வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தன் ஆலயத் திருவிழாவிற்கான கொடிச்சீலை இன்று (11.08.2013) காலை 10.00 மணிக்கு ஆலயத்திற்கு கொண்டுவரப்பட்டு ஆலயத்தின் பிரதம குருக்களிடம் கையளிக்கப்பட்டது.
யாழ். நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா நாளை(12.08.2013) திங்கட்க்கிழமை காலை 10.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில், கொடியேற்றத் திருவிழாவுக்காக ஏற்றப்படுகின்ற கொடி வருடா வருடம் செங்குந்த பரம்பரையினரால் வழங்கப்பட்டு வருவது வழக்கமாகும்.
வழமைபோல், இம்முறையும் கல்வியங்காட்டு பகுதியிலுள்ள செங்குந்த பரம்பரையைச் சேர்ந்தவர்களின் வீட்டிலிருந்து காலை 8.30 மணிக்கு நடைபெற்ற விசேட ஆராதனையை தொடர்ந்து எடுத்துவரப்பட்ட கொடிச்சீலை, கல்வியங்காடு வேல்மடம் முருகன்ஆலயத்திற்கு கொண்டுவரப்பட்டதுடன் அங்கு நடைபெற்ற விசேட ஆராதனைகளை தொடர்ந்து அங்கிருந்த சிறிய தேரில் வைக்கப்பட்டு நல்லூர் ஆலயத்திற்கு எடுத்து வரப்பட்டது.
காலை 10.00 மணியளவில் நல்லூர் ஆலய பிரதம குருக்களிடம் இந்தக் கொடிச்சீலை கையளிக்கப்பட்டது. இதே வேளை நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தக் கொடியேற்றம் நாளை திங்கட்க்கிழமை காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகி தொடர்ந்து 25 நாட்கள் நடைபெறவுள்ளன.
No comments:
Post a Comment