Friday, August 9, 2013

வீடியோ கேம் விளையாடுவதில் ஆர்வம் அதிகமானதால் ஏற்பட்ட விபரீதம்! அப்பா, அம்மா, பாட்டி, அத்தை சுட்டுக் கொலை!

வீடியோ கேமில் வரும் ஹிட்மேன் போல ஆக வேண்டும் என்ற ஆசையில் அப்பா, அம்மா, அத்தை உள்பட 4 பேரை துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளான் 13 வயது சிறுவன் ஒருவன். பிரேசிலில் நடந்த இந்த பயங்கர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பிரேசில் வடக்கு சா பாலோவை சேர்ந்த இராணுவ அதிகாரியின் மகன் மார்செலோ பெஸ்கினி (13). அருகில் உள்ள பள்ளியில் படித்தான். மார்செலோவுக்கு வீடியோ கேம் விளையாடுவதில் ஆர்வம் அதிகம். பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்ததும் வீடியோ கேம் விளையாடுவான். பள்ளியிலும் தனது நண்பர்களிடம், வீடியோ கேமில் வருவது போல துப்பாக்கி சண்டை போட்டு ஹிட்மேனாக ஆக வேண்டும் என்று அடிக்கடி கூறியுள்ளான்.

இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் அப்பா வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து பார்த்தான் மார்செலோ. திடீரென அப்பா, அம்மா இருவரையும் சுட்டு கொன்றான். பின்னர் அங்கிருந்து வீட்டின் அருகே உள்ள பாட்டி வீட்டுக்கு சென்றான். அங்கு பாட்டி, அத்தை ஆகியோரை சுட்டு கொன்றான்.

மறுநாள் எதுவும் நடக்காதது போல பள்ளிக்கு போய் விட்டு ஒரு நாள் முழுவதும் பள்ளியில் இருந்துள்ளான். இந்த காட்சிகள் சாலையில் உள்ள கேமராவில் பதிவாகி இருந்தது. பள்ளி முடிந்ததும் கோயிலுக்கு போன மார்செலோ தானும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டான். இதுகுறித்து சா பாலோ போலீஸ் அதிகாரி கூறியதாவது:

மார்செலோ பயன்படுத்திய 2 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பெற்றோர் உள்பட 5 பேரின் சடலங்களை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பி உள்ளோம். சிறுவனின் நண்பர்களிடம் விசாரித்த போது, கடந்த 1974ம் ஆண்டு நியூயார்க்கில் ரொனால்ட் டிபியோ என்ற டீன் ஏஜ் சிறுவன் தனது பெற்றோர், 2 சகோதரர்கள், 2 சகோதரிகளை சுட்டுக் கொன்றான். அதேபோல் கும்பலாக பலரை சுட்டுக் கொல்ல வேண்டும்.

கூலிப்படையை சேர்ந்த கொலைகாரனாக மாற வேண்டும் என்று மார்செலோ கூறி வந்துள்ளான்.மேலும், பெற்றோரை சுட்டு கொன்று விட்டு, அப்பாவின் காரில் தப்பி செல்ல வேண்டும். யாரும் இல்லாத இடத்துக்கு தப்பி சென்று தனிமையில் வாழ வேண்டும் என்று கூறி வந்துள்ளான். இதுகுறித்து தொடர்ந்து விசாரித்து வருகிறோம். இவ்வாறு போலீஸ் அதிகாரிகள் கூறினர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com