வாசுவுக்கு எதிராக மற்றொரு குற்றச்சாட்டு!
பம்பலப்பிட்டி முஸ்லிம் வர்த்தகர் முஹம்மத் ஸியாம் படுகொலை வழக்கில் பிரதான சந்தேக நபர்களில் ஒருவரான முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்த்தனவுக்கு எதிராக மற்றுமொரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வர்த்தகர் ஸியாம் கடத்தப்பட்டமை மற்றும் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவரும் குற்றப்புலனாய்வுப் பிரிவின் உப பொலிஸ் அத்தியட்சகர் சானி அபேசேக்கர உள்ளிட்ட விசாரணைக் குழுவினரை அச்சுறுத்தியமை தொடர்பிலேயே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுப் பிரிவினால் இன்று (23) இந்த வழக்கு கோட்டை பிரதான நீதிவான் திலின கமகே முன்னிலையில் தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து விசாரணை குழுவினை அச்சுறுத்தியமை தொடர்பில் எதிர்வரும் ஆகஸ்ட் 26 ஆம் திகதி சந்தேக நபரான வாஸ் குணவர்தனவை நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு நீதவான் வெலிக்கடை சிறைச்சாலை நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, முன்னதாக முஹம்மத் ஸியாம் படுகொலை வழக்கில் வாஸுக்கு எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியல் உத்தரவினை புதுக்கடை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. கடந்த 14 ஆம் திகதி இடம் பெற்ற வழக்கு விசாரணையின்போது வாஸ் குணவர்தன உள்ளிட்ட 9 பேருக்கு இந்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையிலேயே விசாரணைக் குழுவினரை அச்சுறுத்தியமை தொடர்பில் எதிர்வரும் 26 ஆம் திகதி வாஸ் குணவர்தனவை கோட்டை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment