Tuesday, August 27, 2013

பெண் பத்திரிக்கையாளர் கற்பழிக்கப்பட்டமைக்கு காவல் துறை உடந்தையா?

மும்பையில் பெண் பத்திரிக்கையாளரை பாலியல் வன் கொடுமைக்கு உட்படுத்திய குற்றவாளிகளை பொலீசார் கைதுசெய்துள்ளனர். இந்நிலையில் இக்கொடூரத்தை செய்த முக்கிய குற்றவாளியாக கருதப்படும் நபருடன் காவல் துறையை சேர்ந்தவர் ஒருவர் தொலைபேசி தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது.

வேலை நிமித்தமாக ஒரு பழமையான கட்டிடத்திற்கு சென்ற பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் 5 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டார். குற்றவாளிகள் 5 பேரையும் பொலீசார் கைது செய்துள்ள நிலையில், மும்பை குற்றப்பிரிவில் கான்ஸ்டபிளாக பணிப்புரியும் சலீம் முஜாவர் என்பவர், முக்கிய குற்றவாளியாக கருதப்படும் பன்காளியை கடந்த மாதம் இறுதி முதல், சம்பவம் நடந்த அன்று இரவு வரை 80 முறை மொபைலில் தொடர்பு கொண்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

பாலியல் வன்கொடுமை சம்பவம் நடந்தது தெரிந்த உடனேயே, கான்ஸ்டபிள் முஜாவர், பன்காளியை மொபைலில் தொடர்பு கொண்டு, என்எம் ஜோஷி மார்க்கில் உள்ள குற்றப்பிரிவு அலுவகத்திற்கு வரும்படி தெரிவித்துள்ளார். இதனால் சுதாரித்துக்கொண்ட பன்காளி, அவரது வீட்டைவிட்டு வெளியேறி தலைமறைவானார். முஜாவர் சந்தேகத்தின் பேரில் பன்காளியை அழைத்ததே அவர் தப்பியோட காரணம் என சில பொலீசார் தெரிவித்தனர்.

அத்துடன் குறித்த குற்றவாளி மீது ஏற்கனவே 4 கொள்ளை வழக்குகள் பதிவாகியுள்ளன. இவரை ஏற்கனவே முஜாவர் கைது செய்துள்ளார். பாலியல் பலாத்காரம் குறித்த தகவல் அறிந்தவுடன் முஜாவருக்கு பன்காளி மீது சந்தேகம் வந்துள்ளது, இதனால்தான் அவர் குற்றவாளியை மொபைல் மூலம் தொடர்பு கொண்டார் எனத் தெரிவிக்க்பபடுகின்றது.

இதேவேளை குறித்த பெண் பத்திரிக்கையாளரை கற்பழித்து விட்டு சில மணிநேரம் கழித்து மும்பை, என்.எம். ஜோஷி மார்க் பொலீஸ் நிலையம் அருகேயுள்ள டீக்கடையில் தேநீர் அருந்தியுள்ளார் கைது செய்யப்பட்ட மற்றுமொரு குற்றவாளி விஜய் ஜாதவ். இவர் நண்பர்கள் ஏற்பாடு செய்த தாஹி ஹந்தி பயிற்சி அமர்வில் பங்கேற்று, பிறகு டீ குடித்து விட்டு மற்றொரு கற்பழிப்பு குற்றவாலியான சலிம் அன்சாரியை சந்தித்து பிறகு இருவரும் அருகில் உள்ள மீன் மார்கெட்டில் படுத்து தூங்கியுள்ளனர்.

வெள்ளிக்கிழமை அன்று எதுவும் நடக்காதது போல் தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே என்ற படத்திற்கு மாட்னி ஷோவிற்கு சென்றுள்ளனர். சினிமா முடிந்து திரும்பிய போது தங்களது கற்பழிப்பு கூட்டாளி சந்த் பாபுவை போலீஸ் கைது செய்ததை அறிந்தனர். உடனே ஜாதவ் வீடியோ பார்லர் ஒன்றில் பதுங்கியுள்ளார். கூட்டாளி அன்சாரி குர்லா சென்று அங்கிருந்து டெல்லி ரெயிலில் ஏறச் சென்றுள்ளார். இதனையடுத்து டெல்லியில் அன்சாரி கைது செய்யப்பட்டார்.

தங்களை பிடித்து விட முடியாது என்றே குற்றவாளிகள் நம்பியதாக பொலீஸ் தரப்பு கூறியுள்ளது.

No comments:

Post a Comment