பச்சிலைப்பள்ளி பிரதேச சபை உறுப்பினர் விபத்தில் மரணம்.
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி சார்பாக போட்டியிட்டு பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் உறுப்பினராக இருந்து வந்த திரு. வைரவன் தியாகராஜா அவர்கள் விபத்தில் அகால மரணமடைந்துள்ளார். அன்னாருக்க ஈபிடிபி யின் தேசியப் பட்டியல் எம்பி முருகேசு சந்திரகுமார் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் :
மனிதநேயமும் மண்ணின் மீதான பற்றும் மக்கள் மீது கரிசனையும் கொண்ட சமூகப்பற்றாளன்.
மனிதநேயமும் மண்ணின் மீதான பற்றும் மக்கள் மீது கரிசனையும் கொண்ட ஒரு சமூகப்பற்றாளனை இழந்திருக்கிறோம். முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக சமூகப் பற்றோடும், தேசப்பற்றோடும் செயற்பட்டவர் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினராக திரு. வைரன் தியாராஜா அவர்கள்இ தான் வாழ்ந்த பிரதேசத்தில் மட்டுமன்றி கிளிநொச்சி மாவட்டத்திற்கும் அப்பால் தமிழ் மக்களின் மனங்களில் பேரன்பையும், பெருமதிப்பையும் பெற்றவர் திரு.தியாகராஜா. இளமைக் காலத்திலிருந்தே சமூகப் பணிகள், கலைத்துறையில் நாட்டம், அரசியல் போராட்டங்களில் பங்கேற்பு என தன் வாழ்வை ஒழுங்கமைத்த திரு.தியாகராஜா ஒரு சிறந்த கூட்டுறவு பணியாளருமாவார்.
இதேவேளை பளை பிரதேசத்தின் வர்த்தக சங்க தலைவராகவும் பதவி வகித்து வர்த்தக சமூகத்திற்கு பெரும் பங்களிப்புச் செய்தார். பச்சிலைப்பள்ளி பனை தென்னைவள கூட்டுறவுச் சங்கத்தின் மூத்த பணியாளராக சேவையாற்றிய திரு.தியாகராஜா தன்னுடைய பணியினாலும், வாழ்க்கை முறையினாலும் சேவையினாலும் மக்கள் மனதில் நிரந்தர இடம் பிடித்தவர்.
இனிய பேச்சும், இன்முகமுமாக எப்போதும் இருக்கும் தியாகராஜாவை அனைத்துத்தரப்பினரும் தங்களுடைய நெருங்கிய உறவினராகவே கருதி சொந்தம் கொண்டாடினர்.
உதவி தேவைப்படும் மக்களையும், பின்தங்கிய நிலையில் உள்ள பிரதேசங்களையும் தன்னுடைய சேவை புலத்தில் முதன்மையிடமளித்து பணியாற்றிய தியாகராஜா, அந்த மக்களின் வாழ்வுக்காக கடுமையாக உழைத்தவர். தியாகராஜாவின் நல்மனதையும், நற்பண்புகளையும் விரும்பிய மக்கள் அவரை எப்போதும் தமது வாழ்வின் உற்ற தோழனாகவே கருதுகின்றனர்.
சமூகத்திற்கு தன்னாலான பணிகளை ஆற்ற வேண்டும் என்ற பெருவிருப்பத்தோடு எமது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிட்டார். காலமறிந்து, மக்களின் தேவையறிந்து, சேவையாற்றக் கூடிய வழிமுறையறிந்து தன்னுடைய அரசியல் பாதையை தெரிந்தெடுத்த தியாகராஜாவை மக்கள் ஆதரித்து வெற்றியடையச் செய்தனர்.
இத்தகைய சிறப்புகளையும், பெருமைகளையும் கொண்ட திரு.தியாகராஜா அவர்கள் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கி அகாலச் சாவைத் தழுவிக்கொண்டார். பச்சிலைப்பள்ளி பிரதேச மக்களின் வாழ்விலும், வரலாற்றிலும் நீங்கா இடத்தைக் கொண்ட தியாகராஜாவுக்கு மக்களின் சார்பாகவும், எமது கட்சியின் சார்பாகவும் அஞ்சலியினைச் செலுத்துகிறேன்.
முருகேசு சந்திரகுமார்,
பாராளுமன்ற உறுப்பினர்,
பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர்.
0 comments :
Post a Comment