Saturday, August 24, 2013

எகிப்திய நீதிமன்றம் சிறையிடப்பட்ட முன்னாள் சர்வாதிகாரி ஹொஸ்னி முபாரக்கை விடுவிக்க உத்தரவிடுகிறது! By Alex Lantier

எகிப்தின் நீண்டக்கால சர்வாதிகாரி ஹொஸ்னி முபாரக் சிறையில் இருந்து பிணையில் விடுவிக்கப்பட வேண்டும் என்று கெய்ரோ குற்றவியல் நீதிமன்றம் ஒன்று உத்தரவிட்டுள்ளது. இது அப்பட்டமாக எகிப்திய இராணுவ ஆட்சிக் குழுவின் எதிர்ப்புரட்சி செயற்பட்டியலை வெளிப்படுத்துகிறது.

தீர்ப்பை எதிர்த்து அரசாங்கம் முறையீடு செய்ய அனுமதி உள்ள 48 மணிநேரத்திற்கு முபாரக் சிறையில் இருப்பார் என்று நீதிமன்றம் கூறினாலும், அரசாங்க வக்கீல் அஹ்மத் எல்-பஹ்ரவி ராய்ட்டர்ஸிடம் முபாரக்கிற்கு அரசாங்க நாளேடு அல் அஹ்ரம் கொடுத்ததாக கூறப்படும் பணங்கள் தொடர்புடைய வழக்கில் தீர்ப்பு “இறுதியானது”, மேல்முறையீடு செய்ய முடியாது என்றார். முபாரக்கின் வக்கில் பரித் அல்-தீப் தன் கட்சிக்காரர் இன்றே விடுவிக்கப்படக்கூடும் என்றார்.

எகிப்திய பிரதம மந்திரி ஹசிம் எல்-பெப்லவியின் அலுவலகம் நேற்று எகிப்தில் இராணுவ ஆட்சி சுமத்தியுள்ள அவசரகால விதியின்படி முபாரக் வீட்டு காவலில் வைத்திருக்கப்படுவார் என்று கூறினார். முன்பு முபாரக் டோரா சிறையில் வைக்கப்பட்டிருந்தார்.

இராணுவ ஆட்சி மூலம், ஊழல் குற்றச் சாட்டுக்களில் இருந்து முபாரக் விடுவிக்கப்பட்டுள்ளது, வெறுக்கத்தக்க சர்வாதிகாரியின் புனர்வாழ்விற்கான சட்டபூர்வ, அரசியல் மூலோபாயத்தின் ஒரு பகுதியாகும், அதேபோல் இந்நடவடிக்கை புரட்சிக்கு முன் இருந்த நிலைமைகளை மீட்கும். இந்த சட்டபூர்வ மூலோபாயத்தின் மையத்தில், அவரை அகற்றிய 2011 புரட்சியின் போது பொலிஸ் குண்டர்களும், துப்பாக்கிதாரிகளும் ஏராளாமான தொழிலாளர்கள், இளைஞர்களை கொன்றதன் பொறுப்பில் இருந்து முபாரக்கை நீக்கும் முயற்சி உள்ளது.

85 வயதான முன்னாள் ஜனாதிபதி 2011 எழுச்சியின்போது பொலிசார் 800 எதிர்ப்பாளர்களை கொல்லுவதற்கு உடந்தை என்னும் குற்றச்சாட்டுக்களில் கடந்த ஆண்டு ஆயுள் தண்டனை பெற்றார். எனினும் முபாரக் அத்தீர்ப்பை எதிர்த்து முறையீடு செய்தார். நேற்றைய தீர்ப்பு, அவர் ஆகஸ்ட் 25 வரை, அவருடைய மனுவான கொலைக்குற்றங்களுக்கு மறு விசாரணை வரை காவலில் இல்லாமல், சுதந்திரமாக இருக்க அனுமதிக்கும்.

இன்னும் பரந்த முறையில், முபாரக்கிற்கு மறுவாழ்வு கொடுக்கும் நடவடிக்கை, இராணுவ ஆட்சிக்குழு தன் அதிகாரத்தை பலப்படுத்தி தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல்களை நடத்த நகர்வதின் இணைந்த பகுதியாகும்.

ஆட்சிக்குழு தன்னுள் முன்னாள் முபாராக் ஆட்சியின் கூறுபாடுகளைத்தான் பெரிதும் கொண்டுள்ளது. இது ஜூலை 3 ஆட்சி சதியை, இஸ்லாமியவாத ஜனாதிபதி மகம்மது முர்சிக்கு எதிராக தமரோட் (“எழுச்சி”) கூட்டின் ஆதரவுடன் தொடக்கியது; அதற்கு முக்கிய முபாரக் சகாப்த நபர்களான முன்னாள் வெளியுறவு மந்திரி அமர் மூசா மற்றும் முன்னாள் விமானப் போகுவரத்து மந்திரி அஹ்மத் ஷபிக் போன்றவர்களின் ஆதரவு இருந்தது. தமரோட்டிற்குள் இந்நபர்கள் தாராளாத, போலி இடது சக்திகளான எல் பரடேயின் தேசிய மீட்பு முன்னணி, தவறாகப் பெயரிடப்பட்டுள்ள புரட்சிகர சோசலிஸ்ட்டுக்கள் (RS) போன்றோருடன் இணைந்து உழைத்தனர்.

அதிகாரத்திற்கு வந்ததில் இருந்து இராணுவ ஆட்சிக்குழு பலமுறையும் ஆட்சி சதியை எதிர்த்தவர்களை படுகொலை செய்துள்ளது; கிட்டத்தட்ட 1000 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 6000 பேர் காயமுற்றனர் என்று உத்தியோகபூர்வ புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இக்குற்றங்கள் ஆட்சிக் குழுவிற்கு இன்னும் அதிக ஊக்கத்தை, அவர் மேற்பார்வையிட்ட வெகுஜனக் கொலைகளுக்கான பொறுப்பில் இருந்து முபாரக்கை அகற்ற ஊக்கத்தை கொடுக்கின்றன.

இராணுவ ஆட்சிக்குழு, முபாரக்கிற்கு மறு வாழ்வு கொடுக்கும் நடவடிக்கைகள் பரந்த அளவில் செல்வாக்கற்றவை; பல செய்தி ஊடக ஆதாரங்கள் இது புதிய வெகுஜன எதிர்ப்புக்களை தூண்டுமோ என்று ஊகிக்கின்றன.

தற்பொழுது இராணுவ ஆட்சிக்குழுவில் இருக்கும் முபாரக்கின் முன்னாள் ஆட்சிக் கூறுபாடுகள், தாராளவாத மற்றும் போலி இடது சக்திகளின் ஆதரவைக் கொண்டுள்ளன; அவை தமரோட்டில் சேர்ந்துள்ளன, அல்லது அத்துடன் ஒத்துழைத்துள்ளன. ஒரு எகிப்திய நீதிபதியும் வாஷிங்டனில் இருக்கும் அட்லான்டிக் சிந்தனைக் குழுவில் அங்கம் வகிக்காத உறுப்பினருமான யூசெப் ஔப் கூறினார்: “கடந்த ஓராண்டாக தாராளவாதிகள் முர்சியை விமர்சிப்பதன் பாகமாக நீதித்துறையை ஆதரித்தனர். இந்த தீர்ப்பை அவர்கள் விமர்சிக்க முடியாது.”

டைம் ஏட்டினால் தொடர்பு கொள்ளப்பட்டபோது, கெய்ரோவில் உள்ள தமரோட் அலுவலகங்களில் இருக்கும் அதிகாரிகள், முபாரக் விடுவிக்கப்படுவது குறித்து எந்த எதிர்ப்புக்களுக்கும் ஏற்பாடு செய்யப் போவதில்லை என உறுதிப்படுத்தினர்.

சிக்கன நடவடிக்கை மற்றும் இராணுவ சர்வாதிகாரத்திற்கு எதிரான தொடர்ந்த புரட்சிகரப் போராட்டங்களுக்கு தளம் தொழிலாள வர்க்கம்தான்; இதுதான் அனைத்து முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் அவற்றின் போலி இடது, மத்தியதர வகுப்பு சுற்று வட்டங்களுக்கு எதிராகப் போரிடுகிறது.

இரண்டு ஆண்டுக்கால புரட்சி, மற்றும் முர்சிக்கு எதிராக இந்த ஆண்டு முன்னதாக நடைபெற்ற சக்திவாய்ந்த வேலைநிறுத்த, எதிர்ப்பு அலைகளுக்குப் பின், தாராளவாத முதலாளித்துவத்தினரும் அதன் உடன் நெருக்கமாக உள்ள மத்தியதர வர்க்கத்தின் வசதியான பிரிவுகளும் இராணுவம் மற்றும் புதிய ஆட்சி ஆகியவற்றின் பின் உறுதியாக நிற்கின்றன. முபாரக் விடுதலையை சிறிதும் பொருட்படுத்தாது மற்றும் உள்நாட்டு அரசியல் எதிர்ப்பை நசுக்கும் “பயங்கரவாதத்தின் மீதான போருக்கு” காட்டும் ஆதரவும் உச்சக்கட்ட வெளிப்பாட்டைக் காண்கிறது.

ஆயுதமற்ற எதிர்ப்பாளர்களை தொடர்ந்து கடந்த ஆறு வாரங்களாக படுகொலைகள் செய்தபின், இராணுவம் முர்சியின் முஸ்லிம் சகோதரத்துவத்தின் முக்கிய தலைவர்களை கைது செய்து சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்கிறது. செவ்வாயன்று எகிப்திய அதிகாரிகள், முஸ்லிம் சகோதரத்துவத்தின் ஆன்மிக வழிகாட்டி முகம்மது பேடியை, கெய்ரோ மாவட்ட நாசர் நகரத்தில் உள்ள ஓர் உள்ளிருப்பு முகாமைத் தாக்கி பாதுகாப்புப் படைகள் காவலில் வைத்தனர்.

நேற்று முஸ்லிம் சகோதரத்துவத்தின் அரசியல் கட்சியான Freedom and Justice Party இன் செய்தித் தொடர்பாளர் மௌரட் அலி கெய்ரோ விமான நிலையத்தில் இத்தாலிக்கு பயணிக்கப் புறப்படுகையில் கைது செய்யப்பட்டார்.

அதிதீவிர வலதுசாரி சலாஃபி மதகுரு சப்ஃவாட் ஹெகாசியும் ஒரு சோதனைச் சாவடியில் மேற்கு எகிப்தில் Siwa Oasis அருகே, லிபிய எல்லையை ஒட்டிக் கைது செய்யப்பட்டார். இப்பகுதி, 2011ல் நேட்டோ லிபிய கேர்னல் முயம்மர் கடாபியின் ஆட்சியை அகற்றியதில் இருந்து பெரிதும் இஸ்லாமியப் போராளிகளின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. எகிப்திய பாதுகாப்புப் பிரிவினர், ஹெகாசி, தன் தாடியைக் குறைத்து அதைக் கறுப்பு வண்ணத்தில் நிறமடித்து, உள்ளூர் நாடோடி போல் உடையணிந்து மாறுவேடத்தில் இருந்தார் என்று கூறினர்.

ஏகாதிபத்திய சக்திகள், குருதிக்களரியில் இருந்து தங்களை ஒதுக்கிக் கொள்ளும் வகையில் ஒரு சில வெற்றுத்தன விமர்சனங்கள் வெளியிடும் அதே நேரத்தில் தங்கள் ஆதரவை இராணுவ ஆட்சிக் குழுவிற்கு தொடர்கின்றனர். ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு மந்திரிகள் நேற்று பிரஸ்ஸல்ஸில் “அவசர பேச்சுக்களை” நடத்தி எகிப்தில் வன்முறையை எப்படி எதிர்கொள்வது என நிர்ணயிக்க முற்பட்டனர். எகிப்திற்கு இராணுவக் கருவிகளை அனுப்புவதின் ஏற்றுமதி உரிமங்களை நிறுத்தலாம் என்ற முடிவிற்கு வந்தனர்; மற்றும் எகிப்து இராணுவத்தின் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து “மறு மதிப்பீடு” செய்ய வேண்டும் என்றும் ஒப்புக் கொண்டனர்.

ஆனால் ஐரோப்பிய ஒன்றியம், இராணுவ ஆட்சிக் குழுவை உறுதிப்படுத்த உதவும் வகையில், அத்துடன் சமரசம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்கிறது. ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கை தலைவர் காத்திரின் ஆஷ்டோன், தான், ஆட்சிக் குழுவிற்கும் முஸ்லிம் சகோதரத்துவத்திற்கும் இடையே நடக்கும் பேச்சுக்களில் மத்தியஸ்தராக இருக்க விரும்புவதாக குறிப்புக் காட்டியுள்ளார். இதற்கான “நம்பிக்கையை கட்டமைக்கும் நடவடிக்களையும்” முன் வைத்துள்ளார்.

செவ்வாயன்று வாஷிங்டனில் உள்ள மூத்த அமெரிக்க அதிகாரிகள், எகிப்திய இராணுவத்திற்கு கொடுக்கும் வருடாந்திர அமெரிக்க நிதிய உதவியான 1.3 பில்லியன் டாலர்களை குறைப்பதா என்று விவாதித்தனர்; இந்நிதி அமெரிக்க ஆயுதங்களை வாங்க பயன்படுத்தப்படுகிறது. நேற்று வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர், ஒபாமா நிர்வாகம் எகிப்திற்கு கொடுக்கும் உதவியை வெட்ட இருக்கிறது என்னும் தகவல்களை மறுத்தார், எகிப்திய இராணுவத்திற்கு அமெரிக்க நிதியுதவி தொடரும் என்றுதான் தோன்றுகிறது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com