Tuesday, August 20, 2013

பொதுபல சேனாவுக்கு சவால் விடுத்த மஹியங்கனை தேரர் மீது குண்டர்கள் தாக்குதல்!

அண்மையில் பதுளை யூ சீ எம் சீ (மலையக முஸ்லிம் கவுன்ஸில்) ஏற்பாடு செய்த இப்தார் நிகழவில், பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரை நிகழ்த்திய மகியங்கனை மகவெலி ரஜமகா விகாரை விகாராதிபதி வடரேக விஜித தேரர் நேற்று (19) பிற்பகல் கண்டியிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணம் செய்து கொண்டிருக்கையில் கேகாலை நகர் அருகில் இடைமறிக்கப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார்.

‘என்னடா எங்கள் இயக்கத்தை தாக்கி பேசினாய்?”. என்று கோசமிட்டபடி இவரும் இவருடைய சாரதியும் தாக்கப்பட்டுள்ளார்கள். இவரின் சாரதியின் உடைகள் கிழித்தெறியப்பட்டு வாகன ஓட்டுநர் அனுமதிப்பத்திரம் உட்பட தஸ்தாவேஜுகள் கிழித்து வீசப்பட்டுள்ளன. இவர் பயணித்த வாகனம் பலத்த சேதங்களுக்கு உள்ளாக்கப்பட்டு ஒரு கதவு கழட்டி வீசிஎறியப் பட்டுள்ளது. இவரின் சாரதி மிகவும் சிரமபட்டு வாகனத்தை கேகாலை பொலிஸுக்கு கொண்டு சேர்த்துள்ளார். தற்போது இவர் பாதுகாப்பாக கேகாலை பொலிஸ் நிலையத்தில் உள்ளார்.

நேற்றைய முன்தினம் இரவு இவரது பொறுப்பில் உள்ள மகாவெலி ரஜமகா விகாரையும் இனந் தெரியாதவர்களால் தாக்கப்பட்டுள்ளது . தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கும் விஜித தேரர், கேகாலை பொலிஸ் நிலையத்திலிருந்து தொலைபேசியூடாக கருத்து தெரிவிக்கையில், 'அண்மைக் காலமாக நாட்டில் தலை தூக்கியிருக்கும் இனவாதம் எல்லை மீறிச் சென்று கொண்டிருப்பது இத்தாக்குதல் மூலம் நிரூபணமாகிறது என்றும் ஒரு சிலரின் நாசகார சிந்தனைகளுக்கு இடமளித்து இந்த நாட்டை மீண்டும் இரத்த கலரியாக்கிவிட முடியாது' என்றும் கருத்துத் தெரிவித்தார். பல ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

நான் ஒரு பௌத்த துறவி என்ற அடிபடையில் பௌத்த மதத்திற்கு எதிரான எந்த கருத்தையும் நான் எந்த இடத்திலும் கூறவில்லை. மாறாக பௌத்த மதத்தின் நற்போதனைகளையே மக்கள் முன் உரையாற்றினேன். இனிமேலும் உரையாற்றுவேன்.

அண்மையில் மகியங்கனை பள்ளிவாசலை முஸ்லிம்களின் நோன்புகாலத்தில் மூடிவிட முயற்சி செய்யும் போது நோன்பு காலம் முடியும் வரை பொறுத்திருந்து அதை செய்வோம் என்று பிரதேச சபை அமர்வின் போது ஆலோசனை முன் வைத்தேன். அதனாலேயே என்னை எதிர்த்தார்கள். உண்மையில் மகியங்கனை ரஜமகா விகாரை முன்புறமாகவும் புனித போதி மரம் அருகிலும் , மறுபக்கத்தில் விகாரையும் அமைந்த இடத்தில் ஒரு பள்ளிவாயில் அமைத்து அதில் ஒலிபெருக்கிகளில் முஸ்லிம்கள் சப்தமிட்டு வணக்க வழிபாடுகளில் ஈடுபடும் போது வேண்டத்தகாத பல பிரச்சினைகள் தோன்றும், ஆகவே குறிப்பிட்ட இடத்துக்கு அப்பால் தெரிவு செய்யப்பட்ட ஓரிடத்தில் முஸ்லிம்களுக்கான ஒரு தொழுகை அறையை நிர்மாணிக்கலாம் என்றே நான் கூறிவந்தேன்.

அத்துடன் பங்கரகம முஸ்லிம்கள் பலர் என்னிடம் எழுத்து மூலம் மகியங்கனை நகரில் ஒரு பள்ளிவாயில் அமையத் தேவையில்லை என்று வேண்டுதல் விடுத்தார்கள். ஆகவே இந்த பிரச்சினையை சுமுகமாக தீர்க்கவே நான் முயற்சி செய்தேன் . ஆனால் பொது பலசேனாவினர் இதை அசிங்கமாக கையாண்டனர். முஸ்லிம் சகோதர்கள் மீது குரோதம் ஏற்படும் வகையில் நடந்து கொண்டனர். கடந்த ஜூன் மாதம் 12ந் திகதி இரவு பொது பாலா சேனாவினர் மகியங்கனைக்கு வந்தனர். ஆகஸ்ட் 2ம் திகதி நடைபெற்ற கூட்டதிற்கான முன்னாயத்த நடவடிக்கைகளுக்கே இவர்கள் அப்போது வந்திருந்தார்கள். இவர்கள் வந்துசென்ற அடுத்த நாள் இரவே மகியங்கனை பள்ளிவாசலுக்குள் பன்றியொன்றை வெட்டி வீசியிருந்தார்கள். அதேபோல் இவர்களின் ஆகஸ்ட் 2ம் திகதி மகியங்கனையில் நடந்த பொதுக் கூட்டத்திற்கு முதல் நாள் மகியங்கனையில் வாழ்ந்த மூன்று குடும்பங்கள் நாடோடிகளை போல் தமது பெட்டி படுக்கைகளுடன் ஒரு குடும்பம் அக்கறைபத்திற்கும், இன்னொரு குடும்பம் காத்தான்குடிக்கும். மற்ற குடும்பம் கல்முனைக்கும் நிரந்தரமாக சென்று விட்டார்கள்.

இவர்கள்தான் கூறுகிறார்கள் இந்த நாட்டில் ஒரு முஸ்லிமுக்கேனும் எந்தவொரு சேதமும் செய்யவில்லை என்று. இது போன்ற செயல்களை பௌத்தம் ஒருநாளும் போதிக்கவில்லை. இந்த நாட்டில் வாழும் சிங்கள முஸ்லிம் தமிழ் சகோதரர்கள் என்றும் போல் எதிர்காலத்திலும் வாழ வேண்டும். அதற்காக என்னுயிரை பணயம் வைத்தேனும் நான் செயற்படுவேன் என்றும் தெரிவித்தார்.

இந்த பத்தியை எழுதிக் கொண்டிருக்கும் போது வரும் தகவல்களின் படி குறிப்பிட்ட இத் தாக்குதல் நிகழ்வு மறைக்கப்பட்டு, தேரர் பயணம் செய்த வாகனத்துடன் இன்னொரு வாகனம் மோதியதால் ஏற்பட்ட நிகழ்வாக சித்தரிக்கப்பட்டு பொலிஸில் புகார் எழுதுவதற்கான ஏற்பாடுகள் திரை மறைவில் நடப்பதாக அறிய முடிகின்றது.

(M. ஜிப்ரி - அபூ ஷிபா: பதுளை)

No comments:

Post a Comment