எனது தந்தையின் கைத்துப்பாக்கி கொழும்பிலேயே உள்ளது! அங்கஜன்!
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் அங்கஜனின் தந்தையார் இராமநாதன், சுதந்திரக் கட்சியின் சக வேட்பாளர் குமாரு சர்வானந்த் மீது சாவகச்சேரியில் வைத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பாக பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், தனது தந்தையின் கைத்துப்பாக்கி கொழும்பிலேயே இருக்கின்ற நிலையில் அவரால் எவ்வாறு துப்பாக்கிப்பிரயோகத்தை மேற்கொண் டிருக்க முடியும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வடமாகாண சபையின் வேட்பாளர் அங்கஜன் இராமநாதன் கேள்வியெழுப்பினார்.
யாழ்ப்பாணத்திலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அலுவலகத்தில் நேற்று வெள்ளிக் கிழமை இரவு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திபிலேயே அவர் மேற்கண்டவாறு கேள்வியெழுப்பினார். அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், எனது தந்தை யாராகிய ராமநாதனிடம் அனுமதிபத்திரம் பெற்ற கைதுப்பாக்கி இருக்கின்றது. அந்த துப்பாக்கியினை அவர் கடந்த 22 ஆம் திகதி வியாழக் கிழமை கொழும்பில் பொலிஸாரிடம் கையளித்துள்ளார்.
இந்நிலையில் சாவகச்சேரி இடம்பெற்ற சம்பவத்தில் எனது தந்தை எவ்வாறு துப்பாக்கி பிரயோகத்தை செய்திருக்க முடியும். சாவக்கச்சேரியில் கடந்த 27 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் பொலிஸார் பக்கச்சார்பாக செயற்படு கின்றனர் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.
எனது தந்தையாருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பொய் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு ஏற்பட்டுள்ள உடல் நலக்குறைவால் அவர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவை அனைத்துமே தேர்தல் காலங்களில் என்னை முடக்கி போடுவதற்காக மேற்கொள்ளப்படுகின்ற திட்டமிட்ட செயற்பாடாகும். எனக்கு மக்களின் ஆதரவு என்றுமே உள்ளது. எனது பயணத்தை நான் கைவிடமாட்டேன் என்றும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை இராமநாதன் கைது செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாகாணசபை வேட்பாளர் தம்பிராசா யாழ்.மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக சாகும் வரையிலான உண்ணாவிரதம் இருக்கப்போவதாகவும், சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் மாகாணசபை வேட்பாளர்களான மு.றெமீடியஸ், எஸ்.சர்வானந்த், எஸ்.அகிலதாஸ், எஸ்.பொன்னம்பலம் ஆகியோர் இராமநாதன் கைது செய்யப்படாவிடில் தேர்தலிலிருந்து விலகப்போவதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment