துப்பாக்கிச் சூட்டுப் பிரயோகத்தில் விமானப்படையைச் சேர்ந்த இருவர் பலி! திருகோணமலையில் சம்பவம்!
திருகோணமலை சீனக்குடா மாபிள் பீச்சில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் விமானப் படையைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் நேற்று (2013.08.18) பிற்பகல் 1.00 மணியளவில் விமானப் படைக்குச் சொந்தமான மாபிள் பீச் உல்லாச விடுதியில் இடம்பெற்றுள்ளது.
அங்கு கடமையாற்றும் படை வீரர்களுக்கிடையில் ஏற்பட்ட காதல் விவகாரம் தொடர்பாகவே இத்துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றதாகத் தெரிவிக் கப்படுகிறது. இத்துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் வெலி ஓயாவைச் சேர்ந்த பண்டார (வயது 22), பெண் விமானப் படை வீராங்கனையான நாவலப்பிட்டியைச் சேர்ந்த பிரேமதிலக்க (வயது 21) ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர்.
இருவர் மீதும் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட கோப்ரல் பிரியதர்சன (வயது 27) தனக்குத்தானே தலையில் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட தனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிண்ணியா தள வைத்தியசாலை யிலிருந்து மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
சீனக்குடா விமானப்படை தளத்தில் கடமையிலிருந்த வீரரே அங்கிருந்து துப்பாக்கியுடன் உல்லாச விடுதிக்கு வந்து அங்கு கடமையிலிருந்த இருவர் மீதும் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டதுடன் தனக்குத்தானே துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார்.
தற்போது சடலங்கள் கிண்ணியா தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன. கிண்ணியா பொலிஸார் இச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments :
Post a Comment