Tuesday, August 13, 2013

அரசாங்கத்துடன் இணையும் வலி.மேற்கு பிரதேச சபையின் TNA உறுப்பினர் ! ஜாதிப் பாகுபாடே காரணமாம்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வலிகாமம் மேற்கு பிரதேசசபை உறுப்பினரான சிவகுமார் அரசாங்கத்துடன் இணைத்து செயற்படவுள்ளதாக யாழ். ஊடக அமையத்தில் நேற்று(12.08.2013) நடை பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கும் போது 2004ஆம் ஆண்டு தொடக்கம் 2013 ஆம் ஆண்டு வரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளராகவும் கடந்த 2010ஆம் ஆண்டு தொடக்கம் வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் உறுப்பினராகவும் செயற்பட்டு வருபவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய கோட்டையாக விளங்கும் வட்டுக்கோட்டைத் தொகுதியில் தாழ்த்தப்பட்ட சமூகத்தின் பிரதிநிதியாக தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற போதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எம்மை புறக்கணிப்பதோடு சாதி வேற்றுமை காட்டியும் வருகின்றனர்.

இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனிடம் தெரிவித்த போது இரண்டு வாரத்திற்குள் தீர்வு வழங்குவதாகத் தெரிவித்தார். எனினும் இதுவரை எமக்கு எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. வட மாகாண சபைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் எம்மிடம் வரும் கூட்டமைப்பினர் மறப்போம், மன்னிப்போம் என்று எங்களுடன் வருகின்றார்கள். இவர்களின் இந்த வெற்றுக் கோஷங்களை நாங்கள் ஏற்றுக்கொள்ளத்தயாராக இல்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருப்பதை விட அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதே மேல் என்ற எண்ணத்துடன் நேற்று முன்தினம் முதல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து செயற்படவுள்ளேன். இதற்காக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் சீராஸ்ஸை ஆதரித்து அவருடன் இணைந்து எமது மக்களிற்கான அரசியல் வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளேன் எனக்குறிப்பிட்டார்.

இதனால் கட்சி என் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கின்றேன். இருந்தாலும் விரைவில் எனது பிரதேசசபை உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்யவுள்ளளேன் என்றார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com