Wednesday, August 7, 2013

சர்வதேச அழுத்தங்கள் காரணமாகவே வடக்கு தேர்தல் நடைபெறுகின்றதாம். கூறுகின்றார் சித்தார்த்தன்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் வட மாகாணசபைக்காக யாழ் மாவட்டத்தில் போட்டியிடுகின்றார் தமிழீழ விடுதலைக் கழகத்தின் தலைவர் த.சித்தார்த்தன். இவர் நேற்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்:

இங்கு தொடர்ந்து கருத்துரைத்த திரு.சித்தார்த்தன் , இந்தத் தேர்தலை சாதாரண ஒரு மாகாணசபைத் தேர்தலாக நாங்கள் பார்க்க முடியாது. இந்தத் தேர்தல் வருவதற்கு சர்வதேசத்தின் அழுத்தங்கள்தான் நிச்சயமாக காரணமாக இருந்திருக்கின்றது. இந்நாடுகள் அனைத்துமே மிகப் பெரிய அழுத்தத்தை இலங்கை அரசுமீது கொடுத்திருந்தது. அதனால்தான் இந்த மாகாணசபைத் தேர்தல் வருகின்றது.

இந்தத் தேர்தலின் பெறுபேறுகளை எங்களுடைய விடயத்திலே அக்கறையுள்ள உலக நாடுகள் உன்னிப்பாக அவதானித்து வருகின்றன. ஆகவே தமிழ்மக்கள் ஒரு சரியான பதிலை, ஒரு உறுதியான செய்தியை இந்தத் தேர்தல் மூலம் கொடுக்க வேண்டும்.

நான் இந்தத் தேர்தல் சம்பந்தமாக பார்க்கின்றபோது, மக்கள் அக்கறையெடுத்து வாக்களிக்கச் செல்வார்களா? என்ற கேள்வியெழுகிறது. ஏனென்றால் கடந்தகால தேர்தல்களைப் பார்க்கின்றபோது மக்கள் தேர்தல்களிலே ஆர்வம் காட்டுவது குறைவு. இப்போதுகூட மக்கள் மத்தியில் அந்த ஆர்வம் நிச்சயமாக இல்லை. எனவே அந்த ரீதியிலே நாங்கள் மக்களை ஊக்குவிக்க வேண்டும்.

மக்களுக்கு வாக்களிப்பதன் அவசியத்தினை எடுத்துக்கூறி அவர்களை வாக்குச் சாவடிகளுக்குக் கொண்டு செல்வதும், அவர்களை வாக்களிக்கச் செய்வதும்தான் தொண்டர்கள் மற்றும் கட்சிகளைச் சார்ந்தவர்களின் முதலாவது கடமையாக இருக்கவேண்டும். வாக்களிப்பதன் மூலம்தான் தமிழ்மக்கள் இன்றும் தங்களுடைய உரிமையை வேண்டி நிற்கின்றார்கள் என்கிற ஒரு செய்தியை கொடுக்க முடியும்.

இன்று எங்களுக்கிருக்கின்ற ஒரேயொரு பலம் இந்த வாக்கு. இந்த வாக்கின்மூலம் ஒரு நியாயமான செய்தியினை உலகத்திற்கு சொல்லி எங்களுடைய பிரச்சினையிலே அக்கறை காட்டுகின்ற நாடுகளின் அழுத்தத்தின்மூலம் ஒரு நியாயமான தீர்வினைக் கொண்டுவர முடியுமென நம்புகின்றோம் என்று தெரிவித்துள்ளார்.

1 comments :

Anonymous ,  August 9, 2013 at 10:12 AM  

Before making a comment,we have to think deeply why we are lacking of confidence.We are responsible for Everything happening inside the country.Politically socially or economically.we are affected by everything happening inside the country and not the foreigners.may be something good can be an outcome
of this election.Leaders always need courage and confidence to guide the people.Puzzled comments cannot bring any success

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com