Friday, August 30, 2013

இனி ஓமந்தையில் சோதனை இல்லை!

வவுனியாவில் உள்ள ஓமந்தை சோதனைச் சாவடியில் இப்போது நடைமுறையில் இருக்கும் பயணிகள் மீதான சோதனை நடவடிக்கைகளை முற்றாக நிறுத்திக் கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நேற்று(29.08.2013) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஈ.ழமக்கள் ஐனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா பயணிகள் போக்குவரத்து விடயத்தில் குறிப்பாக வடபகுதி மக்கள் ஓமந்தை சோதனைச்சாவடியில் எதிர்கொள்ளும் அசௌகரியங்களை விரைவில் தவிர்க்கும் நோக்கில் பிரேரணை ஒன்றை முன்வைத்திருந்தார்.

ஓமந்தை சோதனைச்சாவடியில் குறிப்பாக வடபகுதி தமிழ் பேசும் மக்கள் தமது போக்குவரத்தின் போது அசௌகரியங்களை சந்தித்து வருவதாக எடுத்து விளக்கிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஓமந்தை சோதனைச் சாவடியை முற்றாக அகற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எடுத்து விளக்கிய நியாயங்களை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உட்பட அமைச்சர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டதோடு, ஓமந்தை சோதனை நடவடிக்கையை முதற்கட்டமாக உடன் தளர்த்துவதற்கு தான் உத்தரவிடுவதாகவும், அடுத்த கட்டமாக விரைவில் குறித்த சோதனைச் சாவடியை முற்றாக அகற்றுவதற்கான நடவடிக்கையினையும் முன்னெடுப்பேன் என்றும் ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார்.

தனது கோரிக்கையினை ஏற்றுக் கொண்ட ஜனாதிபதிக்கும், சக அமைச்சர்களுக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமிழ் பேசும் மக்களின் சார்பில் நன்றி தெரிவித்திருந்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com