Friday, August 16, 2013

பிறை விவகாரத்தில் பொறுமையோடும் கண்ணியத்தோடும் நடந்துகொள்ளுங்கள்! ஜம்இய்யத்துல் உலமா

கடந்த வாரம் உலக முஸ்லிம்கள் ஈதுல் பித்ர் பெருநாளைக் கொண்டாடினர். அவ்வாறே நம்நாட்டு முஸ்லிம்களும் கொண்டாடினர். ஷவ்வால் பிறை சம்பந்தமாக எழுந்த தெளிவற்ற நிலைமை காரணமாக சிலர் 29 ஆம் நோன்போடு ரமழானை முடித்துக்கொண்ட அதேவேளை நாட்டு மக்கள் முப்பதாக ரமழானை நிறைவுசெய்தனர்.

இதனைக் காரணமாக வைத்துக்கொண்டு சிலர் தமது சுயவிருப்பங்களை வெளிப்படுத்துவதைப் பார்த்து முஸ்லிம் சமூகம் வெட்கிக் குனிய வேண்டியிருக்கிறது. முஸ்லிம்களின் சன்மார்க்க விடயங்களில் வழிகாட்டும் ஒரு ஸ்தாபனமான உலமா சபையை உரிய பின்னணிகளை புரியாத ஒருசிலர் அச்சபை கலைக்கப்பட வேண்டும், தலைமை மாற்றப்பட வேண்டும் என்றெல்லாம் கோரிக்கை விடுப்பதும் நோட்டிஸ் அடிப்பதும் வெப்தளங்களில் எழுதுவதுமானது மேலான முஸ்லிம் சமூகத்திற்கு இழுக்கையே கொண்டுவரும் என்பதையிட்டு அவர்கள் கவனம் செலுத்தாதது ஆச்சரியமே.

பெருநாள் கழித்து மறுநாள் முதல் எழுதப்படும் யாவும் எம்மை ஆரோக்கியமான இடத்துக்கு இட்டுச்செல்ல மாட்டாது. மாறாக முஸ்லிம் உம்மாவை அதளபாதாளத்தில் போட்டுவிடும் என்பதை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா நினைவூட்ட விரும்புகிறது.

உலமா சபைக்கென ஒரு யாப்பு உண்டு. அதன் பிரகாரமே தெரிவும் மற்ற கருமங்களும் நடைபெறுமேயன்றி எவருடைய முன்மொழிவுகளும் கணக்கெடுக்கப்பட மாட்டாது. எனவே உலமாக்களை மதிப்போர் அவர்களுடன் மரியாதையாக நடக்கவும் தெரிந்துக்கொள்ள வேண்டும்.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவைப் பொறுத்தவரை பிறை விடயமாக தனது கிண்ணியாக் கிளையை இவ்வாரம் சந்திக்க இருக்கிறது. எனவே பொறுமையோடும் கண்ணியத்தோடும் நடந்துகொள்ளுமாறும் இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான புறச் சக்ததிகளுக்கு பாதைவிடாதிருக்குமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறது.

No comments:

Post a Comment