Sunday, August 25, 2013

அனந்தியின் கணவரின் சிபார்சிலேயே புலிகளின் கொலை பட்டியலில் சம்பந்தன் இருந்தார் ! இதை சம்பந்தன் மறுப்பாரா?

தேர்தலுக்காக முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க அனந்தி எழிலன் முற்பட்டாலும், மூன்று தசாப்தகால யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் இன்னுமொரு அழிவை சந்திக்கத் தயாராக இல்லை எனவும், தமிழர்களை மீண்டுமொரு பேரழிவிற்குக் கொண்டு செல்ல வேண்டா மென அனந்தி எழிலனை ஜனாதிபதியின் தமிழ் ஊடக இணைப்பாளர் சிவராஜா வேண்டியுள்ளார்.

அனந்தி எழிலன் விடுத்துள்ள அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அனந்தி எழிலன் அவர்கள் என்னைப் பற்றி அவதூறாக கருத்துக்களை வெளியிட்டாலும் உண்மையான தமிழ் மக்கள் மற்றும் தமிழ் ஊடகத்துறை வட்டாரங்களில் எனது நிலைப்பாடு பற்றி ஒரு தெளிவு உண்டு. புலம்பெயர் சமூகத்திடமிருந்து தேர்தலுக்காக நிதியுதவி பெற்று கைக்கூலியாக செயற்படும் அனந்தி மற்றும் அவருக்காக செய்தி அறிக்கைகளைத் தயாரிக்கும் சில ஊடக நண்பர்களுக்கு விடயங்களை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

மாவிலாறு சம்பவம் தமிழ்மக்களின் உரிமை களை வென்றெடுப்பதற் கான விடுதலைப் புலிகளின் போராட் டத்தின் ஒரு அம்சம் என தனது அறிக்கையில் கூறும் அனந்தி, அதே அறிக்கையில் மாவிலாறு மூடப்பட்ட போது அங்கு தண்ணீரும் இருக்கவில்லை, வற்றிய நிலையில் பெறுமானமற்று அது இருந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அப்படியாயின் பெறுமானமற்ற ஒரு விடயத்திற்கு தண்ணீரும் இல்லாத ஒரு வாய்க்காலை மூடியதற்காகவுமா தமிழர்கள் இவ்வளவு பெரிய விலையைக் கொடுக்க நேரிட்டது? ஒன்றுமே இல்லாத விடயத்திற்குத் தானா மாவிலாறு முதல் முள்ளிவாய்க்கால் வரை மக்கள் துன்பங்களை அனுபவிக்க வேண்டி வந்தது. உங்களுக்குத் தேவையான போது ஒன்றுமே இல்லாத விடயத்திற்காக மக்களை நடுத்தெருவிற்குக் கொண்டு வருவதும் பின்னர் தனது கணவர் அரசியல் துறைக்கு மட்டும் தான் பொறுப்பு யுத்தத்திற்கு பொறுப்பு அல்லவென்று கூறுவதும் மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது போன்றதாகவே இருக்கிறது. ஒன்றுமே இல்லாத வற்றிப் போன வாய்க்காலை மூடி வீரம் பேசிவிட்டு இத்தனை பாதிப்புகளுக்கும் துணையாக இருந்துவிட்டு இப்போது அனந்தி வடிப்பது நீலிக்கண்ணீராக இல்லா விட்டாலும் கைக்கூலிக் கண்ணீராகத் தான் இருக்கும்.

திருகோணமலையில் விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பா ளராக எழிலன் இருந்த போது கூட்ட மைப்பின் தலைவர் இரா. சம்பந்தனைப் பற்றி பல பாரதூரமான மோசமான தகவல்களை புலிகளின் தலைமைத்துவத் திற்கு அனுப்பி புலிகளின் கொலைப் பட்டியலில் முதலாவது இடத்தில் சம்பந்தனின் பெயரை இடம்பெறச் செய்திருந்தார். இதனை சம்பந்தன் ஐயா மறுப்பாரா என்று நான் கேட்க விரும்புகிறேன்.

தேர்தலில் வெல்ல வேண்டும் என்பதற்காகவும் ஏனைய வேட்பாளர்களைவிட கூடுதல் வாக்குகளைப் பெற வேண்டு மென்பதற்காகவும் அனந்தி ஆரவாரமாக அறிக்கைகளை என தருமை சில ஊடக நண்பர்கள் ஊடாக வெளியிட்டு தமிழர்களை மீண்டுமொரு பேரழிவிற்கு கொண்டு சென்று விடக்கூடாது என்பது எனது வேண்டுகோள். இறுதிப் போரின் போது தலையிடாத சர்வதேச சமூகம் இப்போது வரப்போவதாக நீங்கள் காட்டும் செப்படிவித்தை வேண்டுமானால் அரசியல் மேடைகளில் அரசியல் பேச்சுக்களில் சூடாக்க உதவும். அது தமிழர்களின் இன்றைக்குத் தேவையான அடிப்படை பிரச்சினைகளைத் தீர்க்க உதவவே உதவாது. இவ்வாறு சிவராஜா தனது அறிக்கையில் மேலும் கூறினார்.

No comments:

Post a Comment