Wednesday, August 7, 2013

நாட்டின் எந்தப் பகுதியிலும் பிறை தென்படாததால் வெள்ளிக்கிழமை பெருநாள்! - ஜம்இய்யத்துல் உலமா சபை (பார்க்க: இரண்டாம் இணைப்பு)

கிண்ணியா.நெட் இணையத்தளத்தில்,

கிண்ணியாவில் ஜாவாப் பள்ளி , காக்கமுனை, ஜாமில் அஸ்கர் ஆகிய மூன்று இடத்தில் நம்பகமான சுமார் 20 பேர் பிறை காண்டதாக கொழும்பு பெரிய பள்ளிவாசலுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது கொழும்பு பெரிய பள்ளி வாசலின் உத்தியோக பூர்வமான முடிவினை எதிர் பார்க்கப்படுகின்றது.

என்று செய்தி வெளியாகியதைத் தொடர்ந்து நாட்டின் பல பகுதிகளிலும் முரண்பாடான கருத்துக்கள் ஆங்காங்கே கசிந்துவருகின்றன.

பெரும்பாலானோர் இந்தச் செய்தியை வைத்து, நாளை சந்தேகத்திற்குரிய நாள் என்று நோன்பு பிடிப்பதிலிருந்து தம்மைத் தவிர்த்துக்கொள்வதற்கு ஆவன செய்கின்றனர்.

உடனே நாம், 0777366099 என்ற இலக்கத்துடன் 22:56 இற்குத் தொடர்பு கொண்டு இதுபற்றி வினவினோம்.

அதற்கு விடையாக 'ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை நாட்டின் எந்தவொரு பிரதேசத்திலும் இன்று புதன்கிழமை தென்பட்டவில்லை என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை அறிவித்ததுடன், இலங்கை வாழ் முஸ்லிம்கள் நாளை வியாழக்கிழமை 30ஆவது நோன்பு நோற்குமாறும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை அறிவித்தது.

மேலும், கிண்ணியாவில் கண்டதற்கான உத்தியோகபூர்வ அறிவித்தல்கள் எதுவும் தங்களுக்குக் கிடைக்கவில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு கொழும்பு பெரிய பள்ளிவாசலின் இன்று புதன்கிழமை மாலை இடம்பெற்றிருந்தது. இம்மாநாட்டில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பிரதிநிதிகள், கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள், முஸ்லிம் சமய கலாசார திணைக்கள பிரதிநிதிகள், பள்ளிவாசல்கள், தைக்காக்கள் மற்றும் சாவியக்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(கேஎப்)

இரண்டாம் இணைப்பு

கிண்ணியாவில் பிறை தென்பட்டது உண்மை! வியாழன் நாடுமுழுவதும் பெருநாள் கிண்ணியா ஜம்மியத்துல் உலமா

கிண்ணியாவில் தலைப்பிறை தென்பட்டதை கிண்ணியா ஜம்மியத்துல் உலமா உறுதிப்படுத்தியுள்ளது. சற்று முன்னர் (12.30 AM) கிண்ணியா ஜம்மியத்துல் உலமா சபை தலைவர் ஹிதாயத்துல்லாஹ் மௌலவி இதுபற்றித் தெரிவித்ததாக கிண்ணியா நெட்டிற்கு உறுதிப்படுத்தியுள்ளார்.

கிண்ணியாவில் பிறையை பார்த்ததாகக் கூறியவர்களுடன் கிண்ணியா ஜம்மியத்துல் உலமா, மற்றும் தஃவா அமைப்புக்கள் விசேடமாக நடாத்திய ஒன்றுகூடலின் பின்னரே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விஷேட அறிக்கை அகில இலங்கை ஜம்மியத்துல் உலாமாவிற்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என மௌலவி குறிப்பிட்டுள்ளார்.

எனவே இன்று (8) வியாழக்கிழமை இலங்கை முழுவதும் நோன்புப் பெருநாள் கொண்டாடுமாறு கிண்ணியா ஜம்மியத்துல் உலமா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment