கல்முனை மாநகர முதல்வர் மற்றும் உறுப்பினர்கள் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநருக்கு எடுத்துரைப்பு!
(பி.எம்.எம்.ஏ. காதர்)-கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் கிழக்கு மாகாண ஆளுநர் றியர் அட்மிரல் மொகான் விஜேவிக்ரமவினை நேற்று ஆளுநர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
இச்சந்திப்பின்போது மாநகர சபையின் நிதிக் குழு உறுப்பினர்களான ஏ.எம்.றியாஸ், ஏ.எம்.பறகத்துல்லா, ஏ.அமிர்தலிங்கம் மற்றும் மாநகர சபை கணக்காளர் எல்.ரீ.சாலிதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்போது கல்முனை மாநகர சபைக்கு வரவேண்டிய 2010 மற்றும் 2011ம் ஆண்டுகளிற்கான முத்திரை வரி வருமானம் கிடைக்கப் பெறுவதில் உள்ள தாமதம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதைத் தொடர்ந்து ஆளுநர் எடுத்த நடவடிக்கையின் காரணமாக குறித்த ஆண்டுகளிற்கான முத்திரை வரி வருமானமான 16 மில்லியன் ரூபா எதிர்வரும் புதன் கிழமைக்கு முன்னதாக விடுவிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
தற்போதைய முதல்வர் இன, மத, கட்சி என்ற வேறுபாடு இல்லாமல் தனது சேவையினை வழங்குகின்றார் என தெரிவித்த மாநகரசபை உறுப்பினர்கள் மாநகர சபை நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் முதல்வர் எதிர்நோக்கும் சிக்கல்கள் தொடர்பிலும் அவர்களால் ஆளுநருக்கு விளக்கமளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து கல்முனை மாநகர அபிவிருத்தி நடவடிக்கைகளிற்கு தேவையான உதவிகளையும் ஒத்தாசைகளையும் முடிந்தளவு மேற்கொள்வதாக ஆளுநர் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment