பொலிஸாரில் சிலர் விபச்சாரத்திற்குத் துணை போகின்றனர்! எல்லாக் குற்றங்களும் முச்சக்கர வண்டிச் சாரதிகளைச் சேர்கின்றன! (அதிரடிச் செய்தி)
கொழும்பில் உள்ள சில பொலிஸார் காலையில் விபச்சாரத்தில் ஈடுபடுபவர்களைக் கைது செய்தாலும், இரவில் தமது முச்சக்கர வண்டிகளில் விடுதிகளுக்கு அனுப்பிவைப்பதாக அகில இலங்கை முச்சக்கர வண்டிச் சாரதி மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஸுதில் ஜயருக் தெரிவித்தார்.
கொழும்பில் இன்று (17) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டே அவர் இந்தக் கருத்தினைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
விபச்சாரிகளையும், போதைப் பொருட்களையும் ஏற்றிச் செல்வதற்காக எப்பொழுதும் முச்சக்கர வண்டிச் சாரதிகள் மீதே குற்றம் சுமத்தப்படுகின்றது. ஆனால், இன்று கொழும்பு புறக்கோட்டையில் எத்தனை பொலிஸார் முச்சக்கர வண்டிகளை ஓட்டுகின்றனர்?
இந்தப் பொலிஸார் மாலையில் தமது பகுதி நேரத் தொழிலாக முச்சக்கர வண்டிகளை வாடகைக்கு விடுகின்றனர். இவர்கள் இரவில் விபச்சாரிகளை விடுதிகளுக்கு அழைத்துச் செல்கின்றனர். இது பொலிஸ் சீருடைக்குச் செய்யும் அவமரியாதையாகும்.
காலையில் விபச்சாரிகளைக் கைதுசெய்து கூண்டில் அடைத்து அவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்துகின்றனர். மாலையில் விபச்சாரிகளை ஏற்றிச் செல்கின்றனர். முச்சக்கர வண்டி தொழிற்றுறை மீது எப்போதும் குற்றம் சுமத்தப்படுகின்றது. தொழிலுக்காக முச்சக்கர வண்டியை ஓட்டும் சாரதிகள் இதனைச் செய்வதில்லை.
விபச்சாரிகளையும் போதைப் பொருட்களையும் ஏற்றிச் செல்ல வேறு முச்சக்கர வண்டிகள் இருக்கின்றன. சிலர் கஞ்சா போன்ற பொருட்களை பஸ்களில் எடுத்து வந்து, முச்சக்கர வண்டிகளில் தேவையான இடங்களுக்குக் கொண்டு செல்கின்றனர்.
முச்சக்கர வண்டிச் சாரதிகள் பயணிகள் பொதிகளை சோதனையிட மாட்டார்கள். அவர் வாடகைக்கு அவர்களை அழைத்துச் செல்வதை மட்டுமே செய்கின்றார்கள். இறுதியில் முச்சக்கர வண்டிச் சாரதிகளே குற்றவாளிகள். முச்சக்கர வண்டி மீதுதான் சகல குப்பைகளும் கொட்டப்படுகின்றன.’ என்றும் குறிப்பிட்டார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment