Wednesday, August 14, 2013

ஒட்டுண்ணியின் தாக்கம்! உயிருக்காக போராடிவரும் சிறுவன்!

அமெரிக்காவை சேர்ந்த ஒரு சிறுவன் மூளையை தின்னும் ஒரு அரிய வகை ஒட்டுண்ணி தொற்றால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடிவருகிறான். அமெரிக்காவின் லா பெல்லே நகரத்தில் தனது பெற்றோர்களுடன் வசித்து வரும் சகாரி ரெய்னா என்ற 12 வயது சிறுவன் இம்மாதம் 3 ஆம் திகதி தனது நண்பர்களுடன் வீட்டிற்கு அருகில் தேங்கி இருந்த ஒரு குட்டையில் விளையாடியிருக்கிறான்.

விளையாடி முடித்து வீட்டிற்கு திரும்பிய சகாரி மறுநாள் முழுவதும் தூங்கிக்கொண்டிருந்தான். முதலில் சகாரிக்கு காய்ச்சல் வந்திருக்ககூடுமென நினைத்த அவனது பெற்றோர், அவனது உடல் நிலை மோசமடைவதை கண்டு அச்சமடைந்தனர்.

உடனடியாக மியாமி குழந்தைகள் மருத்துவமனைக்கு சகாரியை அழைத்து சென்ற அவனது பெற்றோருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. சகாரியை பரிசோதித்த மருத்துவர்கள் அவனுக்கு மூளையை அரிக்கும் அரிய வகை ஒட்டுண்ணி தொற்று இருந்ததை தெரிவித்தனர்.

ஓடாமல் நிற்கும் நீரில் பரவியிருக்கும் இந்த ஒட்டுண்ணி, சகாரியின் மூக்கின் வழியே உடலுக்குள் நுழைந்து மூளையை அரிக்க துவங்கியுள்ளதாகவும், இந்த நோய் தாக்கினால் உயிர் பிழைப்பதே கடினம் எனவும் மருத்துவர்கள் கூறியதை கேட்டு சகாரியின் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த நோய் தாக்கத்திலிருந்து சகாரி மீண்டுவந்தால், இந்த அரிய வகை நோய் தாக்கி உயிர் பிழைத்த நான்காவது நபராக அவன் இருப்பான் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment