Sunday, August 25, 2013

குற்றச்சாட்டை வன்மையாக கண்டித்தார் வனிகசூரிய! ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்களே கொள்ளையில் ஈடுபட்டனர்!

மந்தனா இஸ்மாயில் எனும் ஊடகவியலாளரின் வீட்டை கொள்ளையிட வந்த சந்தேக நபர்கள் படையினருடன் தொடர்புடையவர்கள் என சுமத்தப்படும் குற்றச்சாட்டை இராணுவம் முற்றாக நிராகரித்துள்ளது.

இவ்வாறு கொள்ளையிட வந்த 5 பேரில் ஒருவர் இராணு வத்தின் முன்னாள் உறுப்பினர் ஒருவராவார். அவர் 2009 ஆம் ஆண்டு திருட்டுச் சம்பவம் தொடர்பாக ஒழுக்காற்று விசாரணை நடத்தப்பட்டு இராணுவத்திலிருந்து நீக்கப்பட்ட ஒருவரும், இந்த மோதலில் கொல்லப்பட்ட இந்திக்க சம்பத் என்பவரும் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் ரோஹித்த லக்ஷ்மன் என்பவரும் சகோதரர்களாவர். சம்பவத்துடன் தொடர்புடைய 3 பேரும் ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்கள் என இhணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வனிகசூரிய கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

இந்த குற்றச்சாட்டு இராணுவத்தினர் மீது சுமத்தப்பட்டிருப்பதை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். இந்த குற்றச்சாட்டில் எந்தவித உண்மையும் இல்லை. இந்த சம்பவத்துடன் 2 இராணுவத்தினர் தொடர்புபட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அவர்கள் தற்போது இராணுவத்தில் பணியாற்றவில்லை. அவர்கள் இருவரும் இராணுவத்திலிருந்து தப்பி சென்றவர்கள். பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் உண்மைகள் விரைவில் வெளியாகும். ஒரு ஊடகவியலாளருக்கு மட்டுமல்ல சமூகத்தில் வேறு ஒருவருக்க கூட இது போன்ற சம்பவங்கள் நிகழ்வதை நாம் அனுமதிக்க மாட்டோம் என தெரிவித்துள்ளார்.

இதேவேளை பம்பலப்பிட்டியவில் ஊடகவியலாளரின் வீட்டை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பாக ஒரு சிலர் அரசியல் இலாபமீட்ட முயற்சிப்பதை அரசாங்கம் வன்மையாக கண்டித்துள்ளது.

பம்பலப்பிட்டி பகுதியிலுள்ள ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பாக சில ஊடகங்கள் பிழையான கருத்துக்களையும் செய்திகளையும் திரிபுபடுத்தி வெளியிட முயற்சிப்பதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தின் மூலம் அரசியல் இலாபமீட்டுவதற்கு முயற்சிப்பதை அரசாங்கம் வன்மையாக கண்டிப்பதாக அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பம்பலப்பிட்டி பொலிஸ் பிரிவில் கடந்த சில நாட்களாக பல வீடுகள் கொள்ளையிடப்பட்டுள்ளதுடன் திருட்டுச் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. இக்குற்றச்சம்பவங்கள் காரணமாக பல பொலிஸ் குழுக்கள் இரவு காலங்களிலும் அம்பகுதியில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. ஏற்கனவே இடம்பெற்ற குற்றச் செயல்களிலும் தொடர்புடையவர்கள் இச்சம்பவத்தில் தொட்ர்பு பட்டிருக்கலாமென பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பான விசாரணை இடம்பெறுவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com