Friday, August 30, 2013

நவிபிள்ளைக்கு ஏன் இந்த மிதமிஞ்சிய இராஜதந்திர சலுகை! விளக்குகின்றார் கெஹெலிய!

இலங்கைக்கு தற்போது விஜயம் மேற்கொண்டுள்ள நவநீதம் பிள்ளை நந்திக்கடலில் 2 இலட்சம் பொதுமக்களை புலிகள் பணயக் கைதிகளாக தடுத்து வைத்திருந்த போது இங்கு வருகை தந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டார்.

நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் வருகை குறித்தும், நிகழ்ச்சி நிரலுக்கு அப்பால் சென்று அவர் பொதுமக்களையும் அமைப்புகளையும் சந்திப்பது குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதில ளிக்கையில்,

எமது அழைப்பின் பேரிலே நவநீதம் பிள்ளை இங்கு வந்துள்ளார். அவரின் வருகையை நாம் எதிர்க்கவில்லை. ஐ.ம.சு.மு.வில் உள்ள சில கூட்டுக்கட்சிகள் வேறுபட்ட கருத்துகளை முன்வைத்து வந்தாலும் அரசாங்கம் அவருக்குத் தேவையான சகல வசதிகளையும் அளித்து வருகிறது.

வழமையான இராஜதந்திரி வரையறைகளுக்கு அப்பால் அவருக்கு எங்கும் செல்லவும் எவரையும் விரும்பியவாறு சந்திக்கவும் பூரண அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு எந்தவித உத்தரவுகளோ வழிகாட்டலோ நாம் வழங்கவில்லை. அவர் தொடர்பில் வேறு விதமான நடைமுறையே பின்பற்றப் பட்டுள்ளது.

ஐ.நா.வில் முக்கிய பதவி வகிப்பவர் சர்வதேச சமூகத்துடனான கொடுக்கல் வாங்கலின் போது இலங்கை விசேடமான பல பிரச்சினைகளை எதிர்கொண்டது. இலங்கைக்கு தேவையற்ற அபகீர்த்திகளை சந்திக்கவும் நேரிட்டது.

இந்த நிலையில் மேற்படி விடயங்களுடன் தொடர்புபட்டவரான பிள்ளையின் விஜயம் அமைந்துள்ளது. நவநீதம்பிள்ளைக்கு வழமையான ராஜதந்திர அடிப்படையில் வசதிகள் வழங்கியிருந்தால் அதனைக் காரணம் காட்டி இலங்கை மீது மீண்டும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படலாம். இதனாலே அவருக்கு இராஜதந்திர வரையறைகளுக்கு அப்பால் சென்று அவருக்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

மூன்றாவது தடவையாகவே அவர் இலங்கை வந்துள்ளார். முதற் தடவையாக நீலன் திருச்செல்வனின் முதலாவது நினைவு தின விழாவுக்கு இங்கு வந்தார். புலிகளால் நீலன் கொல்லப்பட்டதால் புலிகள் எவ்வளவு மோசமான கொலையாளிகள் என்பது அவருக்கும் தெரியும். சில புலம்பெயர் அமைப்புகளுக்கு சாதகமாக அவர் செயற்படுவதாக எமக்கு சந்தேகம் இருக்கவே செய்கிறது.

இங்குள்ள உண்மை நிலைகளை கண்டு பிள்ளை பக்க சார்பற்ற தெளிவான அறிக்கையை வெளியிடுவார் என நம்புகிறோம் என்றார். காணாமல் போன தமது உறவினர்களை தேடித்தருமாறும் அது குறித்து விசாரிக்குமாறும் பொதுமக்கள் நவநீதம் பிள்ளையிடம் கோரியுள்ளது பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர்,

புலிகளினால் பல ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டனர். தலதா மாளிகை முதல் காத்தான்குடி பள்ளிவாசல் வரை புலிகளால் செய்யப்பட்ட அழிவுகள் அநேகம். புலிகளின் இந்த மனித உரிமை மீறல்கள் குறித்து யாராவது விசாரிக்குமாறு கோரினரா? 12 ஆயிரம் முன்னாள் புலிகள் புனர்வாழ்வு அளித்து சமூகமயப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் ஜனநாயக வழிக்கு வந்த பின் மீண்டும் அவர்களை விசாரிப்பது நியாயமா? என்றார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com