வெலிவேரிய தாக்குதலில் 05 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது!- ஜே.வி.பி
வெலிவேரிய பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற சம்பவத்தில் 05 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது என ஜே.வி.பியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்தார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நேற்றைய சம்பவத்தில் 16 வயதான கஹந்தவஆராச்சிலாகே தேன் அகில தினேஷ் என்ற இளைஞர் உயிரிழந்துள்ளார். மேலும் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். பொலிஸாரும், வைத்தியசாலை தரப்பினரும் சரியான தகவல்களை வழங்குவதில்லை.
தமது உறவினர்கள், பிள்ளைகள் வீடுகளுக்கு வரும்வரை பிரதேச மக்கள் பார்த்து கொண்டிருக்கின்றனர். அந்த பிரதேசத்தில் இராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது. இராணுவ தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தாக்குதலுக்கு பின்னர், வீட்டில் இருந்தவர்கள் வீதிக்கு அழைத்துச் சென்று தாக்கியுள்ளனர்.
ரத்துபஸ்வல மக்கள் குடிக்க குடிநீர் கேட்டு பல நாட்கள் போராட்டம் நடத்தி வந்தனர். அன்றாட பாவனைக்காகவும், குடிக்கவும் அவர்கள் சுத்தமான தண்ணீரை கேட்டனர். தண்ணீர் கேட்ட மக்களுக்கு அரசாங்கம் இராணுவத்தின் ஊடாக துப்பாக்கி, பொலிஸாரின் தடிகள் மூலம் தாக்குதல் நடத்தி பதிலளித்தது. போராட்டம் நடத்திய மக்களின் கை, கால்களை உடைத்து இறுதியில் கொலை செய்துள்ளது.
இராணுவம் நடத்திய இந்த மிலேச்சத்தனமான தாக்குதலையும் கொலையையும் ஜே.வி.பி வன்மையாக கண்டிக்கின்றது. அத்துடன் உயிரிழந்த இளைஞர்களின் குடும்பத்திற்கு அனுதாபங்களையும் தெரிவித்து கொள்கிறது என்றார்.
0 comments :
Post a Comment