எமது மக்களின் நிலங்கள் மக்களுக்கே சொந்தம் என்றும், வரலாற்று ரீதியாக வாழ்ந்து வந்த எமது மக்களின் நிலங்களை எமது ஆக்க பூர்வ இணக்க அரசியல் வழிமுறை மூலம் அரசுடனும், படைத்தரப்புடனும் பேசி நாமே தொடர்ந்தும் பெற்றுக்கொடுப்போம் என்றும் ஈழ மக்கள் ஐனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா வெளியிட்டிருக்கும் ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த அறிக்கையில்,...
மக்களின் நிலம், மக்களுக்கே சொந்தம் என்பது வெறுமனே ஓர் அரசியல் கோசம் அல்ல. தேர்தல் காலத்தில் மட்டும் கோசம் எழுப்பி விட்டு, தேர்தல் முடிந்தவுடன் காற்றோடு பறந்து போகும் தேர்தல் கால வாக்குறுதியும் அல்ல. எம்மை பொறுத்தவரையில், இது எமது மக்கள் அடைந்தே தீரவேண்டிய வாழ்வியல் உரிமை சொத்து.
எமது நிலங்களை எமது மக்கள் மீளப்பெறுவதற்கு வெற்று வீரப்பேச்சுகள் ஒரு போதும் உதவப்போவதில்லை. போலியான வீரப்பேச்சுக்கள் ஒரு சாண் நிலத்தை கூட எமது மக்களுக்கு பெற்றுத்தரப்போவதில்லை. இந்த உண்மையே இங்கு வெளிப்படையாகி வருகிறது.
பிறந்திருக்கும் அரியதொரு சூழலையும் பாழடித்து, கடந்த காலங்களைப்போல் வெறும் பகமைகளை வளர்த்து, எமது மக்களை அடுத்தவர் வீட்டு கொல்லைப்புறங்களிலும், இரவல் நிலங்களிலும் தொடர்ந்தும் தவிக்க வைக்கும் இருண்ட யுகத்தையே வெற்று வீர அறிக்கைகள் இங்கு பெற்றுத்தரும் என்பது உண்மையாகி விட்டது.
எதிர்ப்பு அரசியல் நடத்துபவர்கள் எமது மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விருப்பமுடன் அதை முன்னெடுத்தால் நாம் வரவேற்போம். மாறாக, வெறுமனே எதிர்ப்பு கோசம் எழுப்பி எமது மக்களின் அனைத்து பிரச்சினைகளையும் தீராப்பிரச்சினையாக நீடிக்க வைத்து, மக்களின் அவலங்களை காட்டி சுயலாப அரசியல் நடத்துவதையே நாம் வெறுக்கின்றோம். இதன் மூலம் தமது தேர்தல் வெற்றிகளை பெற்று தமது பதவி நாற்காலிகளை தக்க வைத்து சொந்த சலுகைகளை பெற்று வரும் போலியான நடவடிக்கைகளையே நாம் எதிர்க்கின்றோம்.
தமது சொந்த சலுகைகளை பெறுவதற்காக அரசின் பின் கதவு தட்டி, இணக்கமாக பேசி அதில் வெற்றி பெறும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர், எமது மக்களின் பிரச்சினைகளையும் அதே வழிமுறையில் பெறுவதற்கு ஏன் முன்வருவதில்லை என்பதே நாம் கேட்கும் கேள்வியாகும்.
2009 இல் அழிவு யுத்தம் முடிவிற்கு கொண்டு வரப்பட்ட போது உயர் பாதுகாப்பு வலயங்கள் என்று இங்கு எதுவுமே இருக்க முடியாது என ஐனாதிபதி அவர்கள் பகிரங்கமாகவே தெரிவித்திருந்தார். இதை நாம் வரவேற்றிருந்தோம். அதன்படி எமது மக்களை உயர் பாதுகாப்பு வலங்களாக இருந்த இடங்கள் சகலவற்றிலும் நாம் மீளக்குடியேற்றுவதில் வெற்றி கண்டிருக்கின்றோம். இன்று வரை ஐனாதிபதி அவர்களின் வாக்குறுதியை நிறைவேற்ற கோரி, அரசுடனும் படைத்தரப்புடனும் தொடர்ச்சியாக நாம் பேசியும், வலியுறுத்தியும் வருகின்றோம். தொடர்ந்தும் எமது மக்களை தமது சொந்த நிலங்களில்
குடியேற்றுவதில் நாம் வெற்றி கண்டும் வந்திருக்கின்றோம்.
இது வரை எமது மக்கள் தமது சொந்த நிலங்களில் மீள் குடியேறி வருவதில் எமது இணக்க அரசியல் வழிமுறை வெற்றி கண்டு வருகிறது. அதற்காக ஐனாதிபதி அவர்களுக்கும், படைத்தரப்பினருக்கும் எமது மக்களின் சார்பாக நாம் நன்றி தெரிவிக்கின்றோம்.
தொடர்ந்தும் எமது மக்களை தமது சொந்த வாழ்விடங்களில் குடியேற்றும் எமது மக்கள் பணி தொடரும்.
இவ்வாறு தெரிவித்திருக்கும் ஈழ மக்கள் ஐனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா வட மாகாண சபை தேர்தலில் மக்கள் எமக்கு ஆணை வழங்கும் போது, ஐனாதிபதி அவர்களின் ஆசியோடு எமது மக்களை பலாலி வரை கொண்டு சென்று குடியேற்றுவோம் என்றும் உறுதிபட நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தகவல் தொடர்பு செயலாளர்
ஈழ மக்கள் ஐனநாயக கட்சி ஈ..பி.டி.பி.
No comments:
Post a Comment