Thursday, August 1, 2013

தென்னாபிரிக்காவுக்கு எதிரான தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது இலங்கை!

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான 5 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரினை இலங்கை யணி , 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. தொடரின் இறுதிப்போட்டி நேற்றைய தினம் கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கையணி முதலில் துடுப்பெடுத்தாடி 50 ஓவர்களில் 4 விக்கட்டுகளை இழந்து, 307 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. அணி சார்பாக திலகரட்ண டில்ஷான் 99 ஓட்டங்களையும், குமார் சங்கக்கார ஆட்டமிழக்காமல் 75 ஓட்டங்களையும் லஹிறு திரிமான்னே 68 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இந்நிலையில் 308 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி, 43.5 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து, 179 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. இதனால் இப்போட்டியில் இலங்கை யணி 128 ஓட்டங்களினால் வெற்றிபெற்றது.

தென்னாபிரிக்க அணி சார்பாக அணித்தலைவர் ஏ பீ டீ வில்லியஸ் 51 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். இலங்கையணியின் பந்துவீச்சில் சுரங்க லக்மால் , அஜந்த மென்டிஸ் ஆகியோர் தலா 3 விக்கட்டுகளையும், சச்சித்ர சேனாநாயக்க 2 விக்கட்டுகளையும் கைப்பற்றினர்.

போட்டியின் ஆட்டநாயகனாக டில்ஷான் தெரிவுசெய்யப்பட்டதோடு, போட்டித் தொடரின் ஆட்டநாயகனாக குமார் சங்க்;கார தெரிவுசெய்யப்பட்டார். இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான 3 போட்டிகளை கொண்ட ருவென்றி – 20 தொடரின் முதலாவது போட்டி நாளை நடைபெறவுள்ளது.

இதேவேளை நேற்றைய போட்டியில் 75 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட குமார் சங்கக்கார ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் அதிகூடிய ஓட்டஙகளை பெற்றுக் கொண்டோர் வரிசைகயில் 4 ம் இடத்திற்கு முன்னேறினார். அவர் இதுவரை 354 போட்டிகளில் 16 சதம், 79 அரைச்சதம் உள்ளடங்கலாக 11 ஆயிரத்து 798 ஓட்டங்களை பெற்றுள்ளார்.

இத்தரவரிசையில் முதலிடத்தில் இந்தியாவின் சச்சிண் டண்டுல்கரும், 2 ம் இடத்தில் அவுஸ்திரேலியாவின் ரிக்கி பொன்டிங்கும், 3 ம் இடத்தில் இலங்கை யணியின் சனத் ஜெயசூரியவும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment