Saturday, August 10, 2013

கிராண்பாஸ் பள்ளியை யார்தான் உடைத்தார்கள்? - பல சேனாக்கள் கேள்வி!

கிராண்ட்பாஸ் பிரதேசத்தின் சுவர்ண சைத்திய வீதியில் அமைந்துள்ள முஸ்லிம் பள்ளிவாயல் உடைக்கப்பட்டது தொடர்பில் தங்களது அமைப்புக்கு எந்தவொரு தொடர்பும் இல்லை என பொதுபல சேனா, ராவண பலய, சிங்கள ராவய அமைப்பு என்பன முஸ்லிம்களின் கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளன.

இவ்விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானஸார தேரர், தானும் இயக்கத்தினரும் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி வந்து கொண்டிருப்பதாகவும், அவ்விடயத்துடன் தமக்கோ தமது இயக்கத்தினருக்கோ எவ்வித தொடர்பும் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

சிங்கள ராவய தேசிய அமைப்பின் தேசிய பொதுச் செயலாளர் மெடில்லே பஞ்ஞாலோக்க தேரர், தம்மைச் சேர்ந்த மதகுருமார்கள் இந்து மற்றும் இஸ்லாமியர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருப்பதாகவும், விடயம் தொடர்பில் தமது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ராவண அமைப்பின் பொதுச் செயலாளர் இத்தெகந்தே ஸத்தாதிஸ்ஸ தேரர், தங்களது அமைப் பைச் சேர்ந்த எவருக்கும் இதில் தொடர்பில்லை எனவும், அமைப்பின் வரலாற்று நெடுகிலும் பார்த்தால் எந்தவொரு பிறமதத்தினருக்கும் எந்தவித இடைஞ்சலும் நாங்கள் செய்யவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று (10) இடம்பெற்ற நிகழ்வு பற்றி கருத்துத் தெரிவித்த முஸ்லிம் கவுன்ஸிலின் பேச்சாளர் குறிப்பிடும் போது, அந்தப் பள்ளிவாயலை அதற்கு அருகிலுள்ள இடமொன்றுக்கு கொண்டு செல்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே எதிர்ப்புத் தெரிவித்து இவ்வாறான தாக்குதல் நடத்தப்பட்டது எனவும், அவ்விடத்தில் போதிமரம் ஒன்று பின்னர் முளைத்ததால் அதனை அங்கிருந்து அகற்றித் தருமாறு அதிகாரம்மிக்கவர்கள் பலரிடம் கேட்ட போதும் அவர்கள் கவனிக்காமலிருப்பது பற்றியும் குறிப்பிட்டுள்ளார். பின்னர் போதிமரம் அவ்வாறிருக்க புதிய பள்ளியில் மத அநுட்டானங்கள் மேற்கொள்ளப்பட்ட நேற்றைய தினமே, இந்தத் தாக்குதல் நடாத்தப்பட்டது எனவும் குறிப்பிட்டுள்ளார். தாக்குதல் நடாத்தப்படும் போது அவ்விடத்தில் பொலிஸார் பன்னிரண்டு பேரளவில் அங்கு நின்றிருந்த போதும், அவர்களின் போதியளவு தலையிட்டு அதனைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவில்லை எனவும் குறிப்பிட்டார்.

எதுஎவ்வாறாயினும், இவ்விடயம் தொடர்பில் பிறிதொரு செய்தி குறிப்பிடுவதாவது: பள்ளிவாயல் சட்டரீதியற்ற முறையில் நிர்மாணிக்கப்பட்டதாகும், நேற்றுவரை அவ்விடத்திலிருந்து பள்ளியை அகற்றுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்றும் குறிப்பிடுகிறது. அதனைக் கவனத்திற் கொள்ளாது பள்ளிவாயலை அவ்விடத்திலேயே வைத்திருப்பதற்கு முயற்சி மேற்கொண்டதன் காரணமாகவே இந்த கைகலப்பு நிகழ்ந்திருக்கும் எனவும் குறிப்பிடுகிறது. மேலும் இந்தப் பள்ளிவாயலானது இரண்டு கோயில்களுக்கு மத்தியிலேயே அமைந்துள்ளது எனவும் குறிப்பிடப்படுகிறது.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com