Saturday, August 31, 2013

தூக்கம் வரவில்லையா? கவனம்!

தூக்கம் வராமல் தவிப்பவர்கள், படுத்தவுடன் தூங்கக்கூடியவர்களைப் பார்த்து, நீயெல்லாம் கொடுத்து வைத்தவன் என்று ஆதங்கத்தோடு சொல்கிறார்கள். மனிதனுக்கு அளிக்கப்பட்டுள்ள அன்றாட நிம்மதி இடைவேளை, தூக்கம் அது சரிவரக் கிட்டாதபோது, வாழ்க்கையே நரகமாகிப் போகும்.

சரி, தூக்கமின்மைக்கு என்ன காரணம்? மது, காபி, மனஅழுத்தம், மனச்சோர்வு, டென்ஷன் என பலவும் தூக்கமின்மைக்குக் காரணமாக அமைகின்றன. தூக்கம் வராமல் படுக்கையில் புரளும் நிலை இருந்தால் என்ன செய்யலாம்? வழக்கத்தைவிட ஒரு மணி நேரம் தாமதமாகப்படுக்கச் செல்லலாம். தூக்கம் வருவதற்கு உரிய சில எளிய உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.

உதாரணமாக, மனதுக்குள் எண்களைச் சொல்வது, எளிதான மூச்சுப் பயிற்சிகளில் ஈடுபடுவது, உங்களுக்கு சுவாரசியம் அளிக்காத புத்தகங்களை வாசிப்பது போன்றவை. படுக்கப் போகும் முன் வெதுவெதுப்பான தண்ணீரில் குளிக்கலாம். இதனால் தசைகள் இலகுவாகும். உடல் சூடு குறையும். மிதமான சூட்டில் பாலும் அருந்தலாம்.

தொடர்ந்து தூக்கமின்மை இருந்தால், மருத்துவர் ஆலோசனைப் படி மாத்திரை சாப்பிடலாம். எவ்வளவு வேலைப்பளு இருந்தாலும், இரவில் போதுமான அளவு தூங்குவதை வழக்கமாக வைத்திருக்க வேண்டும். வேறு வழியில்லை என்ற நிலையில், குட்டித் தூக்கம் போட்டாவது நிலைமையைச் சமாளிக்கலாம்.

படுக்கப்போகும் முன் சில எளிய உடற்பயிற்சிகள் செய்வது, தூக்கம் வரவழைப்பதற்கான ஒரு வழி. ஆனால் பெரும்பாலானோர் படுக்கும் முன் உடற்பயிற்சி செய்வதில்லை. இரவுச் சாப்பாட்டுக்கு முன்பு கூட சில எளிய உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.

ஆனால் பொதுவாக, காலையில் நேரம் ஒதுக்கி உடற்பயிற்சி செய்வதுதான் நல்லது. தூக்கமின்மை நிரந்தர நோயாக மாறுவதற்கு முன் மாத்திரைகள் சாப்பிடுவதில் தப்பில்லை. ஆனால் மருத்துவரின் பரிந்துரை அவசியம். நாமாக எடுத்துக்கொள்ளும் ஒரு சில மாத்திரைகள் வீரியம் மிகுந்ததாக இருக்கலாம்.

அதன் காரணமாக, தலைவலி, வாந்தி, சோர்வு போன்ற பக்க விளைவுகள் ஏற்ப டக்கூடும். எனவே கவனம் தேவை. தூக்க மாத்திரைக்கு அடிமையாவதும் ஆபத்து. போதுமான நேரமில்லை, இரவில் நான்கு – ஐந்து மணி நேரம்தான் தூங்க முடியும் என்ற நிலை உள்ளவர்கள், இரவில் தாமதமாகப்படுத்து, காலை ஆறு மணிக்கு எழலாம்.

தூக்கம் வரும் வரை, மெல்லிசைப் பாடல்களைக் கேட்பது போன்றவற்றில் ஈடுபடலாம். தூக்கமின்மை பிரச்சினை இருப்பவர்கள், அது பற்றி டாக்டரிடம் ஒளிவுமறைவின்றிச் சொல்லிவிட வேண்டும். அப்போதுதான் அவர்களால் இப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும்.

உதாரணமாக, தூக்கமின்றி காலை ஆட்டிக் கொண்டே இருக்கும் ரெஸ்ட்லெஸ் லெக்ஸ் சிண்ட்ரோம், மூச்சு விடுவதில் சிரமம், தீவிர மனச்சோர்வு, தைராய்டு பிரச்சினை போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், மருத்துவரை அணுகி தக்க நிவாரணம் பெற வேண்டும்.

No comments:

Post a Comment