கிராண்டபாஸ் பிரதேசத்தில் உருவாகியிருந்த அசமந்த நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அங்கு அமைதி நிலை காணப்படுவதாகவும் பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்கக்கோன் தெரிவித்துள்ளார். அங்கு அமைதியை தொடர்ந்து பேணும் பொருட்டு இராணுவத்தினரும் விசேட அதிரடிப் படையினரும் நிலைகொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கிராண்பாஸிலுள்ள பள்ளி ஒன்றும் அருகிலுள்ள வீடுகள் சிலவும் இனம்தெரியாத குழுவொன்றினால் தாக்குதலுக்கு உள்ளானதை தொடர்ந்து அங்கு பதட்ட நிலைமை ஒன்று உருவானதை அடுத்து பிரதேசத்தில் பொலிஸார் ஊரடங்க உத்தரவை பிறப்பித்திருந்தனர்.
இதை தொடர்ந்து சில சக்திகள் தவறான பிரச்சராங்களை மேற்கொண்டு நிலைமையை மேலும் சிக்கலடையச் செய்ய முயன்று வருவதாகவும் தவறான அறிக்கைகளை மக்கள் நம்ப வேண்டாம் என்றும் பொலிஸ் மா அதிபர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மதத்தின் பெயரால் பிரச்சனைகளை உருவாக்கி கொள்ளக்கூடாது என்றும் மக்கள் இவ்விடயத்தில் அவதானமாக செயற்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதேநேரம் பள்ளிவாசல் தாக்கப்பட்ட சம்பவத்தை இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் கண்டித்துள்ளது. இலங்கையில் முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக அண்மைக்காலமாக பல தாக்குதல்கள் நடந்துவருவது கவலை அளிக்கிறது என அமெரிக்க தூதரகத்தின் அறிக்கை கூறுகிறது.
வழிபாட்டு இடங்கள் தாக்குதல் இலக்காக்கப்படக்கூடாது என்றும் அனைத்து தரப்பும் அமைதி காக்க வேண்டும் என்றும் அது கூறியுள்ளது.
வன்முறைக்கு காரணமானவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், மத அடிப்படையிலான வன்முறை முடிவுக்கு வர வேண்டும் என்றும், இலங்கை மக்களின் மத சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அது கேட்டுக்கொண்டுள்ளது.
No comments:
Post a Comment