மாறுதலைத் தேடிடும் யாழ் தேர்தல்!
"வடமாகாணசபைத் தேர்தல்" கேட்கவே தித்திக்கும் ஒரு இனிய ப்தம். எப்போதும் கனவாகவே இருந்து விடப் போகிறதோ என ஏங்கிக் கொண்டிருந்த நியாயமான உணர்வுகளைக் கொண்ட ஒவ்வொரு ஈழத் தமிழனின் மனமும் இப்போ ஓரளவு சமாதனமடைந்திருக்கும்.
ஆனாலும் செப்டெம்பர் மாதம் நடக்கவிருக்கும் இம்மகாணசபைத் தேர்தலைப் பற்றிய விமர்சனங்கள் சராமாரியாக சகல பக்கங்களிலும் இருந்து கிளம்பிக் கொண்டேயிருக்கின்றன.
ஈழத்தமிழினத்தின் தனிப்பெரிந்தலைவர் "மேதகு வே.பிரபாகரன்" அவர்கள் ஆயுதமுனையில் அதிகரம் செய்து கொண்டிருந்த காலத்தில் மூச்சு விடத் தயங்கிக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் இன்று அரசியல் ஞானியராகி அரும்பெரும் கருத்துக்களை அள்ளி வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
சர்வாதிகாரத்தின் அழுங்குப்பிடியை தனித்தமிழரின் இராச்சியம் என வர்ணித்த புலம் பெயர்ந்த (புலன் பெயர்ந்த) தமிழர்களோ "தமிழீழமே" தீர்வு அதுவற்ற எதையும் ஏறெடுத்துப் பார்க்கக் கூட ஈழத்தமிழர் விரும்ப மாட்டார் என தமக்குத்தாமே ஈழத்தமிழ்ப் பிரதிநிதிகள் எனப் பட்டம் சூட்டிக் கொண்டு பல்வேறு நாடுகளில் புலிக்கொடியுடன் அலைந்து திரிந்து கொண்டிருக்கிறார்கள்.
கட்டுக்கடங்காமல் எரிந்து கொண்டிருந்த ஈழப்பிரச்சனை "தனிப்பெருந் தலைவரின்" அமரத்துவத்தின் பின்னாலோரளவி தணிந்து புகைந்து கொண்டிருக்கிறது.
எங்கே அந்தப் புகை தணிந்து தமது சுதந்திர வெறி அணைந்து சாம்பலாகிப் போகுமோ என அஞ்சிக் கொண்டிருக்கும் இந்தப் புலி எச்ச சொச்சங்கள் இப்புகையை ஊதி ஊதி மீண்டும் எரியூட்டுவதற்காக தமது கைக்கூலிகளாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கும் தமிழகத்தின் தானைத் தம்பிகளுக்கு ஈழத்தமிழர்களிடம் விடுதலை எனும் பெயரில் சுரண்டிய பணத்தை வாரி இறைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
பாவம்,
ஈழத் தமிழ்ப் பகுதிகளில் கால்நூற்றாண்டுக்கு மேலாக தமது கல்வியை இழந்து, உத்தியோகங்களைப் பறிகொடுத்து அகதிகளாக அங்குமிங்கும் ஓடித்திரிந்து விடுதலை இயக்கங்களில் பங்களித்ததின் மூலமாகவும், அதே விடுதலை இயக்கங்களினால் துரோகிகள் என முத்திரை குத்தப்பட்டதன் காரணமாகவும், தமது உயிர்களைப் பறி கொடுத்தவர்கள் போக எஞ்சியுள்ளவர்கள் கொஞ்சம் மூச்சு விட அவகாசம் கிடைத்ததே என எண்ணும் நேரம் மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறும் படலத்தை நடத்த முனைகிறார்கள் இப்புலி விசுவாசிகள்.
கொஞ்சம் எண்ணிப் பார்ப்போம் !
வடமாகாணத் தேர்தலை நடத்தக்கூடாது என்று கோஷமிட்டுக் கொண்டிருக்கும் சிங்கள இனவாத சக்திகளின் இடையூறுகளுக்கு மத்தியில் வெளிநாட்டு அழுத்தங்களைச் சாளைக்கும் முகமாகவோ என்னவோ இலங்கை ஜனாதிபதி இத்தேர்தலை நடத்த முன்வந்துள்ளமை ஒரு முன்னோக்கிய நகர்வு என்றே எடுத்துக் கொள்ள வேண்டும்.
அத்திவாரம் இன்றி ஒரு சாதாரண குடிசையக் கூட கட்டுவது கடினம் ஆனால் இவர்களோ அத்திவாரம் இன்றி மாளிகை அமைக்கலாம் எனக் கனவு காண்கிறார்கள்.
இத்தேர்தலினால் அமையப் போகும் மாகாணச்பை எந்த அளவிற்கு அதிகாரம் கொண்டது எனும் விவாதத்தில் ஈடுபடுவதை விட்டு ஒரு சிறிய அளவிலான கட்டமைப்பைக் கொண்ட ஒரு அமைப்பைக் கையிலெடுத்துக் கொண்டு அதனை விஷ்ரிக்கும் வழியைக் கையாண்டால் எம்மினத்தின் எதிர்கால வானத்தில் ஓரளவு ஒளியாவது பிறக்கும்.
1987ம் ஆண்டு நடந்த சமாதான உடன்படிக்கையின் அடிப்படையில் மறைந்த பாரத முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் ஆலோசனையின் படி அம்மகாணசபையை ஏற்றுக் கொள்ளும் புத்திசாதுர்யம் கொண்டவராக எம் மேதகு தலைவர் இருந்திருந்தால் இன்று அதிகாரப் பரவலாக்கப்பட்ட ஒரு வடக்குக் கிழக்குக் இணைந்த சட்டசபையின் முதலமைச்சராக அவர் கோலோச்சியிருந்திருக்கலாம்.
தீர்க்க தரிசனமற்ற பார்வையைக் ஒண்டிருந்ததாலும் தன் மக்களின் நல்வாழ்வை விடத் தனது அதிகாரத்தையே பெரிதாக எண்ணியதாலும் இன்று தானும் அழிந்து எமது மக்களின் பெரும்பகுதியையும் அழிவு எனும் படுகுழிக்குள் தள்ளி விட்டுள்ளார்.
இனியாவது எமது இனம் இப்பிழையைத் தவிர்த்து இத்தேர்தலின் மூலம் பெறக்கூடிய அதிக அளவிலான அதிகாரங்களைப் பெற்றுக் கொண்டு அதை விஸ்தரிக்கும் முயற்சியை மேற்கொள்ளுவதே சாலச் சிறந்ததாகும்.
முதன்முறையாக அனைத்துத் தமிழ்க் கட்ச்சிகளும் இணைந்து ஓரளவு நடுநிலையான ஒரு மிதவாத வேட்பாளரை முதலமைச்சராக்க முயற்சிக்கிறது.
இவ்வேட்பாளரும் எதை எப்படிப் பேச வேண்டுமோ அப்படிப் பேசி தனது மிதவாதத்தனத்தை வெளிக்கொணர்ந்துள்ளார்.
இவரின் இவ்வரசியல் நிலைப்பாட்டுக்கு நாமனைவரும் ஆதரவளித்து ஜக்கிய இலங்கைக்குள் தமிழர்கள் சுயமரியாதையுடன் ஒரு மாநில ஆட்சி அமைத்துக் கொள்வதற்கான செயற்பாடுகளை அரசாங்கத்துடன் இணைந்து முன்னெடுப்பது ஒன்றே இன்றைய காலகட்டத்தில் எம்முன்னால் தெரியும் ஒரு சாத்தியமான வழிமுறையாகும்.
அவர் விடுத்த வேண்டுகோளின் படி புலம் பெயர்ந்த தமிழர்களும், எமது தமிழ்நாட்டுச் சகோதரர்களும் எமது இந்தச் சமாதானபூர்வமான முயற்சிகளுக்கு ஆதரவாக இருப்பதை விடுத்து இடையூறளிக்கும் வகையில் தனீ ஈழம், தனிநாடு எனும் நிறைவேற முடியாத கோஷங்களைத் தவிர்த்துக் கொள்வது இப்போதைய காலக்கட்டாயமாகும்.
இதை இவர்கள் இனியாவது உணர்வார்களா? தமது சுயலாபத்தின் அடிப்படையிலமைந்த கொள்கைகளைக் கைவிட்டு, நலிந்து போன எம் ஈழத்தமிழரின் வாழ்வைச் செம்மைப்படுத்தும் வகையில் தம்மை நெறிப்படுத்திக் கொள்வார்களா?
சரித்திரத்தில் இவர்கள் எவ்வாறு நினைவு கொள்ளப்படப் போகிறார்கள் என்பது இவர்களின் வசமே உள்ளது.
நல்லையா குலத்துங்கன்
ஈழத்திலிருந்து.
0 comments :
Post a Comment