கிளிநொச்சியிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் மாற்றுவதற்கு தயாராக வைத்திருந்த 30ஆயிரம் ரூபா போலி நாணயத் தாள்களைக் கைப்பற்றிய குற்றத்தடுப்புப் பொலிஸார் அதனுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் நால்வரையும் கைது செய்துள்ளனர்.
இச் சம்பவம் நேற்றிரவு 8.15 மணியளவில் கிளிநொச்சி நகரப் பகுதியில் உள்ள முகவர் நிலையம்
ஒன்றில் இடம் பெற்றது.இது குறித்து மேலும் தெரிய வருவதாவது:
குறித்த நிலையத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் தனது நண்பர்களுடன் இணைந்து 50 ஆயிரம் ரூபா போலி நாணயத்தாள்களை மாற்றுவதற்காக வைத்திருந்தார். இது குறித்து பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலைத் தொடர்ந்து விரைந்து செயற்பட்ட பொலிஸார் குறித்த நிலையத்தை முற்றுகையிட்டு,சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.சோதனையின்போது மாற்றுவதற்கு தயார்நிலையில் வைக்கப்பட்டிருந்த 30 ஆயிரம் ரூபா போலி நாணயத்தாள்களைக் கைப்பற்றினர். 20 ஆயிரம் ரூபா பண நோட்டுக்களை இவர்கள் மாற்றியிருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கப்பட்டது.
இதனுடன் தொடர்புடையதாக சந்தேகப்படும் மேற்படி நிலையத்தின் பணியாளர், அவரின் நண்பர்கள் இருவர் மற்றும் ஆட்டோ சாரதி என நால்வரை பொலிஸார் கைது செய்தனர். இச் சம்பவத்துடன் தொடர்புடையவர் எனக் கருதப்படும் மேலும் ஒரு நபரை பொலிஸார் தேடிவருகின்றனர். மாற்றுவதற்குத் தயார் நிலையில் வைத்திருந்த அனைத்துப் போலி நாணயத்தாள்களும் ஆயிரம் ரூபாத் தாள்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment