Saturday, August 17, 2013

துரோகிகளின் வரலாற்றுக் கதை!

தேர்தல்களில் வென்று பதவிகளைப் பிடிப்பதற்காக தமிழ் மக்களின் ஒற்றுமை பற்றி வாய்கிழியக் கதைப்போர் தான் தமிழ் மக்களைப் பிளவுபடுத்தும் துரோகிகள் கதையை உண்டாக்கினார்கள் என்பது ஒரு வரலாற்று உண்மை.

தமிழர்களுக்கென்று இவர்கள் கட்சிகளை ஆரம்பித்த காலத்திலிருந்தே, இவர்களது கட்சிக்கு மாறான கருத்துக்களைக் கொண்ட தமிழர்களை இவர்கள் துரோகிகள் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். இவர்கள் பேசும் அரசியல் கூட்டங்களில், சிலரை துரோகிகள் என்று இனங்காட்டி, தொண்டர்களைத் தூண்டிவிடுவதன் மூலம் அடி போடும் வன்முறைக் கலாசாரத்தையும் இவர்களே ஆரம்பித்து வைத்தார்கள்.

மேடைகளில் துரோகிகள் பற்றி இவர்கள் நரம்பு புடைக்கக் கத்தியதன் பிற்கால விளைவுதான் மாற்றுக் கருத்துக் கொண்ட தமிழர்களை எல்லாம் மண்டையில் போடுதல் என்னும் இனவீரச் செயலாக விரிவாக்கம் பெற்றது.

பிறகு இவர்கள், அதன் சாதக பாதகங்கள் சாத்தியங்களை யோசியாமலே, அடைந்தால் தனிநாடு அல்லாவிடில் மரணவீடு என்னும் மிகை நம்பிக்கையை தமிழ் மக்களுக்குக் கொடுத்து விட்டுத் தாங்கள் வெளிநாடுகளுக்கு ஓடிப்போன பிறகு, உலக சூழ்நிலையில் வைத்துப் பார்க்கையில் தனிநாடு சாத்தியமில்லை என்றுணர்ந்து, அதன்பின் எதற்காக மக்களைச் சாகடிக்க வேண்டும் என்று மறுகருத்துப் பேச வெளிக்கிட்டவர்களையெல்லாம் தமிழ்மக்கள் துரோகிகளாகவே நம்பத் தலைப்பட்டார்கள்.

முதலில், மக்களுக்காக உயிரையும் இழக்கத்தயாராய் போராடப் புறப்பட்ட இளைஞர் இயக்கங்களில் சில, வன்முறையைக் கைவிட்டு ஜனநாயக வழியில் தீர்வுக்கு முயற்சிப்போம் என்று மாறியபோது, தொடர்ந்தும் தனிநாட்டு நம்பிக்கையிலேயே மூழ்க வைக்கப்பட்டிருந்த மக்களிடம் அவர்கள் துரோகிகள் என்று இனங்காட்டப்பட்டார்கள்.

இந்தத் துரோகிகள் என்ற காட்டிக்கொடுப்புத் தான், ஆயிரமாயிரமாய் அந்தத் தமிழ் இளைஞர்கள் கொல்லப்படுவதை தமிழ் சமூகம் பேசாமல் பார்த்திருக்கும்படி செய்தது.

கன்னப்பட்டைகள் கட்டப்பட்ட குதிரையைப் போன்று வேறு பக்கங்களைப் பார்க்க விடாதவாறு, தனிநாடு கிடைத்தே தீரும் என்று ஊட்டப்பட்ட ஒரே நம்பிக்கையில், தனியொரு இயக்கத்தை வளரவிட்டும் அதற்கு மாறான கருத்துக் கொண்டோரெல்லாம் தனிநாடு கிடைப்பதற்குத் தடையாக உள்ளவர்கள்-துரோகிகள் என்றும் நம் சமூகம் எண்ண வைக்கப்பட்டது.

பிறகு அந்த இயக்கத்திற்குள்ளும், இரண்டாவது தலைமை நிலையிலிருந்த மாத்தயா, இந்தியா தனிநாட்டை விடாது என்று தெரிந்து மாற்றுத் தீர்வை முயன்றபோது, அவரும் அவரது தோழர்களும் துரோகிகள் என்றானார்கள். தனிநாட்டுக்கெதிராக றோவினால் வாங்கப்பட்ட துரோகிகள் ஒழியட்டும் என்று சமூகமும் அமைதிகாத்தது.

இதற்குப்பின் இரண்டாம் நிலையிலிருந்த கருணா, வெளிநாடுகளுக்குப் பேச்சுவார்த்தைக்குச் சென்றதில், சர்வதேசம் தனிநாட்டுக்கு ஒருபோதும் சம்மதியாதென்று புரிந்துகொண்டபின், நோர்வே இதுதான் உங்களுக்கான கடைசிவாய்ப்பு என்று சொல்லி நீட்டிய சமாதானத்துக்கான ஆவணத்தில் கையெழுத்திட்டார். இறுதியில் அந்த சமாதான ஆவணத்துடன் வந்திறங்கியவரும் துரோகியானார்.

தனிநாட்டு நம்பிக்கையில் ஊறிப்போன மக்களுக்கு அதற்கு மாற்றாக எது சொன்னாலும் துரோகமாகவே தெரிந்தது. கடைசிப் போரில் உயிர் தப்பிய பத்தாயிரத்துக்கு மேற்பட்ட போராளிகளும் கூட, தனிநாட்டுக்காக உயிரை விடாமல் பிழைத்துவந்து விட்ட ஒரே காரணத்திற்காகத்தான் அவர்களையும் துரோகிகள் என இந்த சமூகம் புறக்கணிப்பதாகத் தெரிகிறது.

2 comments :

Anonymous ,  August 17, 2013 at 8:54 PM  

They make the people very cheap,just like "Head shaking" Thanjavoor toys
it is a crime,why some of the people
don`t realize that they go through a
hardest period.It`s clear they are being mesmorized by the heart rending racial hatred speeches for a long long time.This will never and ever bring success to the tamils.

Anonymous ,  August 17, 2013 at 9:31 PM  

அட போங்கய்யா 1983 இல் யாழ்ப்பாணத்து பிச்சைக்காரன் எல்லாம் இயக்கஙகளுடைய பலி ஆடுகள் இன்று ஒரு இயக்கம் ஒருத்தனை போட்டால் அடுத்தநாள் மற்ற இயக்கம் தன்னுடைய பெயருக்காக ஒருத்தனை போட்டு அதுக்கு ஒரு கதையும் எழுதி ஒட்டிவிடும் நாங்களும் பெடியளை ஏமாத்த இயலாது என்று உசுப்பெதிவிடும் கதை. அது நாளடைவில் ஆட்டை கடித்து மட்டை கடித்து ஆளை கடிக்கும் போது ஓடி தப்பியவர்களும் வால் பிடித்தவர்களும் போக மற்றவர் கடி வேண்டியதுதான்.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com