தமிழீழ மாநாட்டில் கலந்துகொள் சென்ற 12 பல்கலைக்கழக விரிவுரையாளர்களை பணிநீக்க நடவடிக்கை!
லண்டனில் நடைபெற்ற தமிழீழ மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர், உயர்க்கல்வி அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளை ஏமாற்றி அனுமதியை பெற்றுக்கொண்ட இலங்கை பல்கலைக் கழகங்களைச் சேர்ந்த 12 விரிவுரையாளர்களை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பணிகளில் இருந்து நீக்க உயர்கல்வி அமைச்சு தயாராகி வருகிறது என கொழும்பு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பிரதமரையும், தன்னையும் ஏமாற்றி அனுமதியை பெற்றுக்கொண்ட விரிவுரையாளர்களில் 04 பேர் வரை குறித்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ளதாகவும் ஏனையவர்கள் விசாஅனுமதி கிடைக்காததால் பிரித்தானியாவுக்குச் செல்ல முடியாத போதிலும் அவர்கள் அனைவரையும் பணியில் இருந்து நீக்குவதற்கான உரிய விசாரணைகளை நடாத்துமாறு அமைச்சின் செயலாளர் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு அறிவித்துள்ளதாகவும் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கடந்த 14 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதிவரை லண்டனில் நடைபெற்ற தமிழ் அறிவியல் தொடர்பான மாநாட்டில் கலந்து கொள்ளச்செல்வதாக கூறி, இந்த விரிவுரையாளர்கள், பிரதமரிடமும், உயர்கல்வி அமைச்சரிடமும் அனுமதி பெற்றுள்ளனர்.
எனினும் இந்த மாநாடு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் நடவடிக்கை மத்திய நிலையத்தினால் நடாத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விடயம் தொடர்பில் சரியான தகவல்களை பெற்றுக்கொள்வதற்காக இலங்கை வெளிவிவகார அமைச்சும், பாதுகாப்பு அமைச்சும் பிரித்தானிய அரசாங்கத்தின் உதவியை பெறவுள்ளன எனவும் திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
ஒற்றையாட்சி நாட்டுக்கு ஆதரவாக பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ள இலங்கையின் எந்த அரச அதிகாரிகளும் பிரிவினைவாத நோக்கத்தின் கீழ் நடாத்தப்படும் இவ்வாறான மாநாடுகளில் கலந்துகொள்ள எவ்விதமான சட்ட ரீதியான அனுமதிகளும் வழங்கப்பட வில்லை எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.ஏ.எம். ரமீஸ்,கிழக்கு பல்கலைக்கழக பேராசிரியர் செல்லையா யோகராஜ், யாழ். பல் கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் எஸ். சுப்ரமணியம், பேராதனைப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் வீ.மகேஸ்வரன் யாழ்.பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் எஸ். தர்மேந்தி, பேராதனைப் பல்கலைக் கழகத்தின் சிரேஷ்ட உதவி நூலக அதிபர் ராசையா மகேஸ்வரன் மற்றும் பேராசிரியர் விசாகரூபன் ஆகியோர் இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக விடுமுறை அனுமதியை பெற்றுள்ளனர்.
புலனாய்வு தகவல்களின் பிரகாரம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழு இது குறித்து கவனம் செலுத் தியதாகவும் இதன் போது இவர்கள் ஆய்வு ஒன்று செல்வதாகக்கூறி அனு மதியை பெற்றுள்ளதாக தெரியவந்துள் ளது எனவும் அமைச்சர் திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழு, புலனாய்வு பிரிவினரின் உதவி யுடன் விசாரணைகளை நடாத்தி வருவ தாகவும் இவர்கள் நாட்டின் இறை யாண்மைக்கு எதிராக செயற்பட்டிருந் தால், அவர்கள் உடனடியாக பதவிகளில் இருந்து நீக்கப்படுவார்கள் எனவும் அமைச்சர் கூறியுள்ளார் என கொழும்பு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
0 comments :
Post a Comment