Sunday, August 11, 2013

ராக்கெட் ஏவ தயாராக இருந்த அல்-காய்தா தளபதி மீது உளவு விமான ஏவுகணை தாக்குதல்

தற்போது யுத்தம் நடந்து கொண்டிருக்கும் எகிப்து சினாய் பகுதியில், மற்றொரு ஆட்டக்காரர் ஓசைப்படாமல் மைதானத்துக்குள் இறங்கியுள்ளார். இந்த ஆட்டக்காரர் வேறு யாருமல்ல, இஸ்ரேல்!

சினாய் பகுதியில் எகிப்திய ராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தும் அல்-காய்தா ஆதரவு இயக்கத்தின் ராக்கெட் ஏவும் தளத்தின்மீது எதிர்பாராத உளவு விமானத் தாக்குதல் ஒன்று நடந்துள்ளது. உளவு விமான தாக்குதலை யார் நடத்தினார்கள் என்பதில் எகிப்து அரசு மௌனம் சாதித்தாலும், அது இஸ்ரேலின் கைங்கார்யம் என்றே ராணுவ வட்டாரங்களில் கூறப்படுகிறது.

இங்குள்ள அல்-காய்தா ஆதரவு இயக்கமான அன்சார் பெய்ட் அல்-மக்திஸ், ஜிகாதி இணையதளம் ஒன்றில் வெளியிட்ட அறிக்கையில், “இஸ்ரேலிய உளவு விமானம் நமது ராக்கெட் ஏவும் தளம் ஒன்றின்மீது தாக்குதல் நடத்தியதில், ராக்கெட் ஏவும் முயற்சிகளில் ஈடுபட்டிருந்த ஐந்து போராளிகள் கொல்லப்பட்டனர்.

நாம் இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தும் ஏற்பாடுகளில் இருந்தபோது, இஸ்ரேலிய உளவு விமான தாக்குதல் நடந்துள்ளது. இந்த தாக்குதலில் போது, எமது ராக்கெட் ஏவும் படைப்பிரிவின் தலைவர் அங்கிருந்த போதிலும், அவர் உயிர் தப்பியுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உளவுத்துறை வட்டாரங்களில் இருந்து தெரியவரும் தகவல்களின் அடிப்படையில், இந்த அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளதில் பாதிதான் நிஜம். பாதி பொய்.

சினாய் பகுதியில் அல்-காய்தா ராக்கெட் ஏவும் தளம் ஒன்றின்மீது உளவு விமான தாக்குதல் நடத்தப்பட்டது என்பதும், அதை நடத்தியது இஸ்ரேல் என்பதும் நிஜம். (இஸ்ரேல் ஒப்புக்கொள்ளவில்லை). அந்தத் தாக்குதலில், அல்-காய்தா ஆதரவு இயக்கத்தின் ராக்கெட் ஏவும் படைப்பிரிவின் தலைவர் கொல்லப்பட்டார் என்றே தெரியவருகிறது.

இந்த இயக்கம், தமது அறிக்கையில் குறிப்பிடாத மற்றொரு விஷயம், உளவு விமான தாக்குதல் நடத்தப்பட்ட நேரத்தில், ராக்கெட் ஏவும் தளத்தில் இவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பது!

எகிப்தின் சினாய் பகுதியில் இருந்து, எல்லைக்கு அப்பால் உள்ள இஸ்ரேலிய பகுதிக்குள் ராக்கெட் தாக்குதல் நடத்த அல்-காய்தா ஆதரவு இயக்கம் தயார் செய்து கொண்டிருந்தபோதே உளவு விமான தாக்குதல் நடத்தப்பட்டதாக சொல்கிறார்கள்.

ராக்கெட் ஏவும் படைப்பிரிவின் தலைவர் நேரடியாக வந்து, இஸ்ரேல் மீதான தாக்குதலை மேற்பார்வை செய்து கொண்டிருந்தபோது, இஸ்ரேலிய உளவு விமானம் இந்த தளத்தின் மீது ஏவுகணை ஏவியது. ராக்கெட் ஏவும் தளம் முற்றாக அழிக்கப்பட்டது என்பதே, அங்கிருந்து கிடைக்கும் உளவுத் தகவல்.

இதில் கவனிக்கப்பட வேண்டிய மற்றொரு விஷயமும் உண்டு. இரு தினங்களுக்கு முன்தான், சினாய் பகுதியில் இருந்து ராக்கெட் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற உளவுத் தகவல் கிடைத்ததை அடுத்து, இஸ்ரேலிய எல்லையில் உள்ள பயணிகள் விமான நிலையம் சில மணி நேரத்துக்கு மூடப்பட்டது. அங்கு தரையிறங்க இருந்த 8 பயணிகள் விமானங்கள் அருகில் உள்ள மற்றொரு விமான தளத்துக்கு திசை திருப்பி விடப்பட்டன.

இது தொடர்பாக ‘அல்-காய்தா ராக்கெட் தாக்குதல் அச்சுறுத்தல்: இஸ்ரேலிய விமான நிலையம் தற்காலிக மூடல்!’ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

அந்த உளவுத் தகவல் இஸ்ரேலிய உளவுத்துறை மொசாத்துக்கு கிடைத்ததை அடுத்து, இஷ்ரேல் உஷார் அடைந்திருக்கலாம். உடனடியாக விமான நிலையத்தை மூடிவிட்டு, ஏவுகணை பொருத்தப்பட்ட உளவு விமானம் ஒன்றை அனுப்பி முன்னேற்பாடு செய்திருக்கலாம். அதன் பின்னரே, விமான நிலையத்தை திறந்திருக்கலாம்.

இந்த உளவு விமானம், அல்-காய்தா ராக்கெட் ஏவும் தளத்தை கண்காணித்து, அங்கே நடமாட்டம் தென்பட்டபோது, ஏவுகணை தாக்குதலை நடத்தி, தளத்தை அழித்திருக்கலாம்.

அல்-காய்தா ஆதரவு இயக்கமான ‘அன்சார் பெய்ட் அல்-மக்திஸ்’, “நாம் இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தும் ஏற்பாடுகளில் இருந்தபோது, இஸ்ரேலிய உளவு விமான தாக்குதல் நடந்துள்ளது” என்று கூறியிருப்பதால், இந்த ஊகம் நன்றாகவே பொருந்தி வருகிறது.

உளவு விமான தாக்குதலில் கொல்லப்பட்ட 5 பேரில், ராக்கெட் ஏவும் படைப்பிரிவின் தலைவர் ஒருவர் என்பதுடன், அல்-காய்தாவின் மற்றொரு சீனியர் தளபதியும் கொல்லப்பட்டார் என்று எகிப்திய அரசு செய்தி ஏஜென்சி MENA அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தாக்குதல் நடத்தியது யார் என்ற விபரம், அந்த செய்திக்குறிப்பில் இல்லை.

தமது நாட்டுக்குள் இஸ்ரேலிய உளவு விமானம் பறந்து தாக்குதல் நடத்தியது என்ற செய்தியை வெளியிடுவது எகிப்திய அரசுக்கு தர்மசங்கடமான விஷயம். அதனால் அவர்கள், அந்த விஷயத்தை வெளிப்படையாக ஒப்புக்கொள்ள தயாராக இல்லை. அதனால்தான், அவர்களது செய்திக் குறிப்பில் தாக்குதலை நடத்தியது யார் என்ற விபரம் இல்லை.

அதேநேரத்தில், எகிப்திய ராணுவத்தின் மறைமுக ஒத்துழைப்புடன்தான் இஸ்ரேலிய உளவு விமான தாக்குதல் நடத்தப்பட்டது என்பதே அங்கிருந்து கிடைக்கும் தகவல்.

சினாய் பகுதியில் சண்டை தொடங்கியபின் ஏற்பட்டுள்ள முக்கிய அரசியல் திருப்பம் இதுதான். ஒரு காலத்தில் நேரடி எதிரிகளாக முறைத்துக் கொண்டிருந்த இஸ்ரேலும், எகிப்தும், சினாய் சண்டை தொடங்கிய பின் மறைமுக நண்பர்களாகி விட்டனர்.

இதற்கு காரணம், சினாய் பகுதியில் பலம் வாய்ந்த அல்-காய்தா மற்றும் ஹமாஸ் ஆட்களை தமது ராணுவத்தால் முற்றாக ஒடுக்க முடியாது என்பது எகிப்துக்கு தெரியும். இஸ்ரேல் மறைமுகமாக ராணுவ ரீதியில் கை கொடுத்தால்தான் சமாளிக்கலாம் என்பது அவர்களது நிலை (எகிப்திடம் ஏவுகணை தாக்குதல் நடத்தக்கூடிய உளவு விமானங்கள் கிடையாது)

கிட்டத்தட்ட அதே நிலைமையில்தான் இஸ்ரேலும் உள்ளது. இஸ்ரேலிய எல்லையில் உள்ளது எகிப்தின் சினாய் பகுதி. அங்கிருந்து அல்-காய்தாவினர் ராக்கெட் அடித்தால், இஸ்ரேலுக்கு உள்ளே விழுந்து வெடிக்கும்.

அதை தடுக்க வேண்டும் என்றால், எகிப்து மறைமுகமாக கைகொடுக்க முன்வர வேண்டும். இவர்களது உளவு விமானங்கள் எகிப்துக்குள் தடையின்றி பறக்க அனுமதி வேண்டும். (உளவு விமானங்களை சுட்டு வீழ்த்தக்கூடிய ‘சாம்’ ஏவுகணைகள் எகிப்திடம் உள்ளன)

இப்படி இரு தரப்புக்கும் மற்றைய தரப்பின் உதவி தேவைப்படுவதால், இந்த முன்னாள் எதிரிகள் இப்போது ரகசியமாக கூட்டணி வைத்துள்ளனர்.

இவர்களுக்கு எதிர்த் தரப்பில், அல்-காய்தா ஆதரவு இயக்கமும், ஹமாஸூம் நெருங்கி வந்துள்ளன.

அவர்களிடமும் பெரிய ஆயுதங்கள் உள்ளன. சினாய் பகுதியில் அவர்களுக்கு செல்வாக்கும் உள்ளது. சினாய் பகுதியின் ஒரு எல்லையில் இஸ்ரேல் உள்ளது போல, மற்றொரு எல்லையில் ஹமாஸ் ஆதிக்கம் செலுத்தும் காசா உள்ளது. ஹமாஸூக்கு தொடர்ச்சியாக ஈரான் மற்றும் சிரியாவிடம் இருந்து ஆயுத சப்ளையும் உள்ளது.

சினாய் பகுதியில் நடைபெற்ற உளவு விமான ஏவுகணை தாக்குதல் ஒரு தொடக்கம்தான். போகப்போக இங்கே நடக்கப் போகிறது வாணவேடிக்கை!


நன்றி விறுவிறுப்பு.

3 comments :

மஹா ரிஷி ,  August 11, 2013 at 9:14 PM  

இந்த விறுவிறுப்பு காரன் தான் முன்பு " பரபரப்பு " காரனாக , எதோ தலைவர் உள்ளுக்க விட்டு அடிப்பார் என எழுதியவர், கடைசியில் தலைவர் மதிவதனிக்கும் உள்ளுக்கை விட்டு அடிக்க முடியாது பரதேசி போல ஓடியது தான் நடந்ததது.

மஹா ரிஷி

Anonymous ,  August 13, 2013 at 4:32 AM  

தலைவர் எங்கை அடிகிறது அவர் கிடக்க மற்றவர்கள் தான் அடிக்க வேண்டும்

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com