இந்தியாவிடம் இருந்து பாகிஸ்தான் 1947-ம் ஆண்டு பிரிந்தது முதல் இன்று வரை இரு நாடுகளும் எதிரி நாடுகளாகவே இருக்கின்றன. காஷ்மீருக்காக அடித்துக்கொண்டபோது, ஐ.நா. தலையிட்டதால் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது.
அதன்பின்னர் வங்கதேச சுதந்திரத்தின்போது இரு நாடுகளுக்கிடையே போர் நடந்தது. இந்த போரில் பாகிஸ்தான் ராணுவம் சரண் அடைய, வங்கதேசம் சுதந்திரம் பெற்றது. பின்னர் 1972ல் இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
ஒப்பந்தம் மட்டும்தான் ஏற்பட்டதே தவிர இரு நாடுகளுக்கிடையிலும் சுமுகமான சூழ்நிலைக்கு வழியில்லாமல் போனது. காஷ்மீர் பிரச்சினை, எல்லைத் தகராறு, தீவிரவாதிகள் ஊடுருவல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களால் இரு தரப்பும் முறுக்கிக்கொண்டு நிற்பது தொடர்கிறது.
டிசம்பர் 2001-ல் இந்திய பாராளுமன்றத்தை தீவிரவாதிகள் தாக்கியதையடுத்து பதட்டம் மேலும் அதிகரித்தது. இரு நாடுகளும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டின் அருகில் ஏராளமான படைகளை குவித்ததால் போர் மேகம் சூழ்ந்தது. பின்னர் ஒரு வழியாக படைகள் வாபஸ் பெறப்பட்டதால் மனித பேரழிவு தவிர்க்கப்பட்டது.
2003-ல் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் போர் நிறுத்தம் செய்ய, இரு நாடுகளும் முன்வந்து ஒப்பந்தம் செய்தன. அதன்பிறகுதான் முறைப்படியான அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. அதிகாரிகள் மட்டத்திலும், அமைச்சர்கள் மட்டத்திலும் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தாலும், பகைமையை சுமந்துகொண்டிருக்கும் பாகிஸ்தான், மறைமுக போர் நடத்தி வருவதை கண்கூடாக காண முடிகிறது. அதற்கு பல உதாரணங்களை கூறலாம்.
2008-ம் ஆண்டு மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தொடர் தாக்குதலில் 166 பேர் பலியாகினர். இந்த சம்பவம் இரு நாட்டு உறவில் இடியாப்ப சிக்கலை ஏற்படுத்திவிட்டது. அமைதி பேச்சுவார்த்தையிலும் தொய்வு ஏற்பட்டது.
அதேசமயம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் பாகிஸ்தான் ராணுவம், அடிக்கடி இந்திய எல்லையில் ஊடுருவி தாக்குதல் நடத்தி, இந்தியாவை சீண்டி வருகிறது. ஆனால், பொறுமை காத்து வரும் இந்திய அரசோ, போரைத் தவிர்த்து பேச்சுவார்த்தையை தொடருவதில் உறுதியாக உள்ளது.
பாகிஸ்தான் ராணுவம் இந்த ஆண்டு மட்டும் 57 முறை போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியிருக்கிறது. ஜனவரி மாதம், எல்லையில் இந்திய வீரர்கள் 2 பேரைக் கொன்று, அதில் ஒருவரின் தலையை துண்டித்து எடுத்துச் சென்றுவிட்டனர். இந்த காட்டுமிராண்டித்தனமான, மனிதாபிமானமற்ற போக்கினை இந்தியா கடும் கண்டனத்தை தெரிவித்தாலும் அதனை பாகிஸ்தான் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை.
ஜூலை மாதம் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட தீவிரவாதியின் உடலை எடுக்க சென்ற இந்திய வீரர்கள் மீது பாகிஸ்தான் படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் குண்டுவெடிப்பில் காயமடைந்த காவலர் ஒருவரை மீட்க முயன்றபோதும் துப்பாக்கி சூடு நடத்தி மிரட்டினர்.
இதன் உச்சகட்டமாக, இருநாட்டு பிரதமர்களும் பேச்சுவார்த்தை நடத்த உள்ள நிலையில், இப்போது இந்திய எல்லையில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த இந்திய வீரர்கள் 5 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பாகிஸ்தான் ராணுவ உடை அணிந்து வந்த 20 பேர் இந்த தாக்குதலை நடத்தியதாக பாதுகாப்புத்துறை மந்திரி அளித்த விளக்கம் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அவர் கூறியபடி பாகிஸ்தான் ராணுவம் நேரடியாக இந்த தாக்குதலில் ஈடுபடவில்லை என்று வைத்துக்கொண்டாலும், எல்லைப் பகுதிக்குள் பாகிஸ்தான் ராணுவத்திற்கு தெரியாமல் அவர்கள் வர வாய்ப்பில்லை என்று பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்த வண்ணம் இருந்தனர். அவரது கருத்து பாகிஸ்தான் தப்பிக்க வழிவகுத்திருப்பதாக கூறி எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர்.
இதனால் மீண்டும் பாராளுமன்றத்தில் ஒரு அறிக்கையை தாக்கல் செய்த பாதுகாப்புத்துறை மந்திரி ஏ.கே.அந்தோணி, “முதலில் கிடைத்த தகவலின்படி அந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இப்போது ராணுவ தளபதி நேரில் சென்று ஆய்வு செய்ததில், பாகிஸ்தான் ராணுவத்தின் சிறப்புக்குழு, இந்த செயலை செய்திருப்பது தெரியவந்துள்ளது” என்று பேசினார்.
ஆனால், பாகிஸ்தான் அரசோ, வழக்கம்போல் இந்த முறையும் பிடிகொடுக்காமல் பேசி வருகிறது. இதனால் நியூயார்க்கில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புடன், பிரதமர் மன்மோகன் சிங் பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது என்றும், பாகிஸ்தானுக்கு இந்திய அரசு தக்க பதிலடி தர வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றன.
ஆனால், பேச்சுவார்த்தை மூலம்தான் தீர்வு காண முடியும் என்று இந்தியா இன்னமும் நம்பிக்கொண்டிருக்கிறது. நீண்ட காலமாக நடைபெற்று வரும் பேச்சுவார்த்தையை அவ்வளவு எளிதில் நிறுத்திவிடுவது இயலாத காரியம் என்று உள்துறை அமைச்சரே கூறியிருப்பதால், பிரதமர்கள் சந்திப்பு உறுதியாகிவிட்டது.
எது எப்படியோ எல்லையில் அமைதி நிலவினால் சரி. ராணுவத் தாக்குதலில் உயிர்ப்பலி ஏற்படக்கூடாது என்பதற்காகத்தான் போர் நிறுத்த உடன்படிக்கை போடப்பட்டிருக்கிறது. ஆனால், அதன் நோக்கத்தை சீர்குலைக்கும் வகையில் பாகிஸ்தான் ஈடுபடுவது அராஜகத்தின் உச்சகட்டம் என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
இதற்கு முற்றுப்புள்ளி வைத்து, எல்லையில், துப்பாக்கிச் சத்தம் எப்போது குறையும்? என்ற ஏக்கம் நாட்டு மக்களிடையே ஏற்பட்டுள்ளது.
இது மாலை மலரில் வெளியாகியுள்ள இந்திய தரப்பு நியாயக் கட்டுரை என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment