெருநிறுவன-நிதியத் தன்னலக்குழுவின் பாரிய அதிருப்திக்கும் வெறுப்பிற்குமுரியவராகவும் மற்றும் அரசாகத்தினுள்ளும் முன்னணி எதிராளியான நபர் என்பதற்கான மூலஆதாரமாகிவிட்டார்;

ஒபாமாவின் வெள்ளை மாளிகை அரசாங்கத்தின் குற்றத்தை அம்பலப்படுத்தும் வெளிக்கொண்டுவருபவர்களை முந்தைய நிர்வாகங்களைவிட கூடுதலாக இலக்கு கொண்டுள்ளது. ஸ்னோடென் இந்நடவடிக்கையின் மையத்தில் உள்ளார். ரஷியாவில் அவரைத் தங்க அனுமதித்துள்ளது நிர்வாகத்திடம் இருந்து பெரும் கண்டனத்திற்கு உள்ளாகியிருக்கிறது.

“ரஷியக் கூட்டமைப்பு இந்நடவடிக்கை எடுத்தது குறித்து நாங்கள் பெரிதும் ஏமாற்றம் அடைந்துள்ளோம்” என்றார் வெள்ளை மாளிகையின் செய்திச் செயலர். “இது ஒரு சாதகமான நிகழ்வு அல்ல என்பது வெளிப்படை” என்று கூறிய கார்னே பதிலடியாக வெள்ளை மாளிகை திட்டமிட்ட மாஸ்கோ பயணம் ஒன்றை இரத்து செய்யக்கூடும் என்று தெரிவித்தார்.

“அவர் ஒன்றும் மாறுபட்ட கருத்துக்காரர் அல்ல. திரு.ஸ்னோடென் ஒரு தகவல் வெளிக்கொண்டுவருபவரல்ல. அவர் இரகசியத் தகவலைக் கசியவிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். மூன்று பெரும் குற்றச்சாட்டுக்கள் உள்ளன, விரைவில் அவர் அமெரிக்காவிற்கு அனுப்பப்படவேண்டும், அங்குத்தான் அவர் உரிய சட்ட வழியையும் பாதுகாப்புக்களையும் பெற முடியும்.” என கார்னே தெரிவித்தார்.

ஸ்னோடென் உரிமைகள் சட்டத்தில் அனைவருக்கும் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள உரிய வழக்குவிசாரணை பாதுகாப்புக்களைப் பெறுவார் என்று வலியுறுத்தும் தேவை கார்னேக்கு ஏற்பட்டது. இதற்குக் காரணம் ஒபாமா நிர்வாகம் ஏற்கனவே அமெரிக்கக் குடிமக்களை முறையான வழக்குவிசாரணையின்றிக் கொன்றுள்ளதுடன், நிர்வாகத்தின் சிறப்பு உரிமையாக சட்டத்திற்கு அப்பாற்பட்ட இலக்கு வைத்த கொலைகள் இருக்கும் என்று தொடர்ந்து கூறுகிறது.

சட்டமியற்றுபவர்களும் ஸ்னோடெனையும் ரஷிய அரசாங்கத்தையும் கண்டிப்பதில் சேர்ந்து கொண்டனர். “ரஷியா எங்களை முதுகில் குத்திவிட்டது, ஸ்னோடென் சுதந்திரமாகச் சுற்ற அனுமதிக்கப்படும் ஒவ்வொரு நாளும் கத்தியின் மூலம் மற்றொரு தாக்குதல்” என்றார் ஜனநாயகக் கட்சி நியூயோர்க் செனட்டர் சார்ல்ஸ் ஷ்யூமர். ஸ்னோடெனை ஒரு “கோழை” என்றும் “ஓடிவிட தீர்மானித்துள்ளார்” என்றும் அவர் கூறினார்.

அரிசோனாவின் குடியரசு செனட்டர் ஜோன் மக்கெயின் தஞ்சம் கொடுத்துள்ளது “எல்லா அமெரிக்கர்கள் கன்னத்திலும் அறைந்தது போல் ஆகும்” என்றும் அமெரிக்க-ரஷிய உறவுகள் “அடிப்படையிலேயே மறு சிந்தனைக்கு உட்படுத்துதல் தேவை” என்றும் கூறினார்.

“எட்வர்ட் ஸ்னோடென் ஒரு தப்பி ஓடுபவர், அமெரிக்க நீதிமன்றத்தில் இருக்க வேண்டியவர், ரஷியாவில் தஞ்சம் பெறத் தகுதி அற்றவர்” என்று ஜனநாயகக் கட்சியின் நியூஜேர்சி செனட்டர் ரோபர்ட் மெனன்டெஸ். இச்செயல் “அமெரிக்க-ரஷிய உறவுகளில் ஒரு பின்னடைவு” எனக் குறிப்பிட்ட மெனென்டெஸ் “அமெரிக்கத் தேசிய நலன்களுக்கு இது பெரும் சேதத்தை அளிக்கும், பயங்கரவாதிகளுக்கு உதவும்” என்றார்.

ஓக்லஹோமா குடியரசு செனட்டர் டோம் கோபர்ன், ஸ்னோடென் “நம் நாட்டிற்கு ஒரு துரோகி” என்றார்.

தற்காலிகத் தஞ்சத்தை கொடுத்திருக்கையில், ரஷிய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் அமெரிக்காவுடனான சுமுகமான உறவுகளில் ஸ்னோடென் விவகாரம் குறுக்கிட விரும்பவில்லை என்று பலமுறை கூறியுள்ளார். புட்டினின் ஓர் உதவியாளரான யூரி வி.உஷ்ஹகோவ் ஸ்னோடென் விவகாரம் “அதிகம் முக்கியத்துவம் கொடுக்கவேண்டிய விவகாரம் அல்ல” என்றார்.

ஸ்னோடனுக்குக் கொடுக்கப்பட்டுள்ள தஞ்சம் அவர் அனைத்து அரசியல் செயல்களையும் நிறுத்துவதில் தங்கியுள்ளது. “நம் அமெரிக்கப் பங்காளிகளைச் சேதப்படுத்தும் நோக்கம் உள்ள வேலையை அவர் நிறுத்த வேண்டும்” என்று புட்டின் வலியுறுத்தியுள்ளார்.

ஸ்னோடெனுடைய உயிர் இன்னும் ஆபத்தில்தான் உள்ளது. அமெரிக்க அரசாங்கம் இதில் சந்தேகத்திற்கு இடம் வைக்கவில்லை. அரசாங்கத்தின் விரோதிகள் எந்தவிடச் சட்டநயங்களும் இன்றி கொல்லப்படலாம். ஸ்னோடென் வாழ அனுமதிக்கப்படுவாரா அல்லது படுகொலைக்கு இலக்காவாரா, என்பது உயர்மட்ட அமெரிக்கதிகாரிகளின் அரசியல் தந்திரோபாயத்தைப் பொறுத்துள்ளது.

ஸ்னோடென் விவகாரத்தின்போது ஒற்றுச்செயல்கள் பற்றி சமீபத்தில் வெளிவந்துள்ள தகவல் அசாதாரண முறையில் குறிப்பிடத்தக்கதும், பெரும் நாசமளிப்பதுமாகும். தஞ்சச் செய்திக்கு முதல் நாள், கார்டியன் பத்திரிகை ஸ்னோடென் கசியவிட்ட மற்றொரு அறிக்கையை வெளியிட்டது. அதில் NSA உடைய “மிகப்பரந்தளவிலான” இணையத்தள ஒற்றாடல் செயலாக XKeyscore எனப்பட்டது இருந்தது அறியப்பட்டுள்ளது. இது தனிநபர்களின் மின்னஞ்சல்களைப் படித்தலுடன் ஏனைய செயல்களுடன் கூடிய இணையத்தளக் கண்காணிப்பு வலையாகும்.

CNN.com கருத்துப்படி XKeyscore, “இணையத் தளத்தில் நீங்கள் என்ன செய்திருந்தாலும் அதைக் கிடைக்கச் செய்யும், தகவல் ஆராய்தல், தேடுதல்கள், உங்கள் மின்னஞ்சல்களின் பொருளுரைகள், வலைத்தள உரையாடல்கள், உங்கள் முழுத் தகவல்கள் அனைத்தும் keyboard இனை தட்டினால் கிடைக்கும்.... இத்திட்டம் பகுப்பாய்வாளர்களுக்கு உங்கள் தகவல் தரவு முழுவதையும் ஆராயும் திறனை எவ்வித முன் அனுமதியும் இன்றி அளிக்கும் -- எந்த அனுமதி ஆணையும் கிடையாது, நீதிமன்ற உத்தரவு கிடையாது, புள்ளி வைக்கப்பட்ட இடத்தில் கையெழுத்து தேவையில்லை. பகுப்பாய்வாளர் ஒரு சாதாரண கணணித்திரை படிவத்தை நிரப்ப வேண்டும், சில வினாடிகளில் உங்கள் வலைத்தள வரலாறு அந்தரங்கமற்றுப் போய்விடும்”.

ஒபாமாவில் இருந்து கணக்கற்ற காங்கிரஸ் உறுப்பினர்கள், செனட்டர்கள் கண்காணிப்பு “அமெரிக்கர்களை இலக்கு கொள்ளவில்லை” என்று உறுதிப்படுத்தினாலும், XKeyscore தான் விரும்பும் வகையில் அனைவருடைய தரவுகளை தேடும் திறனை அரசாங்கப் பகுப்பாய்வாளர்களுக்குக் கொடுக்கிறது.

1 comment:

  1. ஸ்னோவ்டனுக்கு இலங்கை அரசி்யல் தஞ்சம் கொடுக்க வேண்டும்.

    அமெரிக்காவே ஏனைய மேற்குலக நாடுகளோ அவரை ஒப்படைக்க கேட்கும் பட்சத்தில் இலங்கைக்கு எதிராக செயற்படும் ருத்ர குமாரன் உட்பட அனைவரையும் இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டும் எனக் கேட்க வேண்டும்.

    ReplyDelete