வடக்கில் கடற்றொழிலை மேம்படுத்த வியட்னாம் உதவி!
வடபகுதிக் கடல் வளத்தைப் பெருக்கி அதன்மூலம் கடற்றொழிலில் ஈடுபடுவோரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் வியட்னாம் அரசு தொழில்நுட்ப உதவிகளை இலங்கை மக்களுக்கு வழங்க முன் வந்துள்ளதுடன் இதன் அபிவிருத்தி தொடர்பில் சாதகமான இடமாக வடமாகாணம் திகழ்கின்றது என இலங்கைக்கான வியட்னாம் தூதுவர் தொன் சிங் தான்ங் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த வியட்னாம் தூதுவர் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை யாழ்ப்பாணத்தில் நடாத்தியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக இலங்கையில் இருந்து நான்கு தொழில்நுட்ப அதிகாரிகள் வியட்னாம் சென்று பயிற்சி பெற்றுத் திரும்பியுள்ளதுடன் அவர்களினால் நாட்டில் உள்ள பல்வேறு பொருத்தமான இடங்கள் இனங்காணப்பட்டுள்ளது எனக்குறிப்பிட்டார்.
இதைப் பரிசீலனை செய்தவதற்கே வியட்நாம் அதிகாரிகள் குழு வடக்கிற்கு வந்து கடல் வளங்களை ஆராய்ந்து கடல் வள அபிவிருத்திக்கு ஏதுவாக வடமாகாணத்தைத் தெரிவு செய்து அப்பகுதிகளில் இத்தொழில் நுட்பத்தைக்கொண்டு கடல்சார் தொழிலில் ஈடுபடுவோரின் உழைப்பை இலாபகரமாக மாற்றவுள்ளோம் எனக்குறிப்பிட்டார்.
இதன் முதல் கட்டமாக கடலட்டை இனப்பெருக்கம், சிங்கறால் வளர்ப்பு, கடல்பாசி வளர்ப்பு போன்ற கடல் உயிரினங்கள் வளர்ப்பு சம்பந்தமான புதிய தொழில்நுட்பங்களே வடக்கில் அறிமுகப்படுத்தி அதன்மூலம் அவற்றைப் பெருக்கி கடல்சார் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உள்ளோம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இதற்கென யாழ். மாவட்டமும், கிளிநொச்சியும் சிறந்த கடல்வாழ் உயிரினங்கள் வளர்ப்புக்கு ஏற்ற இடமாக இனங்காணப்பட்டுள்ளது. ஏற்கனவே யாழ்.மாவட்டத்தில் வேலணையிலும் கிளிநொச்சி மாவட்டத்தில் வேரவில், கிராஞ்சி, போன்ற பகுதிகளிலும் இச் செயற்திட்டத்தின் முதற்கட்டப் பணிகளை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் வடக்கிலுள்ள கடல் தொழில்நுட்பங்களில் முன்னேற்றம் இல்லை. இதனால் கடல்வாழ் உயிரினங்கள் அருகிப்போகின்றது இதனால் தற்போதுள்ள கடற்றொழிலாளர்கள் குறைந்த வருமானம் ஈட்டுகின்றனர் எனக்குறிப்பிட்டார்.
இங்கு உள்ள அனைவரும் கடுமையான உழைப்பாளினள் ஆனால் உழைப்புக்குத் தொழில்நுட்பம் அவசியமாகின்றது. இதற்கு கடற்றொழில் நீரியல்வளங்கல் அமைச்சும், தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபையும் எமக்கு அனுசரணைகளை வழங்குகின்றன.
இவர்களுடைய அணுசரணையுடன் வடபகுதியில் வியட்நாம் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இங்குள்ள கடல்வளங்களை உயர்த்துவதன் மூலம் கடற்றொழிலாளர்களின் வருமானங்களை பல்மடங்காக அதிகரிக்க முடியும் எனக்குறிப்பிட்டார்.
இத்தகைய தொழில் நுட்பத்தை பெறுவதற்கு யாருக்கும் கட்டுப்பாடு இல்லை என்பதால் இத்தொழில் நுட்பத்தைப் பெற்றுக்கொள்ள அனைவருக்கும் இடமுண்டு. இதன்மூலம் அனைவரும் பயனடையவேண்டும் என்பதே எமது விருப்பமாகும் என்று தெரிவித்தார்.
0 comments :
Post a Comment