பிள்ளைகளை பாடசாலை அனுப்பாத பெற்றோருக்கு தண்டனை!
5 வயது முதல் 16 வயது வரையான சகல பிள்ளைகளுக்கும் கல்வியினை கட்டாயப்படுத்த வேண்டும் எனவும் பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்பாத பெற்றோரை தண்டிக்க சட்டம் அமைக்க வேண்டும் எனவும் கல்விச் செயற்பாடுகள் தொடர்பான விசேட பாராளுமன்ற செயற்குழு பரிந்துரை செய்துள்ளது.
முதலாம், இரண்டாம் மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டு வேலை (Home work) கட்டாயமாக்கப்படக்கூடாது எனவும் பாட சாலைப் பிள்ளைகள் கையடக்கத் தொலை பேசியினைப் பயன்படுத்துவது தடை செய்ய வேண்டுமெனவும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கையொன்றை தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஆளும் கட்சி எதிர்க் கட்சி உறுப்பினர்கள் அடங்கிய 23 பேரடங்கிய பாராளுமன்ற ஆலோசனைக் குழுவின் அறிக்கையை கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
புதிய கல்விக் கொள்கை மற்றும் யோசனை அடங்கிய அறிக்கையை சமர்ப்பித்த அமைச்சர், அரசாங்கம் மாறும்போதும், கட்சிகளின் ஆட்சிகள் மாறும் போதும் கல்விக் கொள்கைகளில் மாற்றம் ஏற்படாதவாறு புதிய கல்விக் கொள்கை மற்றும் யோசனைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. ஆளும் மற்றும் எதிர்க் கட்சியைச் சேர்ந்த 23 உறுப்பினர்களைக் கொண்ட தெரிவுக் குழு இப்புதிய கல்விக் கொள்கை தொடர்பில் விரிவாக ஆராய்ந்தே இதனைத் தயாரித்துள்ளது.
மதத் தலைவர்கள், கல்வி மான்கள், பாடசாலை அதிபர்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் அதிகமானவர்களை தெரிவுக் குழுவுக்கு அழைத்து அவர்களின் சாட்சிகள் மற்றும் யோசனைகளைப் பெற்றே இப்புதிய கல்விக் கொள்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இலவசக் கல்வியை மேலும் பலப்படுத்தும் வகையிலும் ஆட்சிமாறும் போது மாணவர்களுக்கு பாதிப்புக்கள் ஏற்படாதவாறு இப்புதிய கல்விக் கொள்கையை நாம் தயாரித்துள்ளோம்.
இப்புதிய கல்விக் கொள்கைக்கு கட்சி பேதங்களை மறந்து அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இப்புதிய கொள்கையின் மூலம் இலவசக் கல்வியைப் பெறும் 40 இலட்சம் மாணவர்கள் நன்மையடைவதுடன் இலவசக் கல்வியும் பலப்படுத்தப்படும். இதன் அடிப்படையில், புதிய கல்விக் கொள்கை சட்டமூலம் தயாரிக்கப்படும் என்றார். புதிய கல்விக் கொள்கையில் கல்வி முறைமை, கல்வி முகாமைத்துவம், தலைமைத்துவம், கல்வித் தரம், கல்வித் துறைசார் சேவைகள், அடங்கலாக கல்வித் துறையுடன் தொடர்புடைய சகல விடயங்களையும் உள்ளடக்கி இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
வரவு செலவுத் திட்டத்தினூடாக கல்விக்கு ஒதுக்கப்படும் நிதி ஒதுக்கீட்டை 5 வீதமாக உயர்த்த முயற்சி மேற்கொள்ள வேண்டும் எனவும் ஆரம்பப் பாடசாலை கல்வி மத்திய அதிகாரப் பிரிவினால் மேற்பார்வை செய்யப்பட வேண்டும் எனவும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்விக் கொள்கையில் குறிப்பிடப் பட்டுள்ள முக்கிய சில பரிந்துரைகள்
1- பண்புசார் தரமிக்க சமநிலைமையான கல்வியினைப் பெறுவதற்காக சகல பிள்ளைகளுக்கும் நியாயமான சந்தர்ப்பங்களை வழங்குவது அரசின் பொறுப்பாகும்.
2- சகல பிள்ளைகளுக்கும் இலவசக் கல்விச் சந்தர்ப்பத்தினை உறுதி செய்து பாதுகாப்பது அரசின் பொறுப்பாகும்.
3- பெரும்பான்மையான இலங்கை சிறார்களின் தாய்மொழி மற்றும் தேசிய மொழி சிங்களம் அல்லது தமிழாக இருக்க வேண்டும்.
4- தேசிய மற்றும் சர்வதேச இணைப்பு மொழியாக ஆங்கிலம் கற்பிக்கப்பட வேண்டும். பாடசாலைகளில் தமது சமயத்தைக் கற்க மற்றும் பின்பற்றவும் மாணவர்களுக்கு உரிமை இருக்க வேண்டும்
5- பாடவிதானம், கற்றல் - கற்பித்தல் ஒழுங்கு விதிமுறைகள், நேரசூசிகள் என்பன சகல 5 வருடங்களுக்கும் ஒருமுறை மாற்றப்பட வேண்டும்.
6- சாதாரண தரப் பரீட்சையின் பின்னர் கிடைக்கும் பெறுபேறு களுக்கு அமைய பிள்ளைகளுக்கு உயர்தர கல்விக்கு அல்லது பாடசாலையை அடிப்படையாகக் கொண்ட தொழில்சார் பயிற்சிப் பாடநெறிக்கு வகைப்படுத்தி உள்ளடக்கப்பட வேண்டும்
7- உயர்தரப் பரீட்சைக்குப் பின்னர் பிள்ளைகள் பொருத்தமான பல்கலைக்கழகக் கல்விக்கு ஏனைய மூன்றாம் நிலைக் கல்விக்கு அல்லது பாடசாலையை அடிப்படையாகக் கொண்ட தொழில்சார் பாட நெறியில் வகைப்படுத்தி ஈடுபடுத்த வேண்டும்.
8- பரீட்சைத் திணைக்களத்தினால் தேசிய மட்டத்தில் நடக்கும் பரீட்சைகளின் கால எல்லை மீளாய்வு செய்யப்பட வேண்டும். எந்தப் பரீட்சை பெறுபேறுகளை மதிப்பிடும் கால எல்லை 10 வாரங்களில் இருந்து 8 வார காலமாக குறைத்து பெறுபேறு வழங்கப்பட வேண்டும்.
9- குறைந்த பட்சம் நாளொன்றில் ஆரம்பப் பிரிவு வகுப்புகள் 5 மணித்தியாலங்களும் இடை நிலைப் பிரிவுக்காக 6 மணித்தியாலங் களும் கற்பிக்கப்பட வேண்டும்.
10- பாடசாலை பையின் நிறையை குறைப்பதற்கான ஒழுங்குகள் வகுக்கப்பட வேண்டும். புத்தகங்க ளின் பருமனை குறைக்கக் கூடியவாறு அவற்றை சிறிய பிரிவுகளாக அச்சிடுவது மிக முக்கியமாகும்.
11- கனிஷ்ட இடைநிலை மட்டங் களுக்கு மேற்பட்ட பாடங்களை ஆங்கில மொழி மூலம் கற்பித்தலை முடியுமான அளவு ஊக்குவிக்க வேண்டும்-
12- உயர்தர வகுப்புகளுக்காக கணிப்பொறி (Calculator) பயன்படுத்த இடமளிக்க வேண்டும்.
13- சகல மாணவர்களதும் பாடசாலை சமுகமளிப்பு 80 வீதத்தை விட அதிகமாக இருக்க வேண்டும்.
14- தேசிய கல்விக் கல்லூரிகளின் பாடநெறிக்கால எல்லையை 4 வருடங்கள் வரை நீடித்து அதனை பட்டப்பாடநெறியாக மாற்ற வேண்டும்.
15- பல்கலைக்கழக பட்டதாரிகளை ஆசிரியர்களாக சேர்க்கையில் தேசிய கல்வி நிறுவகத்தினூடாக 3 மாதங்களை விட கூடுதல் காலம் முழு நேரப் பயிற்சி வழங்குவது கட்டாயம்.
2 comments :
Very good rule, so parents wii have a Response to theit Kids.
Very good. Hope that this should be implemented seriously
Post a Comment