Tuesday, August 6, 2013

வெலிவேரிய சம்பவத்தில் உயரிழந்த இளைஞனுக்கு எதிர்கட்சித் தலைவர் அஞ்சலி!

கம்பஹா மாவட்டத்திலுள்ள வெலிவேரியப் பிரதேசத்தில் குடிநீர்ப்பிரச்சனையை தீர்க்குமாறு மக்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்த முயன்ற படையினர் மேற்கொண்ட தாக்குதலில் உயிரிழந்த 18 வயதுடைய ரவிசான் பெரேரா என்ற 18 வயதுடைய இளைஞனுக்கு எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிகரமசிங்க இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

குறித்த இளைஞன் இந்த வருடம் கல்விப்பொதுத்தராதர (உயர்தர) ப் பரீட்சைக்குத் தோற்ற இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. குறித்த இளைஞனின் குடும்பத்தினருடன் உரையாடிய எதிர்கட்சித்தலைவர் அவர்களுக்கு நீதி கிடைக்க உதவி செய்வதாக உறுதியளித்துள்ளார்.

இதேநேரம் தண்ணீர் கேட்டு போராடிய வெலிவேரிய ரத்துபஸ்வல மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் குறித்து சர்வதேச விசாரணை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

பொதுமக்களுக்கு தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் அசாதாரணமானது என அவர் கூறினார்.

கொழும்பில் இன்று (06) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இவ்வாறான சம்பவம் மக்கள் மற்றும் இராணுவத்தினரிடையே மோதல் நிலையை ஏற்படுத்துவதற்காக அரசாங்கம் எடுத்த முயற்சி என அவர் கூறினார்.

குறித்த சம்பவத்தின்போது நிராயுதபாணியாக நின்ற பொதுமக்கள் மீது தாக்குதலை மேற்கொள்ளுமாறு ஆலோசனை கொடுத்தது யார் என அரசாங்கம் இதுவரையில் தெரியப்படுத்தவில்லை எனவும் திஸ்ஸ அத்தநாயக்க சுட்டிக் காட்டினார்.

அவசரநிலை ஒன்று இல்லாத சந்தர்ப்பத்தில் பொலிஸருக்கு இராணுவத்தினரை அழைக்க முடியாது என அவர் குறிப்பிட்டார்.



No comments:

Post a Comment