ஒரு திட்டமிடப்பட்டுள்ள தேர்தலுக்கு மூன்று மாதங்களுக்கும் குறைவான காலத்தில் கெவின் ரூட்டை திடீரென ஆஸ்திரேலிய பிரதமராக இருத்தியிருப்பதும், ஜூலியா கில்லார்ட்டை அகற்றியிருப்பதும் ஒரு முன்னோடியில்லாத அரசியல் நிகழ்வாகும். ஜூன் 2010ல் உள்கட்சி ஆட்சி சதியின் மூலம் ரூட்டை பிரதம மந்திரி பதவியில் இருந்து அகற்றி, கில்லார்ட்டை பிரதமராக்கிய அதே தொழிற் கட்சி அங்கத்தவர்களின் செயற்பாடுதான் இப்பொழுது ரூட் மீண்டும் வந்துள்ளதற்கும் காரணமாகும்.
இந்த அசாதாரண அரசியல் கொந்தளிப்பு, ஆஸ்திரேலிய முதலாளித்துவம் அரசியல், சமூக உறுதிப்பாட்டிற்கு ஒரு பாதுகாப்பு அரண் என்று பெரும் அக்கறையுடன் அரசியல் மற்றும் செய்தி ஊடகத்தால் பிரச்சாரம் செய்யப்படும் சர்வதேச தோற்றத்தை பொய்யாக்குகிறது. ஒரு நூற்றாண்டிற்கும் மேல் பாராளுமன்ற அமைப்புமுறை மற்றும் இரு கட்சிமுறையின் முக்கிய ஊண்டுகோலாக இருந்து ஆஸ்திரேலிய முதலாளித்துவத்திற்கு சேவைசெய்துள்ள தொழிற் கட்சி இப்பொழுது ஒரு இறுதியான நெருக்கடியால் அதன் இருப்பிற்கே ஆபத்தான நிலையில் உள்ளது.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, ஆஸ்திரேலிய மக்களின் முதுகிற்கு பின்னே செயல்படுத்தப்பட்ட 2010 ஆட்சி மாற்றம் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுக் கொள்கைகளில் நீண்டகால விளைவுடைய மாற்றங்களை கொண்டுவருவதற்காக நடத்தப்பட்டது. பெருநிறுவன உயரடுக்கு, ரூட்டின் கொள்கைகளுடன் தொடர்புபட்ட யுத்தத்திற்கு பின்னரான நிதிய நெருக்கடிக்கு ஊக்கம் தரும் நடவடிக்கைகளை கைவிடவேண்டும் என்றும், தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்களை குறைக்கும் நோக்கமுடைய சிக்கன நடவடிக்கைகள் செயல்படுத்தப்படவேண்டும் என்றும் கோரின.
அதே நேரத்தில் ரூட்டின் இராஜதந்திர முன்முயற்சிகளான, அமெரிக்காவிற்கு அழுத்தம் கொடுத்து ஆசிய பசிபிக்கில் சீனாவிற்கு அதன் மூலோபாய செல்வாக்கு சிலவற்றை விட்டுக் கொடுக்க வேண்டும் எனப்பட்டவற்றை முடிவிற்குக் கொண்டுவர வாஷிங்டன் உறுதி கொண்டது. ஒபாமா நிர்வாகம், ஆசியாவிற்கு “முக்கியத்துவம் கொடுக்கும்” ஆக்கிரோஷ கொள்கை மூலம் சீனாவைச் சுற்றி வளைப்பதற்கும் பின்னர் அதன் மீது போர் தொடுக்கும் நிலைப்பாட்டிற்கும் ஆஸ்திரேலியாவை இசைவாக கொண்டுவர கில்லார்ட்டை ஒரு கருவியாக கண்டது.
மூன்று ஆண்டுகளுக்குப் பின், ஆட்சிமாற்றத்தைத் தூண்டிய மோதல்களும் நெருக்கடிகளும் தீவிரம்தான் அடைந்துள்ளன. ஒபாமாவின் “முக்கியத்துவம் கொடுக்கும்” கொள்கை இது பின்னர் மூலோபாயம் என கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது இப்பொழுது யதார்த்தமாகிவிட்டது. இதில் ஒரு பாரிய அமெரிக்க இராணுவ பலப்படுத்தல் இப்பிராந்தியத்தில் நடைபெறுவதுடன், சீனாவிற்கு எதிரான ஆத்திரமூட்டல்கள் தொடர்கின்றன. இவை ஆசிய பிராந்தியம் முழுவதும் ஆபத்தான வெடிப்புமிக்க இடங்களை உருவாக்கிவிட்டுள்ளன.
உலகப் பொருளாதார நெருக்கடியும் இதேபோல் விரைவுபட்டுவிட்டது. இப்பொழுது ஆஸ்திரேலியாவில் இன்னும் அதன் நேரடி விளைவை காண்கிறது. உலக நிதியச்சரிவை தொடர்ந்த உடனடிக்காலத்தில் ஆஸ்திரேலிய முதலாளித்துவத்திற்கு ஒரு குறிப்பிட்ட இடைக்கால பாதுகாப்பளித்த சீனாவின் உந்துதலுடனான சுரங்கத் தொழில் ஏற்றுமதி எழுச்சி இப்பொழுது முடிந்து விட்டது.
நேற்று வெளிவந்த ஒரு ப்ளூம்பேர்க் கட்டுரை ஆஸ்திரேலியப் பொருளாதாரத்தை உறுதிப்படுத்தப்பட்ட கடன் கடமைப்பாடு (CDO) நிலைமையுடன் ஒப்பிட்டுள்ளது. இது 2008 நிதியச் சரிவைத் தூண்டிய “நச்சுச் சொத்துக்களில்” ஒன்று எனக் கூறப்பட்டது. “வெடிப்பதற்கு காத்திருக்கும் நேரத்திற்கு வெடிக்கும் குண்டுதான் ஆஸ்திரேலியா” என்று Société Générale SA உடைய லண்டனை தளமாக கொண்ட மூலோபாயவாதி ஆல்பேர்ட் எட்வார்ட்ஸ் அறிவித்துள்ளார். “இது ஒரு CDO மட்டும் அல்ல, தன்னை இருமடங்காக பெருக்கிக் கொண்டுள்ள CDO ஆகும். இப்பொழுது ஆஸ்திரேலியாவில் இருப்பது எல்லாம், மிக எளிதாகக் கூற வேண்டும் என்றால், சீனாவின் இன்னும் பெரிய கடன் குமிழியைத் தனது உயிர்வாழ்விற்கு நம்பியிருக்கும் ஒரு பாவனைப் பொருட்களின் எழுச்சியின் மீது கட்டமைக்கப்பட்ட ஒரு கடன் குமிழியாகும்.”
ஏற்கனவே பல ஆஸ்திரேலிய மாநிலங்கள் உத்தியோகபூர்வ மந்த நிலையில் உள்ளன. பாரிய பணிநீக்கங்கள் நாடு முழுவதும் விரைவாக நடைபெறுகின்றன. கடந்த 12 மாதங்களில் மொத்தம் 150 பில்லியன் டாலர்கள் மதிப்புடைய 18 சுரங்க மற்றும் எரிசக்தி திட்டங்கள் கைவிடப்பட்டன அல்லது ஒத்திவைக்கப்பட்டன. சுரங்க மற்றும் கட்டமைப்புத் துறையில் கீழ்நோக்கிய சரிவு, முக்கிய பங்கு குறியீடு கிட்டத்தட்ட 9% குறைந்துவிட்ட நிலையில் சொத்துக்கள் மற்றும் பங்குச் சந்தைக் குமிழிகளை வெடிக்கச் செய்யும் அச்சுறுத்தலைக் கொண்டுள்ளது. அதாவது 135 பில்லியன் டாலர்கள் மே மாத நடுப்பகுதியில் இருந்து சரிந்துவிட்டது. ஆஸ்திரேலிய டாலர் மற்ற நாணயங்களுடன் ஒப்பிடுகையில் மதிப்பில் சரிகிறது. எரிபொருள் மற்றும் உழைக்கும் மக்கள் நம்பியுள்ள பல இறக்குமதிப் பொருட்களின் விலைகளை உயர்த்திவிட்டது.
வெடிப்புத்தன்மை உடைய சமூக எழுச்சிகள் எதிர்பார்க்கப்படுகையிலும் மற்றும் வர்க்கப் போராட்டத்தின் ஒரு புதிய காலகட்டத்திலும் ரூட் அதிகாரத்திற்கு மீண்டும் வந்துள்ளார்.
அவரை பதவியிலிருத்தியதன் உடனடி நோக்கம் தொழிற் கட்சி அப்படியே சரிந்துவிடுவதை தடுத்தல் ஆகும். ஜூலியா கில்லார்ட்டின் தலைமையில், கட்சி இந்த ஆண்டு நடக்கவிருக்கும் கூட்டாட்சித் தேர்தலில் முன்னோடியில்லாத தோல்வியை சந்திக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. ரூட்டை பதவியிலிருந்து அகற்றும் ஜனநாயக விரோதச் செயலில் அவர் கொண்டிருந்த பங்கினால், கில்லார்ட்டுக்கு எதிராக மக்கள் விரோதப் போக்கு தீவிரமாயும் பரந்தும் உள்ளது. இந்தப் பின்விளைவை ஆட்சி மாற்றத்தின் பின்னணியில் இருந்தவர்கள் எதிர்பார்க்கத் தவறிவிட்டனர். இது தொழிற் கட்சியை பாராளுமன்றத்தின் பின்வாங்கில் இருக்கும் ஒரு சிறிய, ஆழ்ந்த பிளவுற்ற குழுவாக மாற்றிவிட்டது.
ஆஸ்திரேலிய பெருநிறுவன உயரடுக்கு, தொழிற் கட்சியின் உள்வெடிப்பை வர்க்கப் போராட்டத்தை அடக்குவதற்கும் மற்றும் அதன் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் சீற்றம் மற்றும் விரோதப் போக்கு ஆகிய ஆபத்து பாராளுமன்றத்திற்குப் புறம்பான வடிவங்களை எடுப்பதை தடுக்கும் மிக முக்கியமான அமைப்பு என்பது ஆபத்தில் உள்ளது எனக்கருதுகின்றது. சிக்கன நடவடிக்கைகளுக்கான மாற்றத்தை கில்லார்ட் ஆரம்பித்து, ஆழ்ந்த செலவுக் குறைப்புக்கள், ஒற்றைப் பெற்றோர்களை இலக்கு கொள்ளும் செயல்கள், வேலையற்றோர் இன்னும் சமூகநலன்களை பெறுவோரை இலக்கு வைக்கும் நடவடிக்கைகள் ஆகியவற்றை நீண்டகால வரவு-செலவுத் திட்ட வெட்டில் கொண்டுவந்தார். ஆனால் உயரடுக்கு ஐரோப்பிய வகையிலான சமூக எதிர்ப்புரட்சியைத்தான் கோருகிறது. அது பொதுக் கல்வித் துறை, சுகாதாரப் பாதுகாப்பு, பொதுநல இன்னும் பல அடிப்படை சேவைகளிலும் சமூக உள்கட்டுமானத்திலும் நிரந்தர, பெரும்வெட்டுக்கள் தேவை எனக்கோருகிறது.
சிறியளவேனும் மக்கள் ஆதரவைக் கொண்டுள்ள தொழிற் கட்சி அரசியல்வாதியாக ரூட்தான் உள்ளார். இதற்குக் காரணம் ஜனநாயக விரோத ஆட்சி சதியால் அவர் பாதிக்கப்பட்டதுதான். இதன் விளைவாக அவர், டஜன் கணக்கான தொழிற்கட்சி அரசியல்வாதிகளின் தொழில்வாழ்க்கையை பாதுகாக்க கூடியதும் மற்றும் தொழிற் கட்சி சரிவதை தடுக்கும் மற்றும் தொழிலாளர்களின் சமூக நிலைக்கு எதிராக அவர்களால் தீவிரப்படுத்தப்பட்ட தாக்குதல்களை நடைமுறைப்படுத்தக்கூடிய ஒரே நபர் என பெருநிறுவன, நிதிய உயரடுக்குகளால் கருதப்படுகிறார்.
பதவியில் மீண்டும் இருத்தப்பட்டபின் கொடுத்த முதல் உரையில், ரூட் குறிப்பாக முழு பாராளுமன்ற முறையின் மீதும் வெறுப்பு கொண்டிருக்கும் இளைஞர்களை மீண்டும் தம்மை நோக்கி இழுப்பதற்கான தேவையை வலியுறுத்தியுள்ளார். ஆஸ்திரேலியாவில் சமூக உறுதிப்பாடு இருப்பதாக மேலோட்டமாக தெரிவதற்கு கீழே பார்த்தால் உண்மையில் வர்க்க அழுத்தங்கள் விரைவில் வெடிக்கும் கட்டத்தை அடையும் என்பதை அவர் நன்கு அறிவார். 2011ல் எகிப்திலும் துனிசியாவிலும் நடந்தது போல், இந்த ஆண்டு துருக்கியிலும் பிரேசிலிலும் நடந்தது போல், வெகுஜன அமைதியின்மை தீடீரென எதிர்பாராத வடிவங்களில் வெடித்து எழும். எதிர்வரவிருக்கும் சமூக வெடிப்புக்களை பாராளுமன்ற கட்டமைப்பிற்குள் திசைதிருப்பும் ஒரு அவநம்பிக்கையான முயற்சியாக ரூட் பதவியில் இருத்தப்பட்டுள்ளார்.
வாஷிங்டனைப் பொறுத்தவரை ஆஸ்திரேலியாவில் இருகட்சி முறையைத் தக்கவைப்பது மூலோபாய முக்கியத்துவத்தை கொண்டுள்ளது. கடந்த 70 ஆண்டுகளில் அமெரிக்கா, அதுவும் தொழிற் கட்சி பிரதம மந்திரி ஜோன் கர்ட்டின் 1941ல் பிரித்தானிய பேரரசில் இருந்து வாஷிங்டனுக்கு மூலோபாய மாற்றம் ஏற்படுத்தியதில் இருந்து, கணிசமான வளங்களை தொழிற் கட்சி மீது முதலீடு செய்துள்ளது. அமெரிக்கத் தூதரகமும் CIA அதிகாரிகளும் பல தசாப்தங்களாக தொழிற் கட்சிக்குள்ளும் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்குள்ளும் தமக்கு ஆதரவான பரந்த வலைப் பின்னலை உருவாக்கியுள்ளனர். ஒபாமா நிர்வாகத்தினுள் ரூட் பற்றிய கவலைகள் இருந்தாலும், தொழிற் கட்சியின் சரிவு அமெரிக்க ஆஸ்திரேலிய கூட்டினை திக்குத்தெரியாத நிலைக்குத் தள்ளும் என்பதை அது சந்தேகத்திற்கு இடமின்றி அறிந்துள்ளது.
உண்மையில், 2010ல் ஆட்சி கவிழ்ப்புக்கு வழியமைத்த தொழிற் கட்சிக்குள் இருக்கும் இதே அமெரிக்க “பாதுகாப்பான ஆதரவானவர்கள்தான்” இந்த வாரம் ரூட் மீண்டும் பதவியில் இருத்தப்படவும் காரணமாக உள்ளனர்.
ஆயினும்கூட தொழிற் கட்சிக்குள்ளும், அதேபோல் எதிர்த்தரப்பு லிபரல்-தேசியவாத கூட்டணியினுள்ளும் ஆழ்ந்த பிளவுகள் தொடர்கின்றன. அமெரிக்க வெளியுறவுக் கொள்கை நடைமுறையின் கணிசமான பிரிவுகளின் ஆதரவை ரூட் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். அவை ஒபாமாவின் “முன்னுரிமை கொடுக்கும்” நிலைப்பாட்டை எதிர்த்து பெய்ஜிங்குடன் இன்னும் சமரச அணுகுமுறை தேவையென விரும்புகிறது. முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஹென்றி கிசிஞ்சர் இப்பிரிவில் முக்கிய நபராவார். சமீபத்திய ஆண்டுகளில் ரூட்டுடன் நெருக்கமான உறவுகளை வளர்த்துள்ளார். இருவரும் இன்று பெய்ஜிங்கில் அரசாங்க ஆதரவில் நடக்கும் வெளிநாட்டுக் கொள்கை அரங்கில் பேச உள்ளனர். ஒபாமாவின் பொறுப்பற்ற, ஆத்திரமூட்டும் நிலைப்பாடு சீனா மீது இருப்பதால் அச்சமடையும் ஆஸ்திரேலிய ஆளும் உயரடுக்கின் பிரிவுகளின் ஆதரவை ரூட் கொண்டுள்ளார். அத்தகைய நிலை ஆஸ்திரேலிய முதலாளித்துவத்தின் பெய்ஜிங் உடனான முக்கிய பொருளாதார நடவடிக்கைகளை தடைக்கு உட்படுத்தும் என அவை அஞ்சுகின்றன.
தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை எதிர்கொண்டிருக்கும் அவசர பணி, இந்த நிலைமையில் தலையிட்டு போர், இராணுவ வாதத்திற்கும், சிக்கன நடவடிக்கைகள், ஜனநாயக உரிமைகள் தாக்கப்படுவது ஆகியவற்றிற்கும் எதிராக தங்கள் சுயாதீன வர்க்க நலன்களை பாதுகாத்து கொள்வதுதான். இதற்கு அவசியமாக உள்ளது, தொழிற் கட்சிக்கும் முழு பாராளுமன்ற அமைப்பு முறைக்கும் எதிரான தற்பொழுது கொதிக்கும் அந்நியப்படுதல் மற்றும் வெறுப்பை முதலாளித்துவத்தின் இலாபமுறைக்கு எதிராக அரசியல் நனவு கொண்ட இயக்கமாக உருவாக்கும் திறனுடைய புரட்சிகரக் கட்சியைக் கட்டமைப்பதுதான்.
அக் கட்சி, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஆஸ்திரேலிய பிரிவான சோசலிச சமத்துவக் கட்சியாகும். தொழிலாளர்கள், மாணவர்கள், இளைஞர்களை சோசலிச சமத்துவக் கட்சியுடன் தொடர்பு கொண்டு எங்கள் 2013 தேசிய தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபடும்படி வலியுறுத்துகிறோம்.
No comments:
Post a Comment